Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2020

சுரங்கத் திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லை... மத்திய அரசின் முடிவு சரியா?

நிலக்கரி சுரங்கங்களுடைய உற்பத்தித் திறனைப் பொறுத்து, அவற்றை அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வகையில் நிலக்கரி அமைச்சகம் விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. நிலக்கரிச் சுரங்கங்கள் தம்முடைய மொத்த உற்பத்தியில் 40 சதவிகிதம் அளவுக்கு மட்டும் அதிகப்படுத்தினால், அதற்குப் பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் போகும்போது கருத்து கேட்டால் போதுமானது என்று விதிமுறைகளை மாற்றியுள்ளது. இப்போது இதே பாதையைப் பின்பற்றி, சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சகமும் நிலக்கரியற்ற இதர சுரங்கத் திட்டங்களுக்கு இதேபோல் மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழு, மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்திடம், இந்த விலக்கு அளிக்கும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்குமாறும் அதன் பிறகே இதுகுறித்து முடிவு செய்வோமென்றும் கூறியுள்ளது. இருப்பினும், நிலக்கரி அமைச்சகத்தின் விதிமுறை மாற்றத்துக்கு அனுமதி கிடைத்தது எப்படி சர்ச்சைக்குள்ளாகி, சட்டபூர்வமாகக் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றதோ, அதேபோலத்தான் இதுவும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

நிலக்கரிச் சுரங்கம்

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ``நிலக்கரிச் சுரங்கங்களுக்கு எப்படி விலக்கு அளிக்கப்பட்டதோ அதைப் போலவே நிலக்கரியற்ற இதர சுரங்கங்களுக்கும் அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் நிலக்கரிச் சுரங்கத் திட்டங்களுக்கான ஒரு வல்லுநர் மதிப்பீட்டுக் குழு சந்திப்பின்போது, ``இரண்டு மூன்று கட்டங்களாக 40 சதவிகிதம் வரை நிலக்கரிச் சுரங்கத்தை விரிவுபடுத்துகின்ற, சுரங்க விரிவாக்கும் திட்டங்களுக்குச் சூழலியல் அனுமதி வழங்கும் திட்டத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கத் தேவையில்லை” என்று பரிந்துரைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம், நிலப்பரப்பை விரிவாக்காமல் நிலக்கரிச் சுரங்க உற்பத்தியை மட்டும் 40 சதவிகிதம் வரை விரிவாக்க மக்கள் கருத்து கேட்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டது. கடந்த ஜூன் 12-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தின்போது, ``நிலக்கரி அமைச்சகத்திற்கு விலக்கு அளிப்பதும் இதர சுரங்கத் திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதும் ஒன்று கிடையாது” என்று வல்லுநர் குழுவிடம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியது. பின்னர் இதுகுறித்து விரிவாக அலசிப் பார்க்க, வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவிடம் இந்தத் திட்டம் ஒப்படைக்கப்பட்டது.

மார்பிள் குவாரி, ஜெய்ப்பூர்

நிலக்கரிச் சுரங்கமோ, இதர சுரங்கங்களோ, அவற்றுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கும்போது, அதனால் பாதிக்கப்படக்கூடிய, அங்கு வாழ்கின்ற மக்களிடம் கருத்து கேட்கவேண்டியது அவசியம். இத்தகைய கருத்துக் கேட்புக் கூட்டங்கள், திட்டத்தை முன்னெடுக்கவுள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் அதிகாரிகளும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் கலந்துகொண்டு நடத்துவது. இதில் பொதுமக்கள் எழுப்பக்கூடிய கேள்விகள், முரண்பாடுகள் அனைத்துமே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழுவால் பதிவு செய்யப்படும். பின்னர், அந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் முன்வைத்த பிரச்னைகள் விவாதிக்கப்படும்.

சுரங்க அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் கனிம வளங்கள் மிகப்பெரிய அளவில் குவிந்துள்ளன. நம் நாட்டுப் பொருளாதாரத்தில் அது குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்தியாவில், நான்கு வகையான எரிவாயு, 10 வகையான உலோகங்கள், 47 வகையான உலோகமல்லாத மற்ற கனிம வகைகள், 3 அணுசக்தி சார் கனிமங்கள், 23 வகையான இதர சிறு சிறு கனிமங்கள் என்று சுமார் 87 வகையான கனிம வளங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுரங்க அமைச்சகத்தின் அதிகாரபூர்வத் தகவல்களின்படி, கடந்த 60 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் கனிம வள உற்பத்தி அதிகரித்துள்ளது. 2015-16 ஆண்டில் 282,966 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சுரங்க வேலைகள்

``இப்படிப்பட்ட மிகப்பெரிய இயற்கை வள உற்பத்தியை மேற்கொள்ளும் ஒரு துறையில், அதனால் ஏற்படக்கூடிய சூழலியல் பின்விளைவுகளைப் பற்றிய கவலையின்றி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்று கூறுவது மக்களாட்சி அரசு முறையான இந்தியாவில் சட்டவிரோதமானது” என்று சூழலியல் ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர். இது இந்தியா முழுக்க அமைந்துள்ள சுரங்கப் பகுதிகளைச் சுற்றி வாழ்கின்ற பெரும்பான்மையான மக்கள் சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். அதோடு நிற்காமல், மாசுபாடுகள் அதிகரிப்பதோடு, நாட்டின் காடுசார் வளங்களையும் பல்லுயிர்ச்சூழலையும்கூட இது பெரிய அளவில் பாதிக்கும். இப்போது நிலவும் கட்டுப்பாடுகளைக்கூட மதிக்காமல், விதிகளை மீறிச் செயல்படுகின்ற, சூழலுக்குக் கேடு விளைவிக்கின்ற, சூழலியல் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்குகின்ற சுரங்கங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன.

கேரளாவில் மட்டுமே 5,924 குவாரிகள் உள்ளன. மாதவ் காட்கில் தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மட்டுமே 3,332 குவாரிகள் அமைந்துள்ளன. அதாவது, மேற்குத்தொடர்ச்சி மலையின் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளுக்குள்தான் மொத்த குவாரிகளில் 56 சதவிகிதம் அமைந்துள்ளன. கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கவலப்பாறா என்ற பகுதியிலேயே ஐந்து கிலோமீட்டர் பரப்பளவுக்குள் 27 குவாரிகள் செயல்படுகின்றன.

கேரளாவில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அடுத்தடுத்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரிடர்கள் ஏற்பட அவையே முக்கிய காரணம் என்று அம்மாநிலச் சூழலியலாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். திறந்தவெளிச் சுரங்கத் தொழிலாக அறியப்படும் குவாரிகள் ஓர் உதாரணம் மட்டுமே. இவ்வளவு ஆபத்தான கனிமவள உற்பத்தியால் ஏற்படக்கூடிய இந்த பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடிய மக்களிடம் கருத்து கேட்கவேண்டியது அவசியம் என்பதால்தான், இதை மேற்கொள்ளும் முன்னர் செய்யப்படும் சூழலியல் தாக்க மதிப்பீட்டில் கருத்துக் கேட்பு என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தின் வலிமையைக் குறைப்பது நன்மையைவிட தீமைகளையே கொண்டுவரும்.

``நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையாள்வதில், மக்களுடைய பங்கெடுப்பு இருக்கும்போதுதான் அதைச் சிறப்பாகக் கையாள முடியும். அதற்குத் தேசியளவில், பொதுத்துறை நிறுவனங்கள் வைத்துள்ள நாட்டின் சூழலியல் தகவல்கள் அனைத்தும் அனைவரும் அணுகும் விதத்தில் இருக்க வேண்டும். அதில் மிகவும் ஆபத்தான தொழில்துறைகளுக்கும்கூட விலக்கு அளிக்கப்படக் கூடாது. தகவல்கள் மட்டுமன்றி, எடுக்கப்படும் முடிவுகளிலும் மக்களுடைய பங்கு இருக்க வேண்டும். நாட்டின் நடக்கின்ற அனைத்து பொதுத்துறை நடவடிக்கைகள் மற்றும் சூழலியலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்” என்கிறது இந்தியா கையெழுத்திட்டுள்ள 1992-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச ரியோ உடன்படிக்கை.

இப்போது மக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை என்று சுரங்கத்துறை எடுத்துள்ள இந்த முடிவு, இந்தியா கையெழுத்திட்டுள்ள சர்வதேச ரியோ உடன்படிக்கைக்கு விரோதமானது. இதனால் நாட்டின் சூழலியல் சமநிலையில், மக்களுடைய வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்குமென்று சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

இரும்புத்தாது வெட்டியெடுக்கும் சுரங்கம்

நிலக்கரிச் சுரங்கத் துறை இந்த முடிவுக்கு வந்தபோதே, அதை எதிர்த்துப் பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இப்போது நிலக்கரியற்ற இதர சுரங்கங்களும் இதேபோலக் கருத்துக் கேட்புக்கு விலக்கு அளித்தால், அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்கும். நாடு முழுக்கச் சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு கிளம்பும்.

குவாரிகள் குவிந்திருக்கும் கேரளம், இரும்புத் தாது வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் அமைந்துள்ள கோவா போன்ற மாநிலங்கள் இதற்கு மிகப்பெரிய உதாரணங்கள். சட்டவிரோத சுரங்கம், குவாரி போன்றவற்றால் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளம், நிலச்சரிவு என்று பல்வேறு சேதங்களை இந்த மாநிலங்கள் சந்திக்கின்றன. இவற்றைப் போலவே வடகிழக்கு மாநிலங்களும் தொடர்ந்து பேரிடர்களைச் சந்திப்பது வாடிக்கையாகிவிட்டது. ஏற்படுகின்ற பேரழிவுகளிலிருந்து பாடம் கற்காமல், அரசாங்கம் தொடர்ந்து சூழலியல் சீரழிவுகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்துக்கொண்டே போனால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/ministry-of-mines-plans-to-omit-public-hearing-for-expansion-of-non-coal-mining-projects

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக