என்ன முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் கண்டாலும் இந்தியாவில் அழியாத கரையாக இருந்துவருகிறது சாதியமும் அதன் பெயரில் நடக்கும் ஒடுக்குமுறைகளும். இன்று உலகமே ஒற்றை 'குளோபல் வில்லேஜ்'தான் எனப் பெருமையாக மார்தட்டிக்கொள்கிறோம். மொழிகள், இனங்கள் கடந்து மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருப்பதாக நம்மை நாமே நம்ப வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலவரம் வேறு மாதிரியாகத்தான் உள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணம், பல வருடங்களாகக் கறுப்பின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க மக்களை ஒன்றுதிரட்டியது. ஆனால், ’நிறத்தின் அடிப்படையில் மட்டும் ஒடுக்குமுறை நடக்காது... அதற்குப் பல வடிவங்கள் இருக்கின்றன’ என அமெரிக்காவுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றனர் அங்கு வாழும் சில இந்தியர்கள்.
ஆம், சாதிய பாகுபாட்டுக்காகப் பிரபல டெக் நிறுவனமான சிஸ்கோ மீது வழக்கு தொடுத்துள்ளது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று (California’s Department of Fair Employment and Housing). சிலிக்கான்வேலி என அழைக்கப்படும் சான் ஜோஸ் நகரில் இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் முக்கிய கிளை ஒன்றில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தியர் ஒருவரைச் சாதிய பாகுபாடுகாட்டி இரு உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே ஒடுக்கியதாகவும், இந்தச் செயலுக்கு சிஸ்கோ நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடந்துகொண்டதாகவும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர், ரமண கொப்பல்லா எனத் தெரிவிக்கின்றன அமெரிக்க ஊடகங்கள். பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் சான் ஜோஸ் நகரத்தில் இருக்கும் சிஸ்கோ தலைமையகத்தில் 2015 முதல் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read: கொரானா காலத்திலும் குறையாத சாதிய கொலைகள்..! அதிர்ச்சி தரும் ஆய்வு
இதுகுறித்து தகவல் அளித்துள்ள Reuters ஊடகம், "பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே சுந்தரின் மீது சிஸ்கோவின் மனித வள மேலாண்மை (HR) குழுவிடம் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதமே புகார் கொடுத்திருக்கிறார். பிற ஊழியர்களிடம் தன்னை ஒரு தலித் எனக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக அந்தப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு புகார் அளிக்கப்பட்டதை அறிந்த சுந்தர் இன்னும் அதிகமாக அவரை ஒடுக்க ஆரம்பித்திருக்கிறார், இடையூறுகள் கொடுத்திருக்கிறார். ஆனால், நேரடியாகச் சாதிய பாகுபாட்டைத் தடுக்கும் சட்டங்கள் அமெரிக்காவில் இல்லை என சிஸ்கோ இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. இதனால் பிரச்னை தொடர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு ஊதிய மற்றும் பதவி உயர்வுகள் வேண்டுமென்றே மறுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தது.
’மத, இன பாகுபாடு போல சாதிய அமைப்பின் பெயரில் ஒடுக்குமுறை நடக்கிறது’ என வழக்கு தொடர்ந்துள்ள California’s Department of Fair Employment and Housing அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. சிலிகான்வேலியில் உள்ள மற்ற டெக் நிறுவனங்களைப் போல சிஸ்கோவிலும் பல இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இப்படியான சாதிய பாகுபாடு அமெரிக்காவில் தொடர்ந்து நடந்துவருவதாகத் தெரிவிக்கிறது அமெரிக்க மக்கள் சம உரிமை அமைப்பான 'ஈக்வாலிடி லேப்ஸ்'.
இது குறித்து சிஸ்கோ கூறுவது என்ன?
சிஸ்கோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராபின் ப்ளூம், “நாங்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் பணிச்சூழலை உண்டாக்குவதில் சிஸ்கோ உறுதியாக இருக்கிறது” என்று தெரிவித்தார். இதுவரை இது தொடர்பாகச் சுந்தரும், ரமண கொப்பல்லாவும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்தக் சம்பவம் சமூக வலைதளங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் அதுவும் ஒரு மிக முக்கிய நிறுவனம் ஒன்றில் இப்படியான ஒடுக்குமுறை தொடர்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/social-affairs/international/caste-discrimination-reaches-silicon-valley-case-filed-on-cisco
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக