தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்த அணைக்கரை முத்து என்ற 75 வயது விவசாயி, தன் வீட்டின் பின் பகுதியில் சுமார் இரண்டரை ஏக்கரில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வந்தார். அதில் காய்கறிகளைப் பயிரிட்டிருந்தார்.
தோட்டத்துக்குள் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் தோட்டத்தைச் சுற்றிலும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருக்கிறார். இது குறித்து கடையம் வனச்சரக அதிகாரிக்குப் புகார் வந்திருக்கிறது.
Also Read: `அடித்துப் பணம் பறிக்கிறார்கள்!’ - போலீஸ், வனத்துறை மீது பாயும் ஜவ்வாது மலைவாழ் மக்கள்
சட்டவிரோத மின்வேலி தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை அழைத்துச் சென்று நேரில் ஆய்வு செய்த வனத்துறையினர் இரவு 11 மணிக்கு விவசாயி அணைக்கரை முத்துவை விசாரணைக்காக வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
வனச்சரக அலுவலகத்தில் இரவில் விசாரணை நடத்தப்பட்டபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்துவதற்கு முன்வந்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் வனத்துறை ஜீப் மூலம் கடையம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அணைக்கரை முத்துவின் உடலில் பல்ஸ் குறைந்திருந்ததால் உடனடியாகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கிருந்து தென்காசி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
வனத்துறை அதிகாரிகள் விசாரணையின்போது அடித்ததாலே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அதனால் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதியக் கோரி, உடலை வாங்க மறுத்து மூன்றாவது நாளாகப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அணைக்கரை முத்து மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் மனைவி பாலம்மாள் சார்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த அணைக்கரை முத்து உயிரிழப்பு தொடர்பாக அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார். இன்று வனத்துறை அலுவலகத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது, ``அணைக்கரை முத்துவை இரவில் அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன? அவரிடம் விசாரணை நடத்தியது யார்? அவர் என்ன தெரிவித்தார்? உயிரிழப்புக்குக் காரணம் என்ன?” என்பது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுள்ளார்.
விவசாயி மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவதுடன் அவரது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூன்றாவது நாளாக உடல் வாங்கப்படாததால் தென்காசி மாவட்டத்தில் பதற்றம் நீடிக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/judicial-magistrate-enquiry-about-the-suspicious-death-of-farmer-in-kadayam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக