Ad

திங்கள், 6 ஜூலை, 2020

உங்கள் குழந்தைகளின் கரங்களில் மொபைல் போன் தரும்முன் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

இன்றைய கொரோனா சூழலில், பெரும்பாலான தொழில்கள் முடிந்தவரை இணையம் சார்ந்த தொழில்நுட்பங்கள் வழியாக இயங்கப் பழகிக்கொண்டிருக்கின்றன. கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் திறக்க இன்னும் பல மாதங்கள் ஆகக்கூடும்.

இப்படி ஊரடங்கு நீடித்துக்கொண்டேயிருப்பதால், குழந்தைகளை வீட்டில் படிக்கவும் வைக்க முடியாமல், எங்கேஜ் செய்யவும் முடியாமல் பெற்றோர் திண்டாடுகிறார்கள். குழந்தைகளோ, நீட்டிக்கப்பட்ட ஆண்டு விடுமுறை என செல்போனும் கையுமாக கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

இணையம் | Internet

இச்சூழலில், தலையாய பிரச்னைகளில் ஒன்று, `இணைய பாதுகாப்பு’. நாம் அன்றாடம் உபயோகிக்கும் மொபைல், கம்ப்யூட்டர், ஐபேடுகள் மூலம் சமூக ஊடங்களிலோ, இணைய தளங்களிலோ நம்மைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பதிவிடுகிறோம். `அலாவுதீனும் அற்புத விளக்கும்' கதையில் வரும் பிரமிக்கவைக்கும் பூதம் மாதிரிதான் இன்றைய `இன்டர்நெட்’. எந்த வினாவிற்கும் பதில் சொல்லும்; வண்ண வண்ண மாயாஜாலம் காட்டும்; அம்பியும், அந்நியனும் போல நல்லவையும் தீயவையும் சரிசமமாகக் கலந்தது.

ஒருவருடைய ஃபேஸ்புக்கில் நண்பராக இணைந்தாலே போதும். அந்த நண்பரின் பிறந்த ஊர், பிறந்த வருடம், பிறந்த நாள், படிப்பு, பணி விவரம், பின்புலம், பழக்க வழக்கங்கள், அவருடைய பதிவுகள் மூலம் அவரின் மனநிலை என தனிநபர் விவரங்கள் அனைத்தும் உங்கள் கைகளில்.

இப்படி திறந்த இணையத்தில் உலா வரும் தனி நபர் தகவல்களும் படங்களும் `Hackers' எனப்படும் இணைய ஊடுருவிகள் கைகளில் கிடைப்பதால், பல வழிகளில் அந்தத் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

அதிக அளவில் நடக்கின்ற தகவல் திருட்டுகள் `Phishing Attacks' என்பதன் மூலமாக நடைபெறுகிறது. ஹேக்கர்கள் உங்களுக்கு சில குறிப்பிட்ட இமெயில்களில் லிங்க், அட்டாச்மென்ட் போன்றவற்றை உள்சேர்த்து, அதை கிளிக் செய்யவோ பதிவிறக்கம் செய்யவோ அல்லது கடவுச் சொற்களை பதிவிடும்படியோ அனுப்புவர். இத்தகைய இமெயிலில், மால்வேர் புகுத்தப்பெற்று (குறிப்பிட்ட செயலை செய்யும்படி எழுதப் பெற்ற மென்பொருள் ப்ரோக்ராம்) உங்களுடைய தகவல்களைத் திருடுவர்.

இப்படி நம் விவரங்களுக்கே இந்த நிலைமை என்றால், நம் குழந்தைகள் எதிர்நோக்கக்கூடிய இணைய சவால்களைப் பற்றி நிச்சயம் பேசியாக வேண்டும்.

Representational Image

குழந்தைகளின் கைகளில் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் மூலமாக இணையத்தை உபயோகப்படுத்த அனுமதிக்கும்போது, ஒரு பெரிய ரிஸ்க்கை எடுக்கிறோம். தங்கள் குழந்தைகள் Techies ஆக இருந்தால்தான் இன்றைய காலகட்டத்தில் மற்ற குழந்தைகளுடன் போட்டிபோட முடியும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதை ஒரு சில பெற்றோர் பெருமையாக நினைக்கிறார்கள். இதுதான், ஸ்மார்ட் போன்களைக் குழந்தைகள் அதீதமாக கட்டுப்பாடின்றி உபயோகிக்க முக்கியக் காரணம்.

``என் பிள்ளைகள் என்னுடைய சொந்த மொபைல் அல்லது கம்ப்யூட்டரைத்தான் உபயோகிக்கிறாங்க. இதனால் என்ன பிரச்னை" என்று கேட்பவர்களுக்கு, இந்த உதாரணம்.

ஒரு ஐடி நிறுவனத்தில் மூத்த அலுவலராகப் பணிபுரியும் பிரசாத், அவருடைய 15 வயது மகளுக்கு புதிய ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுத்தார். முதன்முதலில் தனக்கென ஒரு மொபைல் போன் வந்தாச்சு என்று றெக்கை முளைத்த பறவையைப் போல் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தாள் அவள். வேகமாக, புதிதாக ஒரு இ-மெயில் ஐடியும் நண்பர்களிடையே இணைய ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்டையும் உருவாக்கிக்கொண்டாள் .

நாட்கள் பல சென்றன. ஒரு நாள் அவளுக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து இ-மெயில் வந்தது. அந்த நபரிடம் பேசத் தொடங்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக நட்பு, வாட்ஸ்அப் சாட் வரை சென்றது. அந்த நபர், இவளின் தனிப்பட்ட விவரங்களையும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்களையும் சேகரித்தான்.

ஒரு நாள், அவள் இ-மெயில் ஐடி-யில் இருந்து எல்லா நண்பர்களுக்கும் அநாகரிகமாக, முகம்சுளிக்கும் வகையில் ஒரு மின்னஞ்சல் சென்றிருப்பதைத் தன் நெருங்கிய தோழியின் மூலமாக அறிந்தாள். பதறிய அவள், தன் பெற்றோரிடம் நடந்தவற்றைத் தெரிவித்தாள்.

அவளுடைய செல்போனை ஆராய்ந்தபோது, பெற்றோருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவளுடைய செல்போனில் தேவையற்ற சாட் செயலிகள் (Messaging and Video Chat Applications) உபயோகித்தது தெரியவந்தது.

இதில் யாரைக் குற்றம் சொல்வது? அத்தியாவசியம் இன்றி கைபேசியை வாங்கிக்கொடுத்த பெற்றோரையா அல்லது சிறுமியின் அறியாமையையா?

இணையத்தில் ஒருவரைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது, படம் அல்லது கருத்துகளைப் பகிர்வது, ஏதேனும் ஒரு வகையில் அச்சுறுத்துவது, தொடர்ந்து கண்காணிப்பது... இதெல்லாம்தான் `Cyber Bullying’ என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிக்கும் டீனேஜர்ஸ் (13 முதல் 19 வயது உள்ளிட்டோர்) ஒன்பது சதவிகிதம் இணைய அச்சுறுத்தலுக்கு (Cyber Bullying) ஆளாகிறார்கள் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் குழந்தைகளிடம் தொழில்நுட்ப சாதனங்களைக் கொடுக்கும் முன், சில முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மொபைல் , கம்ப்யூட்டர் போன்றவற்றின் பாதுகாப்பு பற்றி சிறிதளவேனும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், சமூக ஊடங்கங்களில் பயன்படுத்தப்படும் கடவுச் சொல் பாதுகாப்பு, பிரைவசி செட்டிங்ஸ் (Privacy Settings), Parental Controls போன்றவற்றைப் பற்றி பெற்றோர் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தைகளிடம் இணைய பாதுகாப்பு பற்றி அவர்களுக்குப் புரியும் விதத்தில் விவாதியுங்கள். அவர்களுக்கு இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடங்கங்களின் கடவுச்சொற்களை எப்படி கடினமாக அமைப்பது என்று சொல்லிக்கொடுங்கள். தேவையில்லாமல் அவர்கள் அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

உங்கள் குழந்தைகளின் கைகளில் மொபைல் போனைக் கொடுப்பதற்கு முன், தேவையற்ற செயலிகளை Uninstall செய்யவும். ஆன்டிவைரஸ் மென்பொருள் உள்ளதா என்று பார்க்கவும். `Parental control' செயலிகள் மூலம் செல்போனை உபயோகிக்கும் நேரத்தை லாக் செய்யவோ, தேவையற்ற விஷயங்களைத் தடுக்கவோ (Blacklist) முடியும்.

பெற்றோர், குழந்தைகளின் இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டுகளின் கடவுச்சொற்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இது, அவர்களை சந்தேகப்படுவதற்கோ வேவு பார்க்கவோ அல்ல என்பதையும், பாதுகாப்பான பாதையில் செல்வதை உறுதிப்படுத்துவதற்கே என்பதையும் சொல்லி, குழந்தைகளுக்குப் புரியவையுங்கள். அதன்படி நடந்துகொள்ளவும் செய்யுங்கள். கடவுச்சொல் இருக்கிறதே என எந்நேரமும் அவர்களைக் கட்டுப்படுத்த நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால், எதிர்விளைவுகள்தான் அதிகமாக இருக்கும்.

ஹேக்கர் | Hacker

நிறைய குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பல ஆன்லைன் விளையாட்டுகள், குழந்தைகளை விபரீதங்களில் கொண்டு செலுத்துகின்றன.

எந்நேரமும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள் மற்றவர்களுடன் பழகுவது குறைவதும், தனிமை விரும்பியாக மாறுவதும் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. எனவே, தொழில்நுட்பம் பெற்றோருக்கு பல புதிய பொறுப்புகளை உருவாக்கியிருக்கிறது.

பெற்றோரே! இணையத்தில் அவர்கள் எதைப் பதிவுசெய்தாலும், அது அவர்களின் எண்ண ஓட்டத்தையும், சுய ஒழுக்கத்தையும் கண்ணாடி பிம்பமாய் எதிரொலிக்கும் என்றும், அந்த கருத்துக்கள் எதுவாயினும் அது நிரந்தரமானவை, விலைமதிப்பற்றவை என்றும் உங்கள் குழந்தைகளுக்கு ஆழமாகப் புரியவையுங்கள். .

-இ.எஸ்.ஆர் செந்தில் சுப்பிரமணியம்



source https://www.vikatan.com/technology/tech-news/how-to-safeguard-your-children-from-the-dark-side-of-internet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக