Ad

திங்கள், 6 ஜூலை, 2020

கரூர்: சைல்டு ஸ்பெஷலிஸ்ட்; தனி மருத்துவமனை! - அதிர்ச்சி கொடுத்த போலி மருத்துவர்

`நான் எம்.பி.பி.எஸ் முடித்தவன். என்னை கைது செய்தால், இந்திய மருத்துவ உலகமே கொதிக்கும். சி.எம்-கிட்ட இருந்து போன் வரும்' என்று உதார்விட்ட போலி மருத்துவரை, தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

சாம்ராட் மருத்துவமனை

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு புன்னம்சத்திரம் பகுதியைச் சேர்ந்த, ஊராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

ஆனால், அதற்கு முன்பு 10 நாள்களாக கடும் சளி மற்றும் காய்ச்சலால் தவித்த அவர், நொய்யல் பகுதியில் 30 வருடங்களாக போலி மருத்துவராகச் செயல்பட்டு வந்த சண்முகம் என்பவரிடம், சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார்.

குளித்தலை அண்ணா நகர்

ஆனால், காய்ச்சல் குறையாமல் அதிகரிக்க, பயந்துபோன அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். மூன்று நாள்கள் சிகிச்சை கொடுத்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. போலி மருத்துவரிடம் அவர் சிகிச்சை பெற்றதுதான், இறப்புக்குப் பிரதான காரணமாக இருந்தது.

Also Read: கொரோனா: `ஆமாம், நான்தான் ஊசி போட்டேன்!' -போலி மருத்துவரால் கரூரில் நேர்ந்த துயரம்

'கொரோனா வைரஸ் தொற்றியிருந்தாலும், அதை சரி செய்ய அரசு மருத்துவமனைகளுக்கு வராமல், போலி மருத்துவர்களை நோயாளிகள் நாடினால், நிலைமை விபரீதமாகிவிடும்' என்று சமூக ஆர்வலர்கள் அலெர்ட் செய்தனர். அதன் காரணமாக, கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து கரூர் மாவட்டம் முழுக்க செயல்பட்டு வரும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தனிப்படைகளை அமைத்தனர்.

அதில் ஒரு தனிப்படை, குளித்தலைப் பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்று போர்டு வைத்து, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் ராஜா என்பவரைக் கைது செய்துள்ளனர். குளித்தலை, அண்ணாநகர் முதல் குறுக்குத் தெருவில் சாம்ராட் என்ற பெயரில் கடந்த ஐந்து வருடங்களாக இவர் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.

சாம்ராட் மருத்துவமனை

குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, ராஜா மருத்துவம் பார்த்து வருவதாகத் தனிப்படைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே அங்கே சென்று, அவரிடம் தனிப்படையைச் சேர்ந்த போலீஸார் விசாரித்தனர். ஆனால் ராஜாவோ, 'நான் எம்.பி.பி.எஸ் படித்தவன். என்னை கைது செய்தால், இந்திய மருத்துவ உலகமே உங்களுக்கு எதிராகக் கொதிக்கும். அதையும் மீறி, கைது பண்ணினால், சி.எம்-கிட்ட இருந்து போன் வரும்' என்று ஏகத்துக்கும் உதார்விட்டிருக்கிறார். அதனால், போலீஸார் தங்களது பாணியில் விசாரணையை ஆரம்பிக்க, அதன்பிறகே தண்ணீர்பட்ட சூடான தோசைக்கல்லாக அமைதியாகி இருக்கிறார்.

ராஜாவை கைது செய்த போலீஸார், அவர்மீது வழக்கு பதிவு செய்து, அவரைச் சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இன்னொருபக்கம், இதுநாள் வரை ராஜாவிடம் வைத்தியம் பார்த்த மக்கள், பீதியில் உறைந்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/kulithalai-police-arrested-fake-doctor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக