இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,97,413 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,693 ஆகவும் உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாள்களாக கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். வைரஸ் பரவலின் பாதையை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாமல் அரசும் திணறி வருகிறது.
இந்தியாவில் மும்பை, சென்னை, டெல்லி போன்ற பெரிய மெட்ரோ நகரங்களில் ஏற்கெனவே கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. இந்தப் பட்டியலில் தப்பிப் பிழைத்த ஒரே நகரமாக இருந்தது பெங்களூருதான். ஆனால், அங்கும் சில நாள்களாக பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. பெங்களூரில் எப்போதும் இல்லாத அளவாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,235 பாசிட்டிவ் கேஸ்கள் பதிவாகின. அங்கு தொடர்ந்து நான்கு நாள்களாக வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 900-க்கும் அதிகமாகவே உள்ளது.
இதனால் கடந்த மூன்று நாள்களில் மட்டும் பெங்களூரில் பதிவாகும் பாசிட்டிவ் கேஸ்கள் 15.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மற்ற மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக உள்ளது. மூன்று நாள்களில் டெல்லியில் 2.6% பாசிட்டிவ் கேஸ்களும், சென்னையில் 2.9% மற்றும் மும்பையில் 1% கேஸ்களும் பதிவாகியுள்ளன. அதே போன்று பெங்களூரில் வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக உள்ளது.
பெங்களூரில் இதுவரை 14.7% பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். அதுவே டெல்லியில் 71.7% ஆகவும் சென்னையில் 62% மற்றும் மும்பையில் 66.1% ஆகவும் உள்ளது. பெங்களூரில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளது அம்மாநில அரசுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. கொரோனா பயத்தால் பெங்களூரில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர். இதனால் பெங்களூரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே `மக்கள் யாரும் பெங்களூரை விட்டு வெளியில் செல்ல வேண்டாம். அனைவரும் தற்போது தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்’ எனக் கர்நாடகாவின் உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read: கொரோனா :`யாரும் பெங்களூருவை விட்டுப் போகாதீங்க!’ - மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
பெங்களூரில் மட்டும் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,561 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் பெங்களூரில் மட்டும் சுமார் 50 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. "பெங்களூரில் அதிகரித்துவரும் வைரஸ் பரவல் எண்ணிக்கை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம். வைரஸைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூருக்கு மட்டும் 450 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் 10,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா மையமும் உருவாக்கப்பட்டுள்ளது” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/india/bengaluru-has-seen-increase-covid-19-cases-over-the-past-three-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக