சேலம் மாவட்டம், சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் நாகராஜன், தன் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவற்று விளிம்பு நிலையில் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சொந்த செலவில் அரிசி, மளிகை பொருள்களை நேரில் வழங்கி அரவணைத்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜனிடம் பேசினோம். ''தற்போது நான் பணியில் இருக்கிறேன். பணி முடிந்து ஆதரவற்ற மக்களைச் சந்திக்க இருக்கிறேன்'' என்றதோடு முடித்துக்கொண்டேன். இதையடுத்து அவருடன் நாமும் பயணித்தோம்.
முதலில், சூரமங்கலம் எல்லைக்குட்பட்ட மஜ்ரா கொல்லப்பட்டியில் ஒரு குடிசை வீட்டின் முன்பாக போய் கார் நின்றது. அங்கு கண் பார்வையற்ற இரண்டு மூதாட்டிகள் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகிறார்கள். உதவி ஆணையாளர் நாகராஜன், அவர்களைச் சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு அவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்கினார்.
Also Read: பணிச் சோர்விலிருந்து விடுபட நடனமாடிய காவல்துறை அதிகாரிகள்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ
உதவிப் பொருள்களைப் பெற்றுக்கொண்ட சரஸ்வதி பாட்டியிடம் பேசினோம். ''எனக்கு கல்யாணமாகி வீட்டுக்காரர் செத்துப் போயிட்டார். குழந்தை குட்டி எதுவும் கிடையாது. கண் பார்வை இல்லாததால அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். அம்மாவுக்கும் யாரும் ஆதரவு இல்ல. அவுங்களுக்கும் கண்ணு தெரியாது. அம்மாவுக்கு 99 வயசாகுது. எனக்கு 71 வயசாச்சு. ரெண்டு பேருமே கண் தெரியாமதான் இந்தக் குடிசையில வாழ்ந்துட்டு வர்றோம்.
வெளியே எங்கேயும் போக மாட்டோம். இருக்கறத வச்சு சமைச்சு சாப்பிடுவோம். உதவி கமிஷனர் அய்யா எங்களுக்கு ஒரு மாசத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கார். அவுங்க நெல்லா இருக்கனும்'' என்றவர் எங்க அம்மாவுக்கு சித்திரை வந்தால் 100 வயசு ஆகுது. அன்னைக்கு கேக் வெட்டி கொண்டாடட வர்றேன்னு சொல்லிருக்கார்'' என்றார் சிரிப்புடன்.
அடுத்து சூரமங்கலம் எல்லைக்குட்பட்ட காட்டூர் பகுதிக்கு உதவி ஆணையாளர் நாகராஜன் சென்றார். அங்கு பாத்ரூம் சைஸ் வீட்டில் ஆதரவற்ற நிலையில் கண் பார்வையற்ற பழனிசாமியை சந்தித்து உதவிப் பொருள்களை வழங்கினார். இடிந்து கிடக்கும் சுவரைப் பூசித் தருவதாகவும் பழனிசாமிக்கு உறுதியளித்தார் ஏ.சி.
Also Read: `தாயின் இறுதிச்சடங்கு முடிஞ்சதும் கொரோனா தடுப்பு வேலை' -கலங்கவைத்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர்
உதவி கமிஷனரின் உதவி பற்றி நம்மிடம் பேசிய பழனிசாமி, ``எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பையன். எனக்கு இப்ப 72 வயசாச்சு. என் மனைவி சின்ன வயசுலையே என்கூட பொழைக்காம போயிடுச்சு. எனக்கு குழந்தைகள் இல்லை. நான் லீபஜாரில் மூட்டை தூக்கி ஜீவனம் செஞ்சுட்டு வந்தேன். அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி தவறான சிகிச்சையால் ரெண்டு கண்ணுலயும் பார்வை இழந்துவிட்டேன். எனக்கு யாருடைய உதவியும் இல்லை. என் மேல் இரக்கப்பட்டு யாராவது அரிசி, பருப்பு கொடுப்பாங்க. ``காலையில அடுப்பு பத்த வச்சா சாயந்திரமாதான் சமையல் செஞ்சு முடிப்பேன். ஒவ்வொரு பொருள்களாக துலாவி துலாவி எடுப்பதற்கு லேட் ஆயிடுது. நானே சமையல் செய்து சாப்பிட முடியல'' என்று கூறும்போது உதவி கமிஷனர் கண் கலங்கினார்.
இறுதியாக, உதவி ஆணையாளர் நாகராஜனிடம் பேசினோம். ''சமூகத்தால் கண்டு கொள்ளப்படாத ஆதரவற்ற விளிம்பு நிலை மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். என் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் போல, ஆதரவற்றவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்து வருகிறேன்.
Also Read: `60 ஆண்டுகளாகியும் காவல்துறை மாறலை!' -வாசகர் பகிரும் பகீர் ஃப்ளாஷ்பேக் #MyVikatan
சட்டத்தைப்போல ஆதரவற்றவர்களையும் பாதுகாக்கிறேன். வாழ்நாளில் இவர்களையெல்லாம் சந்திப்பதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னால் முடிந்த சிறு உதவிகளை அவர்களுக்கு செய்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.
source https://www.vikatan.com/news/tamilnadu/salem-police-ac-helped-physically-challenged-persons-in-lock-down-period
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக