திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு கடந்த ஜூன் 14-ம் தேதி தி.மு.க பிரமுகர், தன்னுடைய 50-வது பிறந்தநாளை வெகுசிறப்பாகக் கொண்டாடியுள்ளார். மது, பிரியாணி விருந்தில் தி.மு.க பிரமுகரின் ஆதரவாளர்கள், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். கட்சியினர், அதிகாரிகள் முன்னிலையில் பிறந்தநாள் கேக்கை வெட்டி தி.மு.க பிரமுகர் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக உயரதிகாரி ஒருவர் பங்கேற்றுள்ளார்.
பிறந்தநாள் விழா நடந்த இடத்துக்கு காரில் சென்றுள்ளார் 50 வயதான பி.டி.ஓ ஒருவர். பிறந்தநாள் விழாவுக்குப் பிறகு அதில் பங்கேற்ற தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிறந்தநாள் விழாவுக்கு பி.டி.ஓ-வுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனால், அவர் ஜூன் 21-ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 4 நாள்களுக்கு முன் ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நலம் மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Also Read: பிறந்தநாள் மூலம் பரவிய கொரோனா! -தி.மு.க பிரமுகரால் அதிர்ச்சியில் அதிகாரிகள்
பி.டி.ஓ மரணம் குறித்து நம்மிடம் பேசியவர்கள், ``திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பி.டி.ஓ-வுக்கு ஜூன் 14-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர் போனில் பேசியுள்ளார். தி.மு.க பிரமுகர் பிறந்தநாள் விழாவுக்கு செல்ல வேண்டும். என்னுடைய காரில் அங்கு செல்ல முடியாது. அதனால், நீங்கள் காரை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். உடனே பி.டி.ஓ-வும் காரில் உயரதிகாரியை அழைத்துக்கொண்டு மாந்தோப்பு பண்ணை வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, அனைவரும் மது போதையில் திளைத்திருந்தனர். இதையடுத்து விழா முடிந்ததும் அதிகாரியை அழைத்துக்கொண்டு செல்ல பி.டி.ஓ தயாராகியுள்ளார். அப்போது காரில் இன்னும் சிலரும் ஏறியுள்ளனர்.
இதன்பின்னர், பிறந்தநாள் விழாவுக்கு சென்ற தி.மு.க பிரமுகர் உள்பட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் பி.டி.ஓ-வும் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையிலிருந்த பி.டிஓ உயிரிழந்துவிட்டார். உயரதிகாரி மட்டும் அந்தப் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கவில்லை என்றால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் ஒரு சில உயரதிகாரிகளால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர்" என்றனர்.
தி.மு.க பிரமுகர் குறித்து அக்கட்சியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ``செம்மரக்கடத்தல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த தி.மு.க பிரமுகர், திருவள்ளூர் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவர். அரசு அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சியினர் என அனைவரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர். ஒவ்வோர் ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுப்பது அவரின் வழக்கம். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக மாந்தோப்பில் பிறந்தநாள் விழாவுக்கு அவரின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்தனர்.
Also Read: பிறந்தநாள் மூலம் பரவிய கொரோனா! -தி.மு.க பிரமுகரால் அதிர்ச்சியில் அதிகாரிகள்
முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்புவிடுக்கப்பட்டது. தி.மு.க பிரமுகரின் நட்புக்காக அந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்குதான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க பிரமுகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பி.டி.ஓ உயிரிழந்த சம்பவம் குறித்த தகவல் அறிவாலயம் வரை சென்றுள்ளது. ஆனால், செல்வாக்கு காரணமாக அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது" என்றனர்.
ஏற்கெனவே ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறியதாக தி.மு.க பிரமுகர் உள்பட 30 பேர் மீது ஆரம்பாக்கம் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தச் சூழலில் பி.டி.ஓ கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/tiruvallur-government-official-died-due-to-corona-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக