Ad

செவ்வாய், 7 ஜூலை, 2020

``அந்தப் படத்தை வாங்குறேன்னு 2 கோடி ரூபாய் ஏமாத்திட்டாங்க!'' - தயாரிப்பாளர் சி.வி.குமார்

``எப்பவும் ஏதாவது வேலைகள்ல இருந்துகிட்டே இருந்துவிட்டு இப்போ 100 நாளைக்கும் மேல வீட்டுலயே இருக்கிறது கஷ்டமா இருக்கு. க்ரியேட்டிவா எதுவுமே யோசிக்கவும் முடியல. ஸ்க்ரிப்ட் டிஸ்கஷன் எதுவுமே பெருசா பண்ண முடியல. வீடியோ கால் மூலமா பேசுனாலும் திருப்தியா எதுவும் கிடைக்கல. எல்லா வேலையும் பாதியிலேயே நிக்குது. என்ன பண்றதுனு யாருக்கும் புரியல. சினிமா மட்டுமல்ல எல்லா பிசினஸும் இப்படித்தான் இருக்கு'' என்று கொரோனா கால கொடுமைகளில் இருந்து ஆரம்பித்தார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி.குமார்.

``ரீகல் டாக்கீஸ் ஓடிடி தளம் பற்றி சொல்லுங்க?"

ரீகல் டாக்கீஸ்

``என்னோட சின்ன வயசுல மும்பைல ரீகல் சினிமாஸ்ல படம் பார்த்திருக்கேன். அப்பவே ஏசி, கார் பார்க்கிங் வசதிகளோட அழகா இருக்கும். பெரியவனா ஆனதுக்குப் பிறகு நம்மூர்ல தியேட்டர் கட்டுனா இப்படியிருக்கணும்னு கற்பனை பண்ணி பார்த்திருக்கேன். இந்தப் பேரும் எனக்குள்ள பதிய ஆரம்பிச்சிருச்சு. அதனால, என்னோட டிஜிட்டல் தளத்துக்கு ரீகல் டாக்கீஸ்னு பேர் வெச்சேன். நானும், என் நண்பர் சுதாகரும் ஒண்ணா சேர்ந்து இதை ஆரம்பிச்சிருக்கோம். டெக்னிக்கல் விஷங்களை சுதாகரும் கன்டென்ட்டை நானும் பார்த்துக்கிட்டு இருக்கோம். நிறைய ஓடிடி பிளாட்ஃபார்ம் இருந்தும் தனியா தொடங்கக் காரணம், நாங்க யாரையும் போட்டியாளரா பார்க்கல. ஏன்னா, எங்க மீடியம்ல ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படத்துக்கும் பணம் கட்டி படம் பார்க்கணும். மாசம், மாசம் சப்ஸ்கிரைப் பண்ணத் தேவையில்ல. அதனால, மற்ற ஓடிடி பிளாட்ஃபார்மைக் காட்டிலும் எங்களோடது முற்றிலும் வேற. திருமுருகன் என்டர்டெயின்மென்ட் மீடியாவுல வித்தியாசமான கன்டென்ட்ல படம் பண்ண மாதிரியே, இதுலயும் படத்தை வெளியிட தொடங்கியிருக்கோம். ஷார்ட் பிலிமிஸ், டாக்குமென்ட்ரி படங்களும் சேர்த்து வெளியிட இருக்கோம். பெரிய கமர்ஷியல் படங்களை வாங்கி வெளியிடுற ஐடியா இல்ல. ஏன்னா, கன்டென்ட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரயிருக்கோம். பைரசி பிரச்னை அதிகமா இருக்குறப்போ ஒவ்வொரு படத்துக்கும் பணம் கொடுத்து மக்கள் பார்ப்பாங்களான்னு சந்தேகம் இருக்கு. கொஞ்சம் லாபம் கிடைச்சாலும் போதும்னு நினைக்கிறோம்.''

``ஏகப்பட்ட பார்ட்-2 படங்களோட ரெடியா இருக்கிறதா கேள்விப்பட்டோமே?"

`` `இன்று நேற்று நாளை' படத்துக்கான பார்ட் 2 ரெடியா இருக்கு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவிக்குமாரே எங்ககிட்ட கொடுத்திருக்கார். அவரோட இணை இயக்குநர் கார்த்திக்தான் டைரக்ஷன் பண்ணப்போறார். முதல் பகுதில நடிச்சிருந்த அதே நடிகர்கள்தான் நடிக்கப்போறாங்க. இந்த லாக்டெளன் சம்பவம் நடக்கமா இருந்திருந்தா இந்நேரம் 50 சதவிகித ஷூட்டிங் முடிஞ்சிருக்கும். `சூது கவ்வும் படத்துக்கு பார்ட் 2 எழுதித் தாங்க'னு நலன்கிட்ட கேட்டேன். `வேற ஸ்க்ரிப்ட் எழுதிக்கிட்டு இருக்கேன். ஆனா, பார்ட் 2-க்குனு ஒரு ஐடியா இருக்கு. அதை உங்கிட்ட தரேன்'னு சொல்லிட்டு தந்தார். இந்த ஐடியாவை எங்களுக்கான டீம் வெச்சு டெவலப் பண்ணிட்டோம். இதை, நலனுக்கு ஃபார்வார்ட் பண்ணயிருக்கோம். சில திருத்தங்கள் செஞ்சு கொடுக்குறேன்னு சொல்லியிருக்கார். இதே மாதிரி `தெகிடி -2' படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலையும் முடிச்சிருக்கோம்.''

`சூது கவ்வும்' படம் பார்ட் 2 ரெடியா இருக்கும் பட்சத்தில் அதே டீம் தொடர்ந்து வேலை பார்ப்பாங்களா?

சூது கவ்வும்

``ஸ்க்ரிப்ட் மட்டுமே ரெடி பண்ணியிருக்கோம். மற்ற விஷயங்களுக்குள்ள இன்னும் போகல. `பீட்சா' மற்றும் `சூது கவ்வும்' படங்களை அப்போ எடுக்க ரெண்டரை கோடிதான் செலவாச்சு. 12 கோடி வரைக்கும் பிசினஸ் போச்சு. இன்னைக்கு 15 கோடிக்கு படத்தை எடுத்தாகூட பிசினஸ் நல்லா போகும்னு சொல்ல முடியாது. ஏன்னா, இந்தப் படங்களுக்குனு இப்ப கொஞ்ச ஆடியன்ஸ்தான் இருக்காங்க. இவங்க மட்டும்தான் இது மாதிரியான படங்களைப் பார்க்குறாங்க. மத்தவங்களுக்கு பிடிக்கல, இல்லைன்னா புரியல. `பீட்சா' திருநெல்வேலி ஏரியாவுல கலெக்ட் பண்ணதைவிட 10 மடங்கு சென்னையில வசூல் பண்ணியிருந்தது. இந்தப் படங்களுக்குனு சில பட்ஜெட் வேல்யூஸ் இருக்கு. `பீட்சா' படத்தோட அதே டீம் இப்போ ஒண்ணா சேர்ந்து ஒரு படம் பண்ணுனா 50 கோடி வரைக்கும் பட்ஜெட் வேல்யூ போயிரும். அப்போ, இதுக்கு ஏத்த மாதிரியான கன்டென்ட் பண்ணணும். ஏற்கெனவே இருந்த கன்டென்ட் பண்ண முடியாது. இன்னைக்கு இருக்குற சூழல்ல மாஸ் கமர்ஷியல் படங்கள் பண்ணா மட்டும்தான் எல்லா ஆடியன்ஸையும் ரீச் பண்ண முடியும். ஆனா, எனக்கு மாஸ் கமர்ஷியல் படங்கள் பண்றதுல உடன்பாடில்ல. சில ஹீரோஸ் பாதி சம்பளத்துலகூட எனக்கு படம் பண்ணித் தருவாங்க. ஆனா, அவங்களுக்கு கமர்ஷியல் கன்டென்ட் கொடுக்கணும். அப்போதான் படம் ஹிட்டாகும். இந்த மாதிரியான காரணங்களாலதான் மாஸ் படத்துக்குள்ள போறதில்ல. நான் பீக்ல இருந்த காலத்துல நிறைய ஆர்ட்டிஸ்ட் எனக்கு படம் பண்ண தயாரா இருந்தாங்க. ஆனா, நான்தான் ஒத்துக்கல. எப்பவும் 100 சதவிகிதம் கமர்ஷியல் படங்களை டைரக்‌ஷன் மற்றும் புரொடியூஸ் பண்ண மாட்டேன். ஏன்னா, இதை பண்றதுக்குதான் தாணு சார், ஸ்டூடியோ கிரீன் மாதிரியான பெரிய நிறுவனங்கள் இருக்காங்க. இவங்களுக்கு கமர்ஷியல் படங்கள் செட்டாகும். என்னோட ஐடியாலஜி மற்றும் வொர்க்கிங் ஸ்டைலுக்கு கன்டென்ட் ரீதியான படங்கள் மட்டுமே செட்டாகும். இதுலதான் எனக்கு மன திருப்தி கிடைக்குது.''

``நீங்க சொல்றதைப் பார்க்கும்போது அதிகமான ரிஸ்க் ஃபேக்டர் எடுக்குற மாதிரியிருக்கே?"

சி.வி.குமார்

``நான், புரொடியூஸ் பண்ண படங்கள்ல பெரிய நஷ்டத்தை கொடுத்த படம் `மாயவன்' மட்டும்தான். ஏன்னா, ரிலீஸ் டேட்ல சில பிரச்னைகள் இருந்தது. மனரீதியாவும் நான் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இல்ல. தெலுங்குல இந்தப் படத்தை வாங்கிக்குறேன்னு சொல்லி ரெண்டு கோடி ரூபாய் வரைக்கும் ஏமாத்திட்டாங்க. மூணு கோடில ஒரு படம் எடுத்திருந்தாலும் மூன்றரை கோடி கிடைச்சா போதும்னு நினைச்சோம். இதெல்லாம் தாண்டி சினிமாங்குறது என்னோட பேஷன். அதனால, லாபத்தை மட்டும் பெருசா முன்னிலைப்படுத்தி எதையும் பார்க்கிறல்ல.''

``மற்ற மொழிகள்ல படங்கள் தயாரிக்கிற ஐடியா இருக்கா?"

``அவங்களோட மண்வாசனை தெரிஞ்சிருக்கணும். லைஃப் ஸ்டைல் புரிஞ்சிருக்கணும். தமிழ்நாட்டுல நம்ம தமிழ் மொழியோட வளர்ந்தவன். அதனால, மற்ற மாநிலங்களுக்குப் போக முடியாது. ஏன்னா, மத்தவங்களோட கன்டென்ட் ஸ்டைல் புரியாது. இங்கே, `அட்டகத்தி', `முண்டாசுப்பட்டி' போன்ற படங்கள் எடுக்குறோம். அங்கே இருக்குற ஸ்டைலுக்கு கதை ரெடி பண்றது முற்றிலும் வேற. இருந்தாலும், நல்ல கதைகள் கொண்ட படங்கள் பண்றதுக்கு மலையாளம் மற்றும் மராத்தி மொழிகள்ல முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கோம். பார்ப்போம்.''

``தெலுங்கு சினிமால இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் தங்களுக்குனு ஓடிடி தளம் வெச்சிருக்குறது பற்றி?"

``அங்கே, பெரிய பணக்காரங்க மட்டுமே தயாரிப்பாளர்களாக இருக்க முடியும். காரணம் என்னன்னா, தாத்தாவுக்குப் பிறகு அப்பா, அப்பாவுக்குப் பிறகு மகன் இப்படி வந்துட்டே இருக்கும். இதை நெப்போட்டிஸம்னு சொல்ல முடியாது. ஆனா, வெளியே இருந்து வந்து சாதிச்சு நிலைச்சு நிக்குற புரொடியூசர்ஸைப் பெருசா பார்க்க முடியாது. தமிழ் சினிமால அப்படி கிடையாது. இங்கே, யார் வேணாலும் நடிக்கலாம், தயாரிப்பாளர் ஆகலாம். இங்கே, ஓப்பன் மார்க்கெட் இருக்கு. ஆனா, இந்தி மற்றும் தெலுங்கு அப்படியில்ல. உள்ளே போறதுக்கும் நிலைச்சு நிக்கவும் பெரிய பலம் வேணும். இந்த வகையில ஒப்பிட்டுப் பார்க்குறப்போ மலையாளம் மற்றும் தமிழ் சினிமா பெருசுனு சொல்லுவேன். இந்தில சின்ன பட்ஜெட் படம் பண்ணவே முடியாது. நிறைய பிரச்னைகள் இருக்கும்.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/producer-cv-kumar-speaks-about-his-new-ott-venture

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக