Ad

திங்கள், 6 ஜூலை, 2020

``சீமானின் ஏகே74 கருத்துக்குத்தான் பதில் சொன்னேன்... தீவிரவாதம் பேசவில்லை!'' - வேல்முருகன்

கொரோனா ஊரடங்கில், ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளும் அறிக்கைகள் வழியே அடித்துக்கொண்டு கிடக்கிறார்கள் என்றால், தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத் அமைப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்களும் தொடர்ச்சியாக ஊடகப் போர் நடத்திவருகிறார்கள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகன், தனது சொந்த அரசியல் லாபத்துக்காக இஸ்லாமிய மக்களை, மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகத் தூண்டிவருவதாகவும் தீவிரவாத கருத்துகளை விதைத்து வருவதாகவும் `வெடிகுண்டு வேல்முருகன்' என்ற பட்டப்பெயரோடு குற்றம் சாட்டிவருகிறது தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத். இதற்குப் பதிலடியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியும், தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத் அமைப்பினர் குறித்துப் பல்வேறு அதிரடியான விமர்சனங்களை முன்வைத்து வார்த்தைப் போர் நடத்திவருகின்றனர்.

வேலூர் இப்ராஹிம்

த.ஏ.பி.ஜ அமைப்பை நிறுவியதோடு, அதன் தலைவராகவும் பொறுப்பேற்று நடத்திவருபவர் வேலூர் இப்ராஹிம். பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டுடன் இயங்கிவரும் த.ஏ.பி.ஜ அமைப்பு, மத்திய பா.ஜ.க அரசின், குடியுரிமைத் திருத்தச் சட்டம், 370 சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளித்து வருகிறது. இதனால், இந்த அமைப்புக்கு இஸ்லாமிய அமைப்புகளிடையேகூட கடும் எதிர்ப்புகள் நிலவி வருகின்றன.

அதேநேரம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இடதுசாரி சிந்தனையாளர்களோடு அதீத நெருக்கம் காட்டி வருபவர். இதனால், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக் கோரியும் மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் நடைபெறுகிற போராட்டங்களில் எதிர்க்கட்சியினரோடு கைகோத்து களமாடி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. ஆக, சித்தாந்த ரீதியாகவே த.ஏ.பி.ஜ மற்றும் த.வா.க அமைப்பினர் எதிரும் புதிருமான நிலையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீதான விமர்சனங்களை முன்வைத்துப் பேசுகிற வேலூர் இப்ராஹிம்,

``வேல்முருகனின் சொந்த சமூகமான வன்னிய சமூகமே அவரைக் கைவிட்டுவிட்டது. ஏற்கெனவே இரண்டு முறை அவர் தேர்தலில் வெற்றி பெற்றது என்பது முழுக்க முழுக்க பா.ம.க-வின் செல்வாக்கினால்தான். அவர் தனித்து நின்றபோதெல்லாம் தோல்வியைத்தான் தழுவி வருகிறார். எனவே, இஸ்லாமிய சமூகத்தின் வாக்குகளைக் கவர்வதற்காக அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு மத்திய - மாநில ஆளும்கட்சியினரை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசிவருகிறார்.

இயல்பாகவே, உணர்வுபூர்வமான பேச்சுகளுக்கு எளிதில் இளகிவிடக் கூடியவர்கள் இஸ்லாமியர்கள். அதனால், எல்லா மேடைகளிலுமே மோடி மற்றும் அமித்ஷா பற்றி மிகக் கடுமையாகப் பேசிவருகிறார். குறிப்பாக, பிரதமர் மோடியை ஒருமையில் அவன் இவன் என்று பேசிவருகிறார். ஏற்கெனவே, இஸ்லாமிய இயக்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருவித எதிர்ப்பு அலை இருந்துவரும் சூழலில், `இதுதான் வீரம்' என்பதுபோல் மக்களைத் தூண்டிவிட்டு வருகிறார் வேல்முருகன்.

அமித் ஷா - மோடி

இதற்காகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி'யின் மாநிலத் துணைத்தலைவர் போன்ற பெயரளவிலான பொறுப்புகளில் இஸ்லாமியர்களையும் நியமித்துக்கொண்டுள்ளார். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு இஸ்லாமியர்களின் மேடைகளிலேயே, `எனக்கு ஆயுதப் பயிற்சியெல்லாம் தெரியும். குண்டு வைப்பது எப்படி, ஏ.கே.47 துப்பாக்கியைக் கையாள்வது எப்படி என்றெல்லாம் சொல்லித்தருகிறேன்' என்று பேசிவருகிறார். அவர் ஒரு கட்சித் தலைவர் என்பதால், போலீஸ் கைது செய்யாது. ஆனால், `வாங்க குண்டு வைக்கலாம்; ஆயுதப் பயிற்சி எடுத்துக்கலாம்' என்று இதே வார்த்தையைப் பயன்படுத்தி ஓர் இஸ்லாமியர் பேசினால், என்.ஐ.ஏ வழக்கில் ஆரம்பித்து, இந்தியக் குடிமகன்தானா அல்லது பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளவரா என்பது வரையிலான பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.

ஏற்கெனவே வேல்முருகன் பேசிய இதுபோன்ற பேச்சுகளை இந்த கொரோனா காலகட்டத்தில், அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகம் வழியே அதிக அளவில் பரப்பிவருகிறார்கள். அமைதியாக இருக்கும் இஸ்லாமிய மக்களிடையே இதுபோன்ற வீடியோக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தத்தில், வாக்கு அறுவடை செய்வதுதான் அவரது நோக்கம். ஆனால், அவரது பேச்சைக்கேட்டு பாதிக்கப்படப் போவது இஸ்லாமிய மக்கள்தாம்.

வேல்முருகனோ அல்லது அவரது கட்சியைச் சேர்ந்தவர்களோ யாரும் சிறைக்குச் செல்லப்போவதில்லை. அப்பாவி இஸ்லாமிய மக்கள்தாம் சிறைக்குச் செல்வார்கள். ஆக, இவர்கள் அரசியல் லாபம் அடைவதற்காக இஸ்லாமிய மக்களைப் பலிகடாவாக்க முயற்சி செய்துவருகிறார்கள். கடந்த காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இதே நடைமுறையைத்தான் கையிலெடுத்துச் செயல்படுத்தி வந்தனர். அதனால்தான் வேல்முருகனும் இந்த வழியை தற்போது கையில் எடுத்திருக்கிறார்.

உண்மையிலேயே இஸ்லாமிய சமூகத்தினர் மீது அக்கறையிருந்தால், இந்த சமூக மக்கள் முன்னேற்றத்துக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன, அரசாங்கம் இவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தெல்லாம் பேசலாம். அதையெல்லாம் செய்யாமல், சி.ஏ.ஏ-வை எதிர்த்துப் போராடுவது எப்படி, ஆயுதப் பயிற்சி எடுப்பது எப்படி என்றா சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பார்கள்...

ப வேல்முருகன் ;

இஸ்லாமிய சமூகத்தை உணர்ச்சிபூர்வமாகத் தூண்டிவிட்டதெல்லாம் போதும்; இனிமேலாவது அறிவார்ந்த சமூகமாக இவர்களை மேம்படுத்துங்கள் என்று தொடர்ச்சியாக நாங்கள் சொல்லிவருகிறோம். இப்படி கருத்தியல் ரீதியாக நாங்கள் எதிர்த்துக் கேட்கிறோம். ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களோ எங்களை இழிவுபடுத்தியும் கொலை மிரட்டல் விடுத்தும் விதவிதமான ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கருத்தியல் ரீதியாக எங்களோடு வாதம் செய்யத் துணிவில்லாமல், இதுபோன்ற மிரட்டல்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது'' என்றார் படபடப்பாக.

வேலூர் இப்ராஹிமின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனிடம் பேசினோம்....

``லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் என்னை நேசிக்கிறார்கள்; மதிப்புக்குரிய தலைவராகவும் பார்க்கிறார்கள். அதனால்தான் தமிழ்நாடு முழுக்க 100-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு என்னை அழைத்துப் பேச வைத்தனர். இதுமட்டுமல்ல... உலகம் முழுக்க தமிழ் அமைப்புகளோடு சேர்ந்தும் இஸ்லாமியர்களுக்காகப் பேசிக்கொண்டு வருகிறேன்.

Also Read: ``எத்தனை விமானம் வேண்டும்... முதல்வரை லிஸ்ட் கொடுக்கச் சொல்லுங்கள்'' - கொதிக்கும் வானதி சீனிவாசன்!

பெரியார் திடலின் உள் அரங்கில், அறிவுஜீவிகள் கலந்துகொண்ட, `திராவிடம் 2.0' கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அப்போது `ஏ.கே.74 ஆயுதத்தில் சீமான் பயிற்சியளித்ததாகச் சொல்கிறாரே... அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...' எனக் கூட்டத்திலிருந்து எனக்குக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்துப் பேசுகையில், `ஏ.கே 74 ஆயுதத்தை நான் பார்த்ததுகூட இல்லை. ஆனால், ஏ.கே 47, 56 ஆயுதங்களைப் பற்றி எனக்குத் தெரியும். எனக்குப் பாதுகாப்பு கொடுக்கவந்திருந்தவர்களே இந்த ஆயுதங்களைத்தான் எடுத்து வந்திருந்தனர். அதனால் அதைப்பற்றித் தெரியும். அதேபோல, வெடிகுண்டுகள் பற்றிய கேள்விக்கு, `எங்கள் ஊரிலேயேகூட தமிழ்நாடு விடுதலைப் படை இருந்தது. காவல்துறை மரணங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்ற காலத்தில், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களிலேயே தமிழ்நாடு விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால், அதைப்பற்றியும் எனக்குத் தெரியும்.

சீமான்

மற்றபடி ஏ.கே. 74, ஆமைக்கறி பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது' என்றெல்லாம் பேசியிருந்தேன். அந்தக் காணொலியை எடுத்து வைத்துக்கொண்டு `இஸ்லாமியர்கள் கூட்டத்தில், தீவிரவாதம் பேசினார் வேல்முருகன்' என்று வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பிவருகின்றனர் சிலர். மற்றபடி இஸ்லாமியக் கூட்டத்தில் நான் அவதூறாகப் பேசியதாக ஓர் ஆவணத்தை யாரேனும் காட்ட முடியுமா?

இஸ்லாமிய மக்கள் என் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். காரணம்... சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட பொதுத்தலைவராகத்தான் என்னை அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸிடம் காசு வாங்கிக்கொண்டு அவர்கள் கொடுத்த அஜெண்டாவைச் செயல்படுத்துவதற்காகத் தெருவில் நின்று கூவிக்கொண்டிருப்பவர்களை எல்லாம் நான் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை!'' என்றார் ஆவேசமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/velmurugan-answers-to-allegations-against-his-recent-speech-on-seeman-and-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக