சீனாவின் வுகான் நகரில் கடந்த ஜனவரி மாதம் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டது. அப்போது சீனாவுக்கு அடுத்து மிக அதிகமான பாதிப்பைச் சந்தித்த நாடாக தென்கொரியா இருந்தது. ஆனால், சீனாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலிருந்த வடகொரியாவில் எந்த பாதிப்பும் இல்லை என அந்நாடு அரசு திட்டவட்டமாகக் கூறி வந்தது, ‘சீனாவில் வைரஸ் உறுதியான பிறகு தங்கள் நாட்டு எல்லையை மூடிவிட்டோம். அதனால் வைரஸ் பரவல் இல்லை’ எனத் தகுந்த காரணமும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரியில் மூடப்பட்ட வடகொரிய எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை அதனால் அங்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வடகொரியாவின் எல்லை நகரில் முதன்முதலான ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கேசிஎன்ஏ தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் இருக்கும் கேசோங் நகரில் முதல் கொரோனா பாசிட்டிவ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்நகரம் முழுமையாகப் பூட்டப்பட்டுள்ளது.
Also Read: `பொருளாதாரத் தடை; கடுமையான பட்டினி’ - ஆமை, தேநீரை பரிந்துரைக்கும் வடகொரிய அதிபர்
நேற்று அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அவசரகால கூட்டம் நடைபெற்றது அதில், ‘ கேசோங் நகரில் அவசரகால முறையை அமல்படுத்தவும், வைரஸைக் கட்டுப்படுத்த உயர்மட்ட எச்சரிக்கை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் 3 வருடங்களுக்கு முன்பு தென்கொரியாவுக்குச் சென்று கடந்த ஜூலை 19-ம் தேதி மிக அதிக பாதுகாப்புக் கொண்ட வடகொரிய எல்லையைச் சட்டவிரோதமாகக் கடந்து கேசோங் நகருக்குள் நுழைந்துள்ளார்.
நோயாளி கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை, இது கொடிய மற்றும் பேரழிவுக்கு வழிவகுக்கும்” எனச் செய்தி ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் கொரோனா பாசிட்டிவ் கேஸ் இது என்றும் அங்கு கொரோனாவை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Also Read: `தென்கொரியாவுக்கு எதிரி நாட்டு அந்தஸ்து; தகவல்தொடர்புகள் துண்டிப்பு!’ - வடகொரியா முடிவு
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் தென் கொரியாவில் நாள் ஒன்றுக்கு 30-40 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் உலகின் மிகவும் கடுமையான பாதுகாப்புகளைக் கொண்ட வட மற்றும் தென்கொரிய எல்லையை யாராலும் கடக்க முடியாது, கடந்த சில நாள்களில் அப்படி யாரும் எல்லையைக் கடக்கவில்லை எனவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/news/international/north-korea-declares-first-corona-positive-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக