Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

அமெரிக்கா: `வீட்டுப்பாடம் முடிக்காத சிறுமி!’ - சிறையில் அடைக்கப்பட்ட அவலம்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் கிரேஸ் என்னும் 15 வயதுச் சிறுமி. இவர் கடந்த வருடம் தன் தாயிடம் சண்டைபோட்டு அவரை தாக்கி, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றவியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடந்த மே மாதம் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் அளிக்கப்பட்டு அதை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனச் சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டுப்பாடம்

சிறுமி கிரேஸுக்கான நன்னடத்தை விதிகளில் முறையாக வீட்டுப்பாடம் செய்வதும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் கொரோனா அச்சம் அதிகம் இருப்பதால் பள்ளிகள் எதுவும் திறக்கப்படாமல் மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். அப்படி ஆன்லைன் கிளாஸ் மூலம் கிரேஸுக்கு வழங்கப்பட்ட வீட்டுப்பாடத்தை அவர் முடிக்கவில்லை என மீண்டும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த மாணவிக்கு ‘ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ் ஆர்டர்’ எனும் உளவியல் குறைபாடு இருப்பதால் அவரின் நன்னடத்தைகளில் பிரச்னை உள்ளது என ப்ரோபப்ளிகா என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டுப்பாடம் முடிக்காத வழக்கை விசாரித்த ஆக்லாந்து நீதிமன்றம், சிறுமி மீது முன்னதாகக் கூறப்பட்ட தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை வைத்து, `அவர் சமூகத்துக்கான அச்சுறுத்தல்' எனத் தீர்ப்பு வழங்கி அவரை சிறார் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

போராட்டம்

இதையடுத்து அந்த மாணவிக்கு ஆதரவாக அவர் நண்பர்கள், உறவினர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து பள்ளி மற்றும் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் வகுப்பில் படிக்கும் கிரேஸுக்கு ஆசிரியர்கள் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். அதனால்தான் அவரால் முறையாக வீட்டுப்பாடத்தை முடிக்க முடியவில்லை, இதைவைத்து அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது அநீதி எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: நாகப்பட்டினம்: ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி மறுப்பு! - தற்கொலைக்கு முயன்ற மாணவி



source https://www.vikatan.com/news/international/student-jailed-for-not-doing-school-work-in-michigan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக