Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

நீலகிரி: `ஈடுகட்ட முடியாத பேரிழப்பு' - 15 நாள்களில் அடுத்தடுத்து இறந்த 3 ஆண் யானைகள்

காடுகளில் வாழும் ஆசிய யானைகளின் கடைசிப் புகலிடமாக மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வந்த நிலையில், தற்போது அந்த நம்பிக்கை பொய்க்கும் வகையில் மனிதத் தவறுகளால் யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

elephant death

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவம் காட்டுயிர் ஆர்வலர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

கடந்த 2-ம் தேதி காலை நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி அருகில் உள்ள 'பேம்பு பேங்க் ரிசார்ட்' எனும் தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் மூங்கிலை உண்ண வந்த ஆண் காட்டு யானை, மூங்கில் புதர் அருகில் சென்ற மின் கம்பியில் உரசி உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தது.

Also Read: கூடலூர்: உணவுதேடி வந்த யானை! - சேற்றில் சிக்கி எழ முடியாமல் உயிரிழந்த சோகம்

இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மூன்று நபர்களை தாக்கிக் கொன்றதாக, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ரேடியோ காலர் பொருத்தி விடுவிக்கப்பட்டது.

elephant death

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த யானை முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குள் நுழைந்த நிலையில் 10-ம் தேதி யானையின் ரேடியோ காலர் சிக்னல் நகராமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் சிக்னல் வரும் பகுதிக்கு யானையைத் தேடிச்சென்றனர். அப்போது ஓடையின் அருகில் அடிசறுக்கி விழுந்து இறந்து கிடந்தது. இந்த யானை இடமாற்றம் செய்யப்பட்டதே இறப்புக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள மணல் கொள்ளி பகுதிக்கு உணவு தேடி வந்த ஆண் காட்டு யானை ஒன்று சேற்றில் புதைந்து மேலே எழ முடியாமல் போராடி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலம் வகைப்படுத்தப்படாத செக்சன் 17 நிலம் எனவும், அத்துமீறியே வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

elephant death

இறந்த இந்த யானை, கோவை மாவட்டத்தில் பிடிக்கப்பட்டு முதுமலையில் விடுவிக்கப்பட்ட விநாயகன் என காட்டுயிர் ஆர்வலர்கள் தெரிவித்து வந்தாலும், இன்று நடைபெறவுள்ள உடற்கூறாய்வுக்குப் பின்னரே சொல்ல முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

சூழல் ஆர்வலர் ஊட்டி சுரேஷ் நம்மிடம் பேசுகையில் "இந்த மூன்று யானைகளின் இறப்பும் பார்ப்பதற்கு இயற்கையாக நடைபெற்றிருப்பதாகத் தோன்றினாலும், மூன்றுமே மனிதத் தவறுகளால் மட்டுமே உயிரிழந்துள்ளது. அதுவும் மூன்றுமே ஆண் யானைகள்.

elephant death

யானைகள் அருகிவரும் இக்கட்டான சூழலில் ஆண் யானைகளின் இழப்பு அதன் இனத்திற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பை ஏற்படுத்தும். வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே யானைகளை இனி பாதுகாக்க முடியும்" என வேதனை தெரிவிக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/elephant-death-rate-increasing-in-nilgiris

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக