நீலகிரியில் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கேற்ப கழிவுகளும் அதிகரிக்கின்றன. வனப்பகுதிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் மலைபோல் குவியும் குப்பைகளைக் கையாள முடியாமல் நகராட்சிகள் திணறி வருகின்றன.
வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் காய்கறி, பழக்கழிவுகள் மற்றும் இதர உணவுக்கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. மேலும் கடைக்காரர்கள் கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை வனப்பகுதிகளில் கொட்டிச் செல்கின்றனர்.
இதுபோன்ற கழிவுகளால் ஈர்க்கப்பட்டு தாவர உண்ணிகளும், ஊண் உண்ணிகளும் குப்பைக் குவியலில் உணவு தேடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இதனால் நோய்த்தொற்று உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஊட்டியில் உள்ள ஒரு குப்பைமேட்டில் உணவு தேடிய கடமான் ஒன்று பிளேடு துண்டை விழுங்கி உயிரிழந்ததும், அந்த கடமானை உண்ட புலி ஒன்று குடல் கிழிந்து உயிரிழந்த சம்பவமும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், கேரட் சுத்திகரிப்பு இயந்திர வளாகங்களில் கொட்டப்படும் கழிவு கேரட்டுகளை நாள்தோறும் காட்டு மாடுகள் அதிக அளவு உண்பதால் உயிரிழப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
காட்டு மாடுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர் நவநீதன், "மாடுகள் முதலில் விழுங்கும், பின்னர் அசைபோடும். இவற்றின் குடல்கள் மென்மையானவை. காட்டு மாடுகள் காட்டில் கிடைக்கும் தாவரங்களை உண்டு வாழ்பவை. தற்போதைய உணவுத் தேடலில் உணவுக் குவியல் என நம்பி கழிவு கேரட்டை அளவுக்கு அதிகமாக உண்கின்றன. தொடர்ந்து இவற்றை மட்டுமே உண்டு ரசாயன மாற்றம் ஏற்பட்டு உயிரிழப்பதாகக் கருதுகிறோம். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்த விரிவான ஆய்வையும் மேற்கொள்வது அவசியம்" என்றார்.
இதுகுறித்து, சூழல் ஆர்வலர் ஜனார்த்தனன், "நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பாலாடா மற்றும் முத்தோரை பாலாடா பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. நாள்தோறும் பல டன் காய்கறிகள் இங்கு சுத்திகரிக்கப்பட்டு தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
விலைபோகாத கழிவு கேரட்டை அதே வளாகத்தில் அல்லது ஓடையில் குவியலாகக் கொட்டுகின்றனர். எளிய உணவாகக் கிடைக்கும் இவற்றை உண்ண காட்டு மாடுகள் மற்றும் கால்நடைகளும் அதிக அளவில் வருகின்றன. தொடர்ந்து இவற்றை உண்ணும் விலங்குகள் விரைவில் வயிறு தொடர்பான நோய் பாதிப்பு ஏற்பட்டு இறக்கின்றன. சமீபத்தில் இது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது" என்றார்.
காட்டு மாடுகளை உடற்கூறாய்வு செய்யும் கால்நடை மருத்துவர் கூறுகையில், "கேரட் பயிர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், இவற்றை அதிகமாக உண்ணும் விலங்குகளுக்கு ஒவ்வாமை, ஜீரணக்கோளாற்றை ஏற்படுத்துவதோடு ரத்தத்திலும் நச்சு ஆசிட் அளவை அதிகரிக்கிறது. உடனடியாக இறக்காவிடினும் விரைவிலேயே பாதிப்புக்குள்ளாகி இறக்கின்றன" என்றார்.
Also Read: வனத்துறை அலட்சியம் பரிதாபமாக பலியான காட்டு மாடு..!
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசுவாமியிடம் பேசினோம். "2018 முதல் தற்போதுவரை நீலகிரி டிவிஷனில் 96 காட்டு மாடுகள் இறந்துள்ளன. இவற்றுள் பல கழிவுநீர்த் தொட்டிகள், திறந்தநிலை கிணறுகள் போன்றவற்றில் விழுந்து இறந்தாலும் சில இதுபோன்ற காய்கறிக் கழிவுகளை அதிக அளவு உண்பதால் இறப்பதாகக் கருதுகிறோம். இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முறையாகக் கழிவுகளைக் கையாள்கின்றனவா என்பதை அரசு உறுதி செய்தால் மட்டுமே இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்பதே காட்டுயிர் ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.
source https://www.vikatan.com/news/environment/new-threat-for-indain-gaur-in-nilgiri-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக