Ad

திங்கள், 6 ஜூலை, 2020

நெய்வேலி என்.எல்.சி விபத்து: 11 ஆக அதிகரித்த உயிரிழப்பு! - அச்சத்தில் தொழிலாளர்கள்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், அனல்மின் நிலையம் – I மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் – II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி என ஐந்து அனல்மின் நிலையங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

என்.எல்.சி தீ விபத்து

ஏழு யூனிட்டுகள் கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே மாதம் 7-ம் தேதி 6-வது யூனிட்டில் உள்ள கொதிகலனுக்குள் நிலக்கரியை அனுப்பும்போது பாய்லர் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில், ஐந்து பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பாதுகாப்பு விஷயத்தில் என்.எல்.சி நிர்வாகம் காட்டிய அலட்சியம்தான் தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று அப்போது தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தின.

விளக்கம் கேட்ட அமித்ஷா:

இதையடுத்து விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இரண்டு குழுக்களை அமைத்ததாக அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம். அந்த சோகம் மறைவதற்கு முன்பே கடந்த 1-ம் தேதி மீண்டும் அதே இடத்தில் அதேபோன்று 5-வது யூனிட்டில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் சடலங்கள்

முதல்நாள் உற்பத்தியை முடித்துவிட்டு தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டிருந்த கொள்கலனை, மறுநாள் 1-ம் தேதி காலையில் 9.45 மணி அளவில் இயக்கியபோது கடும் அழுத்தத்திலிருந்த கொதிகலன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது அந்த இடத்தில் பணியிலிருந்த பத்மநாபன் (28), அருண்குமார் (27), வெங்கடேசபெருமாள் (28), சிலம்பரசன் (28), ராமநாதன் (48), நாகராஜ் உள்ளிட்ட ஆறு பேர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

அடுத்தடுத்து உயிரிழப்புகள்:

மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த மற்ற 17 தொழிலாளர்களில் ஒருவர் என்.எல்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்ற 16 தொழிலாளர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டது என்.எல்.சி. அவர்கள் அனைவரும் அதிக தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்ததால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என்று கட்டுரைகளில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

விபத்து நடைபெற்ற இடம்

அதன்படி கடந்த 3-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிரந்தரத் தொழிலாளியான பொறியாளர் சிவக்குமார் உயிரிழந்தார்.

11 தொழிலாளர்கள் உயிரிழப்பு:

அதையடுத்து நேற்று முன்தினம் செல்வராஜ் மற்றும் ரவிச்சந்திரன் இருவர் உயிரிழந்தனர். அதேபோல இன்று காலையில் வைத்தியநாதன் மற்றும் இளங்கோ என்ற இரு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது.

Also Read: நெய்வேலி என்.எல்.சி: `மீண்டும் வெடித்த பாய்லர்’ -அதிகரிக்கும் பலி எண்ணிக்கை?

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு லேசான தீக்காயங்கள்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவதால் பீதியில் உறைந்திருக்கின்றனர் சக தொழிலாளர்களும், உறவினர்களும்.



source https://www.vikatan.com/news/accident/number-of-deaths-increased-in-boiler-blast-at-cuddalore-nlc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக