Ad

சனி, 25 ஜூலை, 2020

வேதா இல்லம்: `நீதிமன்றத்தில் ரூ.68 கோடி டெபாசிட்!’ - அரசுடமையானது ஜெ. வாழ்ந்த வீடு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி 2017-ம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதன்முதலில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த நினைவு இல்லம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

பின்னர், வேதா இல்லம் அமைந்துள்ள நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது. தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேதா இல்லத்துக்கு உரிமை கோரியும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை தொடர்ந்து, போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டது தமிழக அரசு.

Also Read: ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

இதற்கிடையில் கடந்த மே மாதம் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதுத் தொடர்பாகத் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதில் வேதா இல்ல நினைவிட அறக்கட்டளை தொடங்கி அதற்குத் தமிழக முதல்வர் தலைவராக இருப்பார் என்றும் துணை முதல்வர் மற்றும் பிற அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதா இல்லம் மற்றும் அங்குள்ள பொருள்களைப் பராமரிக்கவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இந்த அறக்கட்டளையே மேற்கொள்ளும் அவசரச் சட்டம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வேதா இல்லம்

இதனையடுத்து ஜெயலலிதா தரப்பில் ரூ.36 கோடி வரி பாக்கி உள்ளது. எனவே, அவரது இல்லத்தை அரசு கையகப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என வருமான வரித்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டைக் கையகப்படுத்துவதற்காக அதன் இழப்பீடு தொகையான ரூ. 67.90 கோடியை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது தமிழக அரசு. இதனால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் முழுமையாக அரசுடமையாக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்துக்கு உரியவர்கள் இழப்பீடுத் தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: `இந்தத் தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை; சொத்து விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்!’ - ஜெ. தீபா



source https://www.vikatan.com/news/tamilnadu/the-government-owns-jayalalithaas-veda-illam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக