Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

சென்னை: குடும்ப பாரத்தைச் சுமக்க டீ வியாபாரம்! -5வது மாடியில் மாணவனுக்கு நேர்ந்த துயரம்

சென்னை மண்ணடி மூர்தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர்ஹசன். கார் டிரைவர். இவரின் மகன் ரியாஸ் (15). இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்ப படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஜாகிர்ஹசனுக்கு வருமானம் இல்லை. அதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டார். இந்தச் சூழலில் ரியாஸ், குடும்ப சுமையை சுமக்க தயாரானார். பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்த ரியாஸ், டீ வியாபாரம் செய்து வந்தார். சைக்களில் டீ கேனை வைத்துக் கொண்டு கட்டட வேலைகள் நடக்கும் இடங்களுக்கு சென்று ரியாஸ் டீ விற்று வந்தார். அதில் கிடைத்த வருமானத்தில் குடும்ப தேவைகளை சமாளிக்க ரியாஸ் உதவிவந்தார்.

மாணவன் ரியாஸ்

இந்தநிலையில் மண்ணடி அரண்மனைகாயர் தெருவில் 6 மாடி கட்டப்பணிகள் நடந்துவருகின்றன. அங்குச் சென்ற ரியாஸ், 5-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு டீ கொடுக்க சென்றார். அப்போது கட்டுமான பொருள்களில் கால் தடுமாறி லிஃப்ட் அமைக்கக் கட்டியிருந்த இடைவெளி வழியாக கீழே விழுந்தார். அதைப் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

5-வது மாடி

பின்னர் கீழே விழுந்த ரியாஸை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 5-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததால் ரியாஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறியது. மருத்துவமனையில் ரியாஸை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரித்தனர்.

Also Read: சென்னை: டாக்டர் கண்ணன் இறப்பதற்கு முன்..! - மரணத்தில் சந்தேகம் கிளப்பும் பெற்றோர்

3 டீ கப்கள்

இதுகுறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ரியாஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தகவல் ரியாஸின் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் அவர்கள் கதறி அழுதபடி அங்கு வந்தனர். ரியாஸின் குடும்பத்தினர், சின்ன வயதில் குடும்ப கஷ்டத்துக்காக டீ விற்க சென்றவன் இப்படி எங்களை விட்டுவிட்டு போய்விட்டானே என்று கதறி அழுதனர். ரியாஸின் குடும்பத்தினருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

3 டீ கப்கள்

எஸ்பிளனேடு போலீஸார் கூறுகையில், ``மாணவன் ரியாஸ் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறோம். தகுந்த பாதுகாப்பு இல்லாமல் அஜாக்கிரதையாக கட்டடப் பணிகளை மேற்கொண்ட கட்டட உரிமையாளர் மற்றும் கான்டிராக்டர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டீ கொடுக்க ரியாஸ் மாடி படி வழியாக ஏறி சென்றுள்ளார். அவர் எப்படி கீழே விழுந்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

சடலமாக ரியாஸ்

சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று போலீஸார் ஆய்வு செய்தபோது ரியாஸ் கொண்டு சென்ற 3 கப்களில் டீ குடிக்காமல் அப்படியே இருந்தது. அதனால் ரியாஸ் கொடுத்த டீயை தொழிலாளர்கள் குடித்து முடிப்பதற்குள் அவர் கீழே விழுந்துள்ளார். லிஃப்ட் அமைக்கும் பகுதியையொட்டி டீ கொடுக்க ரியாஸ் சென்றபோதுதான் அவர் தவறி விழுந்துள்ளார் என்று போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் குடும்ப பாரத்தை சுமக்க சைக்கிளில் டீ விற்ற மாணவன் ரியாஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/death/chennai-9th-standard-student-died-after-fall-from-5th-floor-of-a-building

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக