Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

பேர் சொல்லா பிள்ளையும் டீ வியாபாரமும்! - லாக்டெளன் சிறுகதை #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பார்த்திபன், வளசரவாக்கம் பஸ்நிறுத்தம் அருகேயுள்ள தனது மாடி அறையிலிருந்து வெளியேவந்து பால்கனி சுவரைப் பிடித்தபடி சாலையை வேடிக்கை பார்த்தான்.

கொரோனா ஊரடங்கு காலமாதலால் சென்னையின் ஆற்காடு சாலை கேட்பாரற்று நீண்டு கிடந்தது. பல நிமிடங்களுக்கொருமுறை கண்ணில் படுகிற இரண்டொரு வாகனங்களும் நிற்காமல் போய்க்கொண்டிருந்தன.

அவனது அறையை ஒட்டி அமைந்துள்ள நால்ரோடு சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்டு ஒன்று உண்டு. அங்கு எப்போதும் நான்கைந்து ஆட்டோக்கள் சவாரிக்குத் தயாராக நிற்கும். ஆட்டோ ஓட்டுநர்கள் கூடிநின்று கலகலவென பேசிச் சிரிப்பார்கள். டீ குடிப்பார்கள், செய்தித்தாள் படிப்பார்கள். அந்த இடமே பரபரப்பாகவும் கலகலப்பாகவும் இருக்கும். இப்போது எதுவுமில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது.

Representational Image

பார்த்திபனின் பார்வை யாரையோ தேடியது. பிறகு, தேடலுக்கு விடை கிடைத்ததுபோல சட்டென அவன் முகம் மாறியது. ஒரு சிறுவன் சில்வர் டீ கேனுடன் தனது சின்ன சைக்கிளை மிதித்தவாறு ஆட்டோ ஸ்டாண்டு அருகே வந்து சைக்கிளை நிறுத்தினான். வயது 12 தான் இருக்கும். முகத்தில் மாஸ்க் போட்டிருந்தான். கைகளுக்கு கிளவுஸ்கூட அணிந்திருந்தான். பழைய சட்டை - பேன்டில் இருந்தாலும் தலையில் அணிந்திருந்த தொப்பி அவனை ஸ்டைலாகக் காட்டியது.

”இன்னைக்கு எப்படியாவது டீயை முழுசும் வித்துறணும்…. அப்பதான் அம்மா வாங்கிட்டு வரச்சொன்ன வீட்டுச் சாமான்லாம் வாங்கிட்டுப் போக முடியும்” என்று தனக்குள் கணக்குப் போட்டவாறே சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணுக்கெட்டியவரை ஆள் நடமாட்டம் இல்லை.

பார்த்திபன் மாடியிலிருந்து சிறுவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"சரியான திமிரு புடிச்சவன்… இன்னைக்காச்சும் டீ கேட்டா மேல கொண்டுவந்து தர்றானான்னு பார்க்கலாம்" என்று தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் சிறுவனைத் திட்டிவிட்டு, அவனை நோக்கிக் குரல் கொடுத்தான்.

“டேய், ரெண்டு டீ எடுத்துகிட்டு மேல வா…”

“சாரி சார்… மாடிக்கெல்லாம் கொண்டு வந்து தர முடியாது. கீழ வந்து வாங்கிக்குங்க.”

Representational Image

ஏற்கெனவே எரிச்சலில் இருந்த பார்த்திபனுக்கு சிறுவனின் பதில் ஆத்திரத்தை உண்டுபண்ணியது. வெடுக்கென திரும்பி அறைக்குள் புகுந்துகொண்டான்.

உள்ளேவந்து வேகமாகக் கதவைச் சாத்திய பார்த்திபனைப் பார்த்து நண்பன் மகேஷ் நக்கலாகச் சிரித்தான்.

“அவன்கிட்ட இன்னைக்கும் உன் பப்பு வேகலியா?”

“நீ வேற கடுப்பேத்தாதடா… அவன சும்மா விடக்கூடாது. அவன் இருக்கிற சைஸுக்கு எவ்வளவு தெனாவட்டா பதில் சொல்றான் தெரியுமா?”

சிறுவன் அப்படிச் சொன்னது முதல் முறையல்ல, மூன்றாவது முறை. பார்த்திபனுக்கு உண்மையிலேயே அவமானமாகப்பட்டது. அதையும் மீறி கீழே போய் டீ வாங்கிக் குடிப்பதற்கு அவனது ஈகோ தடுத்தது.

ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு கொரோனா ஊரடங்கால் தற்சமயம் ’வொர்க் ஃப்ரம் ஹோம்’. ராத்திரி முழுக்க கண்விழித்ததில் தலைவலித்தது. தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்த முடியாமல் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

கீழே நின்றிருந்த சிறுவனுக்கு முகம் வாடியிருந்தது. ஒருவாரமாக இந்த ஏரியாவுக்கு டீ விற்க வந்துகொண்டிருக்கிறான். மோசமில்லை என்று சொல்லுமளவுக்கு இந்நேரம் ஏழெட்டு டீயாவது விற்றிருக்கும். இன்றைக்கு அரைமணி நேரமாகியும் ஒரு டீ கூட போனியாகாமலிருந்தது. மூன்று மணி நேரத்துக்குள் டீ முழுதும் விற்றாக வேண்டும். இல்லையென்றால் சூடு குறைய ஆரம்பித்துவிடும். அதுவேறு அவனுக்குக் கவலையாக இருந்தது.

மாடிக்குக் கொண்டுபோய் கொடுத்திருந்தாலாவது இரண்டு டீ விற்றிருக்கும் என்று அவன் மனம் யோசிக்க ஆரம்பித்தது. சரி, வேறு ஏரியாவுக்காவது போகலாம் என்று சைக்கிளைத் தள்ளும் போது ஒரு குரல் கேட்டது.

``தம்பி, ஒரு டீ குடுப்பா.”

50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அவனை நோக்கி வந்தார்.

``சூடா இருக்கா?”

``இருக்கு சார். நீங்கதான் மொதல் போனி.”

Representational Image

“அப்படியா… நான் ரொம்ப ராசியான கைப்பா… உனக்கு இன்னைக்கு ஏவாரம் சடசடன்னு ஆகும் பாரு…” என்றவர், பேப்பர் கப்பில் சிறுவன் கொடுத்த டீயை வாங்கிக்கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தார்.

“டீ நல்லாருக்கே… ஆமாம், இந்த வயசுலயே ஏவாரத்துக்கு வந்துட்டே… ஸ்கூலுக்குப் போறதில்லையா?”

“செவன்த் படிக்கிறேன் சார்… இப்ப கொரோனாவுக்காக லீவு வுட்ருக்காங்கள்ல… அதான் இந்த ஏவாரம்…”

”ஓகோ… உன் பேரு?”

”பேரெல்லாம் கேட்டு என்ன சார் பண்ணப்போறீங்க” என்றவன், அவர் குடித்துவிட்டு கீழே வீசப்போன டீ கப்பை சட்டென கைநீட்டி வாங்கிக்கொண்டான். கண்ட இடத்தில் டீ கப்பை போடக் கூடாதென்று அதற்கென்றே கொண்டு வந்திருந்த ஒரு பையில் போட்டுக்கொண்டான்.

அதற்குள் மேலும் இரண்டுபேர் வந்து டீ கேட்டனர். சிறுவன் கண்களில் லேசாக நம்பிக்கை மிளிர்ந்தது. அப்போது பார்த்து ஒரு போலீஸ்காரர் பைக்கில் வந்து நிற்க, சிறுவன் பதற்றமானான்.

“என்னடா புதுசா இருக்கு?” என்று போலீஸ்காரர் கரகரத்த குரலில் மிரட்டலாகக் கேட்டதும் கொஞ்சம் நடுங்கிவிட்டான்.

“எத்தனை நாளா நடக்குது வியாபாரம்?”

“ஒரு வாரமா பண்ணிட்டிருக்கேன் சார்…”

”ம்… எந்த ஏரியாவுலர்ந்து வர்றே?”

“மகாலட்சுமி நகர் சார்…”

“சரி, ஒரு டீ குடு”- என்று பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டார். சிறுவனுக்கு கொஞ்சம் பயம் தெளிந்தது. அவருக்கு ஒரு கப்பில் டீ பிடித்தான்.

“குடிச்சவங்கல்லாம் கூட்டம் போடாம எடத்தக் காலி பண்ணுங்க…” என்ற போலீஸ்காரர், சிறுவன் நீட்டிய டீ கப்பை வாங்கிக்கொண்டார்.

Representational Image

ஒரு மடக்கு குடித்துவிட்டு, ”மகாலட்சுமி நகர்னு சொன்னே, மைலாப்பூர் ரேஞ்சுக்கு மணக்குதேடா… ஏலக்கால்லாம் போட்ருக்கு…” என்று அவர் டீயை சுவைத்துக்குடிக்க, சிறுவனுக்கு முகம் மலர்ந்தது.

குடித்து முடித்துவிட்டு அவர் பணத்தை நீட்ட, ``பரவால்ல சார், இருக்கட்டும்…” என்றான்.

“டேய், புடிடா… ஒங்கப்பாவே வந்து கேட்டாலும் ஓசில மட்டும் குடுக்கக் கூடாது. புரியுதா?”

அவரின் அதட்டலுக்கு பயந்து தலையாட்டியவாறே வாங்கிக்கொண்டான்.

“ஆமாம், உன் பேரென்ன?”

“பேரெல்லாம் எதுக்கு சார்…”

“ஏன், வெட்கப்படற மாதிரி ஏதாவது பேர் வச்சுட்டாங்களா? எனக்கும் அப்படித்தான். என் பேர கேட்டா நீயே சிரிப்ப…” என்றார்.

சிறுவன் ஆர்வமாக அவரைப் பார்க்க, ”என் பேரு பாவாடை” என்றார். சிறுவன் உண்மையிலேயே சிரித்துவிட்டான்.

“முழுப்பேரு பாவாடை சாமி…. எவன் அப்புடிக் கூப்புடறான்… சரி, ரொம்பநேரம் இங்க நிக்காத. இந்த ஏரியா இன்ஸ் வந்தார்னா வம்பாயிடும். கூட்டம் நிக்கிறதப் பாத்தார்னா, கொன்றுவாரு… சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணிடு… புரியுதா?”

சிறுவன் புன்னகையோடு தலையாட்டினான்.

போலீஸ்காரர் பைக்கில் ஏறி கிளம்பியதும் அங்கு நின்றிருந்தவர்களுக்கு அவசர அவசரமாக டீ பிடித்துக்கொடுத்தான். மேலும், இருவர் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும் கொடுத்துவிட்டு, அவர்கள் குடித்த கப்பை வாங்கி ஒவ்வொன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள் இன்ஸ்பெக்டரின் ஜீப் சரேலென்று வந்து அவன் எதிரே நின்றது.

Representational Image

இரண்டு போலீஸார் கையில் லத்தியோடு ஜீப்பிலிருந்து தபதபவென இறங்கி டீக்குடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி வேகமாக வர, டீ குடித்துக்கொண்டிருந்தவர்கள் டீ கப்பை பாதியிலேயே விட்டெறிந்துவிட்டு சிதறி ஓட, இரண்டு போலீஸாரும் அவர்களை மடக்கிப் பிடித்து லத்தியால் விளாசினார்கள். அவர்களின் வாகனங்களை கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்கினார்கள்.

கீழே வீசியெறியப்பட்ட டீ கப்புகளை சிறுவன் அவசர அவசரமாகப் பொறுக்கியெடுத்து பையில் போட்டுக்கொண்டு சைக்கிளைத் தள்ளினான். அதற்குள் லத்தியை ஓங்கியவாறே அவனை நெருங்கிய ஒரு போலீஸ், “கொரோனா வந்து அவனவன் கொத்து கொத்தா செத்துக்கிட்டிருக்கான்… உனக்கு டீ வியாபாரம் கேக்குதா? ஓடு, ஓடு…” என்று லத்தியால் சைக்கிளை முன்னும் பின்னும் அடித்து நொறுக்கினார்.

பதறிய சிறுவன், “சார், சார்… போயிடறேன் சார்… சைக்கிள ஒண்ணும் பண்ணிடாதீங்க சார்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே டீ கேன் மீது லத்தியால் வேகமாக ஒரு அடி விழ, டீ கேன் ’நங்’கென்ற சத்தத்தோடு நசுங்கி, ஒரு ஓட்டை வழியாக டீயெல்லாம் ஆவிபறக்க பீறிட்டது.

அதைப் பார்த்து ``அய்யோ” என்று துடித்த சிறுவன், என்ன செய்வதென தெரியாமல் தவித்து தலையில் கைவைத்தவாறு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். கேனிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த டீ அவன் முன்பாக தரையை நனைத்துக் கொண்டிருக்க, இன்ஸ்பெக்டரின் ஜீப் அதிகார உறுமலோடு கிளம்பிச்சென்றது. சத்தம் கேட்டதில் மாடியறையிலிருந்து வெளியேவந்து நின்றிருந்த பார்த்திபனும் மகேஷும் செய்வதறியாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

Representational Image

சிறுவன் கவலையோடு எழுந்து, கேனிலிருந்து டீ ஒழுக, ஒழுக சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பரிதாபமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அதன்பிறகு நான்கு நாள்களாகியும் சிறுவனைக் காணவில்லை. பார்த்திபன் இனம்புரியாத ஒரு தவிப்புடன் பால்கனியில் வந்து நிற்பதும் யோசிப்பதுமாக இருந்தான்.

இன்றும் அதேபோல பால்கனியில் வந்து நின்றவனுக்கு முகம் சட்டென பிரகாசமடைந்தது. சிறுவன் மெயின் ரோட்டுக்கு அப்பால் உள்ள தெருமுனையில் நின்றவாறு இரண்டு, மூன்று பேருக்கு டீ கொடுத்துக்கொண்டிருந்தான். பார்த்திபனும் மகேஷும் மாடியிலிருந்து இறங்கி அவனருகே சென்றார்கள்.

”ரெண்டு டீ.”

பார்த்திபன்தான் கேட்டான். சிறுவன் மலர்ந்த முகத்துடன் இருவருக்கும் டீ கொடுத்தான். பார்த்திபன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் டீ கேனையே பார்த்தான். ஒடுக்கு, ஓட்டை இல்லாமலிருந்தது.

“டீ கேனை சரி பண்ணிட்டியா?” என்றான்..

“இல்ல சார்… அதை சரி பண்ண முடியில… எங்க ஏரியாவுல ஒருத்தர்கிட்ட இதை வாடகைக்கு எடுத்துக்கிட்டு வந்துருக்கேன். டீ வித்துட்டுப் போயி தினம் 50 ரூபா குடுத்துடணும்.”

பார்த்திபன் சடாரென தன் பாக்கெட்டில் கைவிட்டு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“புதுசா ஒரு டீ கேன் வாங்கிக்க…” என்றான் பார்த்திபன்.

“வேண்டாம் சார். நீங்க டீக்கு மட்டும் காசு குடுத்தாபோதும். எங்கம்மா யார்கிட்டயும் எதுவும் கேக்கக் கூடாது, வாங்கக் கூடாதுன்னு சொல்லிருக்கு” என்றான்.

பார்த்திபனும் மகேஷும் எவ்வளவோ வற்புறுத்தியும் சிறுவன் பணத்தை வாங்கமறுத்து விட்டான். பார்த்திபனுக்கு மனசு கேட்கவில்லை.

Representational Image

”வீட்ல பெரியவங்க இருக்கும்போது நீ எதுக்கு இப்பிடி வந்து கஷ்டப்படறே… அதும் இந்த லாக்டௌன் நேரத்துல?” என்றான்.

“என்ன சார் பண்றது… வீட்ல பெரியவங்கன்னு பார்த்தா எங்கம்மா மட்டும்தான். வீட்டு வேலைக்குத்தான் போயிட்டிருந்தாங்க. ஆனா இப்ப கொரோனா பயத்துனால எந்த வீட்லயும் எங்கம்மாவ வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க… அப்புறம் என்ன பண்றது… நானாச்சும் சம்பாரிச்சாத்தானே சாப்பிட முடியும்?”

“அப்பா?”

“அப்பாவ நான் போட்டோவுல மட்டும்தான் சார் பாத்துருக்கேன். நான் கொழந்தையா இருக்கும்போதே இறந்துட்டாரு.”

சொல்லிவிட்டு சிறுவன் டீ பிடித்துக்கொடுப்பதில் கவனமாக இருந்தான். சிறுவனது உழைப்பின்மீதும் உறுதியின்மீதும் பார்த்திபனுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அவனை புதிதாகப்பார்த்தான். எல்லோரும் கேட்டதுபோல் பார்த்திபனும் சிறுவனிடம் பெயரைக்கேட்டான். சிறுவன் சொல்லவில்லை.

அறையை நோக்கித் திரும்பிநடந்த பார்த்திபனுக்கும் மகேஷுக்கும் ஒன்றுமட்டும் புரியவே இல்லை. இவ்வளவு இணக்கமாக நடந்துகொள்ளும் சிறுவன் எத்தனையோ தடவை கேட்டும் மாடிக்கு டீ கொண்டுவந்து தர மறுத்ததையும், யாரிடமும் தன் பேரைச் சொல்லாமல் மழுப்பியதையும் அவர்களால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

வீட்டு முன்பாக சிறுவன் சைக்கிளில் வந்து இறங்கியதும் அவன் அம்மா சரஸ்வதி சற்றே பதற்றத்தோடு ஓடிவந்து அவனை இறுகக் கட்டிக்கொண்டாள்.

“ஏம்மா டென்ஷனா இருக்கறே, என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல… நீ வர கொஞ்சம் லேட்டாயிடுச்சுல்ல, அதான்… உனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லியே?”

Representational Image

“இல்லம்மா… நீ சொன்ன மாதிரி கவனமாதான் நடந்துக்கறேன். ரூமுக்கு டீ கொண்டு வா, கடைக்கு டீ கொண்டு வான்னு யார் கேட்டாலும் நான் கொண்டுபோய் குடுக்கறதில்ல. ஆனா, இன்னைக்கி ஒரு ஆள் டீ நல்லாருக்குன்னு என்னை தட்டிக்குடுத்து இறுக்கிப் புடிச்சுக்கிட்டாரு… ’மேல கை வைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க’ன்னு அவர்கிட்ட கறாரா சொல்லிட்டேன். இன்னைக்கி ஒரு டீ கூட மிச்சமில்லம்மா, முழுசும் வித்துருச்சு. நாளைக்கு இன்னும் கொஞ்சம் டீ சேர்த்து குடுத்துவிடுறியா?”

சிறுவனை ஆசையோடு அணைத்துக்கொண்ட சரஸ்வதி, “இந்த ஏவாரமே போதும்… தினமும் நீ பத்தரமா வீடு வந்து சேர்றதுக்குள்ள என் நெஞ்சு படுறபாடு எனக்குத்தானே தெரியும். போய் குளிச்சுட்டு இந்தப் பாவாடை சட்டைய மாத்திகிட்டு வா…” என்றவாறே அவன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழட்டினாள்.

முடிந்து வைக்கப்பட்டிருந்த கூந்தல் அவிழ்ந்து முதுகுக்கு கீழே தொங்கியது. ``அம்மா… இன்னைக்கி எத்தனை பேரு என் பேரக் கேட்டாங்க தெரியுமா? நான் யார்கிட்டயும் சொல்லவே இல்ல… எதுக்கும்மா இந்த ஆம்பளப்புள்ள வேஷம்? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்றவாறே சரஸ்வதியின் கையிலிருந்த பாவடை சட்டையை வாங்கிக்கொண்டு குளியலறை நோக்கி ஓடினாள் மலர்விழி. மகளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பதென்று சரஸ்வதிக்குத் தெரியவில்லை.

Representational Image

’நகைநட்டு அணிந்துகொண்டு நடு இரவில் ஒரு பெண் தைரியமாக என்றைக்கு நடந்துபோக முடிகிறதோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’ என்று காந்தி சொன்னதாக சரஸ்வதி கேள்விப்பட்டிருக்கிறாள்.

நகைநட்டோடு நடுஇரவில் போகுமளவுக்கு சுதந்திரமில்லாவிட்டாலும் பெண்ணாகப் பிறந்த ஒரு சிறுமியை பட்டப்பகலில்கூட தைரியமாக வெளியே அனுப்ப முடியாத அளவுக்கல்லவா இன்றைக்கு பாழ்பட்டுக் கிடக்கிறது சுதந்திரம் என்று எண்ணியவாறே அடுப்பைப் பற்ற வைத்தாள் சரஸ்வதி. மகள் பத்திரமாக வீடுவந்து சேர்ந்துவிட்ட பின்னும் அவள் நெஞ்சுக்குள் படபடப்பு அடங்கவில்லை.

- ந.அன்பரசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-of-a-poor-kid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக