Ad

வெள்ளி, 3 ஜூலை, 2020

கொரோனா மரணம்; 500 பேருக்கு மேல் நல்லடக்கம்... துணிச்சலோடு களத்தில் நிற்கும் அரசியல் அமைப்புகள்!

`கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' எனும் உயரிய தத்துவத்துக்கு சொந்தக்காரர்களாகிய தமிழர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் தனித்தனி தீவுகளாக்கிவிட்டது ஒரு நுண்ணுயிரி. சீனாவில் தொடங்கி, உலகெங்கும் பரவி, இந்தியாவுக்குள்ளும் நுழைந்து, நாளொன்றுக்கு தமிழகத்தில் மட்டும் 4000 பேருக்கு மேல் பாதிக்கும் அளவுக்கு வீரியமடைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 100 நாள்களுக்கும் மேலாக நம் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. நண்பர்களை, உறவினர்களை என யாரையும் சந்திக்க முடியாதபடிக்கு நாடுகளுக்கிடையே மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையேயும் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கிவிட்டது, இந்தக் கொரோனா என்னும் கொடிய நுண்ணுயிரி.

கொரோனா

வேலைக்குச் சென்று வீடு வந்து, ஆசையாய் தன் குழந்தையை அப்பாக்கள் அள்ளி முத்தமிட்ட காலம் போய், வீட்டுக்குள்ளேயே அஞ்சி அஞ்சி வாழும் சூழலே இருக்கிறது. அதிலும், குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால், அனைவரிடமிருந்தும் விலகி பல நாள்கள் தனியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சின்னஞ்சிறிய குழந்தைகள்கூட தங்கள் பெற்றோரைப் பிரிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களை நிறைத்திருக்கின்றன. கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துவிட்டால், அதைவிட சோகம். ஒரு உயிர் இம்மண்ணை விட்டுப் போன துயரம் ஒருபுறமெனில், குடும்பத்தாரும், நண்பர்களும்கூட அருகில் சென்று பார்க்க முடியாத பெருந்துயரத்தைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இறந்த உடல்களையும்கூட கொரோனா பரவிவிடும் என்கிற அச்சத்தின் காரணமாக, ஏனோதானோவெனக் கையாளும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

உதாரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமனின் உடலை, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம் மற்றும் வேலங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள்மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தேறியது. சுகாதாரப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் படுகாயமடைந்த காட்சிகளையும் நாம் கண்டோம். மருத்துவக் கவுன்சிலின், அரசியல் கட்சிகளின் கண்டிப்புகளுக்குப் பிறகும், இறந்த `உடல்களிலிருந்து கொரோனா பரவாது' என அமைச்சர் சொன்னபிறகும்கூட இன்றும் அந்த ஒவ்வாமை பெரும்பாலானவர்களிடத்தில் இன்றும் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சேவை மனதோடு, கொரோனாவால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்துவருகின்றன சில அமைப்புகள்.

நல்லடக்கம் செய்யும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர்.

தமிழகத்தில், நேற்றுவரை 1,02,721 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். 1,385 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில், கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் நல்லடக்கம் செய்திருப்பது தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகமும், எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளும்தான்.

சுனாமியாகட்டும், சென்னைப் பெருவெள்ளமாகட்டும், ரத்த தானமாகட்டும், எப்போதும் தமிழக மக்களுக்காகக் களத்தில் நிற்கும் இந்த அமைப்புகள், இந்தக் கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக மக்களைக் கைவிடவில்லை.

அந்தவகையில், இந்தச் சேவை குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், பேராசிரியர் ஹாஜாக்கனியிடம் பேசினோம்...

``எங்கள் மார்க்கம், பிறருக்கு உதவி செய்வதை இறை வணக்கமாக முன்வைத்திருக்கிறது. படைத்த இறைவனுக்கு வணக்கம் செய்தல், பிறருக்கு உதவி செய்தல், நம் உடலை சரியாகப் பேணிக்கொள்ளுதல் ஆகிய மூன்றும்தான் இறைவணக்கம் என எங்கள் மார்க்கம் கற்பித்திருக்கிறது. அந்த வகையில், பிறருக்கு உதவி செய்வது இறைவனுக்குச் செய்யும் தொண்டு என எங்கள் அமைப்புத் தொண்டர்களுக்கு கற்பித்திருக்கிறோம். அதன் காரணமாக, 2004 சுனாமி, 2015 சென்னைப் பெருவெள்ளம் ஆகியவற்றில் மக்களுக்கு சேவை செய்ய எங்கள் தொண்டர்கள் களத்தில் நின்றார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது, கொரோனா இக்கட்டிலும் களத்தில் நிற்கிறார்கள்.

இல்லாதவர்களுக்கு உணவு கொடுப்பதில் தொடங்கி, இறந்தவர்களை நல்லடக்கம் செய்வது வரை செய்துவருகிறோம்'' என்றவரிடம், கொரோனா தொற்று பரவிடும் என்கிற அச்சமில்லையா என்று கேட்டேன்.

``கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தவுடனே, ஊரடங்கால் மக்கள் சிரமப்பட ஆரம்பித்த உடனே, மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தோம். அதேநேரம், கவனக்குறைவால் தொற்றை ஏற்றுக்கொண்டு, அடுத்தவருக்கும் அதைப் பரப்பும் வேலையைச் செய்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம். ஏப்ரல் முதல் வாரத்தில், எங்கள் அமைப்பின் மருத்துவ சேவை அணியுடன் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை ஒவ்வொரு தன்னார்வலருக்கும் முறையாகக் கற்பித்தோம்.

முதலில், நாங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உணவில்லாத ஏழைகளுக்கும் உணவு கொடுக்கும் வேலையை மட்டும்தான் செய்துவந்தோம். ஆங்காங்கே கொரோனாவால் இறந்தவர்களின் உடலை முறையாக அடக்கம் செய்யாமல் தூக்கி வீசும் சம்பவங்களைப் பார்த்தோம். பாண்டிச்சேரியில் உடல்கள் தூக்கிவீசப்பட்டு, முதல்வர் நாராயணசாமி அதைக் கண்டித்த சம்பவத்தையும் ஊடகங்கள் வழியாகப் பார்த்தோம். அதற்குப் பிறகுதான், நாம் ஏன் அமைப்பின் சார்பாக இறந்த உடல்களை முறையான மரியாதையுடன் நல்லடக்கம் செய்யக்கூடாது என முடிவெடுத்து செயலில் இறங்கினோம்.

பேராசிரியர் ஹாஜாக்கனி

இன்றுவரை சென்னை, விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருச்சி, ராமநாதபுரம் என தமிழகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 200 பேரை நல்லடக்கம் செய்திருக்கிறோம். அவர்களில், 130 பேர் கொரோனாவால் உயிரிழந்தவர்கள். உடலைத் தொட முடியாத சூழ்நிலையில், அந்த உடலை மரியாதையுடன் குழிக்குள் இறக்குவதற்கும் புதிய யுக்தியைக் கையாண்டு, நல்லடக்கம் செய்துவருகிறோம்.

தமிழகம் முழுவதும், நூற்றுக்காணக்கான எங்கள் அமைப்பு உறுப்பினர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். ஷிஃப்ட் அடிப்படையில் இந்த வேலையைச் செய்துவருகிறோம். மத வேறுபாடுகளெல்லாம் அறவே பார்ப்பதில்லை. எங்களுக்கு பலர் பாதுகாப்புக் கவச உடைகள் அன்பளிப்பாகத் தருகிறார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்'' என்கிறார் அவர்.

Also Read: கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா? #ExpertOpinion

அடுத்ததாக, இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் தெஹ்லான் பாகவியிடம் பேசினோம்,

``தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியின் சார்பாக, கொரோனா பாதிப்பால் இறந்த 100 பேரை இதுவரை அடக்கம் செய்திருக்கிறோம். எங்களின் மார்க்க அமைப்பான, `பாப்புலர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா' அமைப்பின் சார்பில் 100 பேருக்கும் மேல் நல்லடக்கம் செய்திருக்கிறோம், புதுச்சேரியில் 10 பேரை நல்லடக்கம் செய்திருக்கிறோம்.

இந்தப் பணிகளைச் செய்வதற்கு, சென்னையில் மட்டும் ஒரு குழுவுக்கு எட்டு பேரைக்கொண்ட 18 குழுக்களை அமைத்திருக்கிறோம். அவர்களுக்கு, மருத்துவர்களைக் கொண்டு சரியான வழிமுறைகளை வழங்கியிருக்கிறோம். உடல்களை எப்படி கண்ணியமாகக் கையாள்வது என்பது குறித்தும் அறிவுறுத்தியிருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்வதையே முதன்மைப் பணி என்பதை எங்கள் தொண்டர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சொல்லி வளர்த்திருக்கிறோம். அவர்களும் மிகச்சிறப்பாக ஈடுபட்டுவருகிறார்கள்.

தெகலான் பாகவி

இதுவரை இந்தச் சேவையில் ஈடுபட்டுவரும் எங்கள் தொண்டர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இறந்தவர்களின் மூலம் பாதிப்பு ஏற்படாது என்பதை அரசு மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்கவில்லை. அதனால்தான் பல இடங்களில் இறந்த உடல்களைத் தூக்கி வீசிச்செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. அரசும் ஊடகமும் மக்களிடம் இதைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதை எங்களின் கோரிக்கையாக முன்வைக்கிறோம்'' என்கிறார் தெஹ்லான் பாகவி.

எத்தனை எதிர்மறைச் செயல்கள் நிகழ்ந்துகொண்டிருப்பினும் நல்ல விஷயங்கள் எப்போதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உங்கள் பகுதிகளிலும் இப்படி தன்னார்வலர்களாய் பணிபுரிகிறவர்கள் பற்றி... பாஸிட்டிவ்வாக பிறருக்கு உதவுகிற உங்கள் நண்பர்களைப் பற்றி கமென்ட்டில் பதிவிடுங்களேன்.



source https://www.vikatan.com/health/news/tmmk-and-sdpi-volunteers-ensures-decent-burial-of-covid-19-patients-corpses

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக