Ad

வியாழன், 23 ஜூலை, 2020

தஞ்சாவூர்: `ரூ.5 கோடி வேணும்!’- நகைக்கடை அதிபர் கடத்தலில் சிக்கிய 6 பேர்

தஞ்சாவூர் அருகே நகைக் கடை உரிமையாளர் கடத்தப்பட்ட வழக்கில்,டி.வி. நிருபர் உள்பட 6 பேரை தனிப்படை போலீஸ் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் அவர் ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்டதும் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நகைக் கடை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த காடுவெட்டி விடுதியை சேர்ந்தவர் சீமான் (50) இவர் குடும்பத்துடன் ஊரணிபுரத்தில் வசித்து வருவதுடன் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை இவர்களுக்கு 7 வயதில் பாலசிவானி என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி கல்லணை கால்வாய் ஆற்றுக்கரையில் வாக்கிங் சென்ற சீமானைக் காணவில்லை. இதுகுறித்து சீமானின் அண்ணன் ராமச்சந்திரன் திருவோணம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இந்நிலையில், மாலை 5 மணியளவில்,சீமானின் அத்தை மகன் ராஜா என்பவருக்கு,போன் செய்த சீமான், `நான் நலமாக உள்ளேன். ஆனால், எங்கு இருக்கிறேன் என தெரியவில்லை. உடனே, போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

போலீஸ் கைது செய்துள்ள சின்னையன்

அப்போது, சீமானின் மொபைலில் பேசிய மற்றொரு நபர், `பணம் ரெடி பண்ணுங்க. அப்பதான் சீமான் திரும்பி வருவார்’ என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.

Also Read: `எங்க இருக்கேன்னு தெரியல; புகாரை வாபஸ் வாங்குங்க!’ தஞ்சை நகைக்கடை அதிபர் கடத்தல்?

இதனை, சீமான் குடும்பத்தினர் போலீஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டதுடன் எஸ்.பி.,தேஷ்முக் சேகர் சஞ்சய் ஊரணிபுரத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார்.

கைது செய்யப்பட்ட ஆனந்த்

மேலும், சீமானை கண்டுபிடிப்பதற்காவும், கடத்தியவர்களை கைது செய்வதற்காகவும் எஸ்.பி, சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் தலையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், நேற்று மதியம் 2.30 மணியளவில் மயிலாடுதுறை பகுதியில் காரிலிருந்து சீமானை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

கைது செய்யப்பட்ட மதிவதனன்

பின்னர், சீமான் அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் மூலமாக போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு தஞ்சாவூரிலிருந்து சென்ற போலீஸார், சீமானை அழைத்து கொண்டு எஸ்.பி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது சீமான், `என் கண்ணைக் கட்டி அழைத்து சென்றனர். அதனால், கடத்தியவர்கள் யார் எனத் தெரியவில்லை’ என கூறியதாக தெரிகிறது. அதன்பின்னர், சீமானை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கடத்தல்காரர்கள் பேசிய செல் நம்பரை வைத்து அவர்கள் யார் எங்கிருக்கிறார்கள் என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குணசேகர்

இந்தநிலையில், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆனந்த் (37), தஞ்சை, மாதாக்கோட்டையை சேர்ந்தவர்களான சின்னையன் (58), கதிரவன் (32), ஒரத்தநாடு அடுத்த சோழன்கரையைச் சேர்ந்த குணசேகர் (33), தெற்கு கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ்(37), ஊரணிபுரத்தை சேர்ந்த மதிவதணன் (50) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். தப்பியோடிய டிரைவர் சுரேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.

இதில், மதிவதணன் என்பவர் தனியார் டி.வி ஒன்றில் நிருபராகவும், திருமணங்களுக்கு வீடியோ எடுக்கும் தொழிலும் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``ஆன்ந்த மற்றும் சின்னையன் மீது ஏற்கெனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கடத்தல் ஒன்று வழக்கு உள்ளது. சில தினங்களாக சீமானைக் கண்காணித்து வந்ததுடன், அவரிடம் பணபுழக்கம் இருப்பதை அறிந்து அவரை கடத்துவதற்கு முடிவு செய்து, அதன்படியே செய்தனர்.

பிரகாஷ்

மேலும், சீமானிடம் ரூ.5 கோடி பணம் கேட்டு, ஆனந்த் மற்றும் சின்னையன் மிரட்டியுள்ளனர். சீமான், `அவ்வளவு பணத்துக்கு நான் எங்கு போவேன்? 2 லட்சம் அல்லது 3 லட்ச ரூபாய்தான் என்னால் புரட்ட முடியும்’ எனக் கூறியுள்ளார். பின்னர், வெள்ளை பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

அந்த பத்திரம் மற்றும் சீமான் செல்போன் ஆகியவை மதிவதணன் வைத்து கொண்டார். பின்னர் ஆனந்த் மற்றும் மதிவதணன் ஆகியோர் உள்ளூரிலேயே இருந்து கொண்டனர் மற்றவர்கள் காரில் சீமானை அழைத்து கொண்டு சென்றுவிட்டனர்.

கதிரவன்

அந்த பத்திரம் மற்றும் சீமான் செல்போன் ஆகியவை மதிவதணன் வைத்து கொண்டார். பின்னர், ஆனந்த் மற்றும் மதிவதணன் ஆகியோர் உள்ளூரிலேயே இருந்து கொண்டனர் மற்றவர்கள் காரில் சீமானை அழைத்து கொண்டு சென்றுவிட்டனர். தலைமறைவாக இருந்த 6 பேரையும் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளோம்’’ என்றனர். இந்தக் கடத்தல் வழக்கில் போலீஸ் இரண்டு நாள்கள் இரவு, பகல் பாராமல் கண்விழித்து துரிதமாக செயல்பட்டதுடன், 48 மணி நேரத்தில் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/tanjore-police-arrests-6-in-jewellery-owner-abduction-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக