Ad

சனி, 18 ஜூலை, 2020

``தமிழகத்தில் பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி கனவு“ - சரியான முடிவா... போகாத ஊருக்கு வழியா? #2021TNElection

- இப்படி ஒரு கருத்தைச் சொல்லத் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கு ஒரு நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையைக் கொஞ்சம் அதிகமாகவே கொண்டுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.

தமிழிசை சௌந்தரராஜன்

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பா.ஜ.க தனித்துக் களம் கண்டது. அன்றைக்கு பா.ஜ.க-வின் தமிழகத் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதை அவ்வளவு எளிதாகத் தமிழக மக்கள் மறந்துவிட முடியாது. ``பழம் பழுக்கிறதோ இல்லையோ, இலை துளிர்க்கிறதோ இல்லையோ, சூரியன் உதிக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்“ என்று அவர் பேசிய வசனங்கள் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமானது. அவர் தமிழகத் தலைவர் பதவியிலிருந்து விடைபெறும் வரை தாமரை மலரும் என்கிற அவருடைய கருத்தில் பின்வாங்கவே இல்லை. இப்போது தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் எல்.முருகன் பதவிக்கு வந்த ஒருமாதத்திலே தமிழிசைக்கு இணையாக உத்வேகமாகக் கருத்துகளைப் பகிர ஆரம்பித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க-வுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை வரிசையாக அறிவித்துவருகிறார் எல்.முருகன். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முருகன், ``தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பிரதிநிதித்துவத்திலும் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. வளர்ச்சிப்பாதையில் பா.ஜ.க தமிழகத்தில் செல்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றியைப் பெற்று கூட்டணி ஆட்சியில் பங்குபெறும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தோல்வியைச் சந்தித்தார்கள். அதே போல் 2019-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்து. கன்னியாகுமரி, கோயம்புத்தூர் பகுதியில் கணிசமான வாக்கு வங்கியை மட்டும் அது தக்கவைத்தது. ஆனால், அதைமட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆட்சியில் பங்கீடு என்கிற எண்ணத்துக்கு பா.ஜ.க வந்துள்ளதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

எல்.முருகன்

அ.தி.மு.க-வுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த பா.ஜ.க, அந்த நிலைப்பாட்டில் இதுவரை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வுடன் இணக்கமான போக்கையே இப்போது வரை கையாண்டு வருகிறது. ஆனால், எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி உறவு நீடிக்குமா? என்கிற கேள்வி இப்போதே இரண்டு கட்சிகளிலும் எழுந்துள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும், என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக மத்தியிலும் வட மாநிலங்களிலும் பலமாக உள்ள பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் இப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, எம்.பியோ கூட இல்லாத நிலையில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்வதுதான் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

இதற்குப் பின்னால் பா.ஜ.க தரப்பில் சில வியூகங்களைச் சொல்கிறார்கள். ``அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது பா.ஜ.க. அதனாலே பல்வேறு புகார்கள் தமிழக அமைச்சர்கள் மீது எழுந்தும் அந்த விவகாரத்தை இதுவரை அமுக்கியே வைத்துள்ளது. அதே போல் தங்களுடன் கூட்டணி அமைத்தால் தி.மு.க-வுக்கு கடைசி நேரத்தில் குடைச்சல் கொடுக்கவும் தங்கள் தரப்பு தயாராக இருக்கிறது” என்பதை அ.தி.மு.க-விடம் சொல்லியிருக்கிறோம். பா.ஜ.க-வுக்கு ஒரு காலத்தில் மாவட்டத்துக்கு ஒருவர் இருந்தாலே அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சி கிளை வரை எங்கள் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம். இந்தத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சி என்கிற தொலைநோக்கு திட்டத்தோடுதான் எங்கள் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை அ.தி.மு.க எங்களுடன் கூட்டணிக்கு இணங்கிவர மறுத்தால் அது அவர்களுக்குதான் இழப்பு. அந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளை எங்கள் பக்கம் கொண்டுவந்து அ.தி.மு.க-வுக்கு ஷாக் கொடுக்கவும் தவறமாட்டோம்'' என்கிறார்கள்.

மோடி - எடப்பாடி பழனிசாமி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே அ.தி.மு.க கூட்டணியில் சீட் பெற பா.ஜ.க நடத்திய போராட்டத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. மத்தியில் ஆட்சியிலிருந்தும், அ.தி.மு.க-வையே ஆட்டி படைக்கும் சக்தியாக இருந்தும் ஐந்து சீட்களை பெறவே திண்டாடிவிட்டது பா.ஜ.க. இந்தநிலையில் வரும் தேர்தலில் கூட்டணி அரசு என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் சொல்லியிருப்பது அ.தி.மு.க-வை உஷாராக்கிவிட்டது. தமிழகத்தில் கூட்டணி அரசு என்கிற பேச்சே இதுவரை இருந்ததில்லை. அதிலும் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த 50 ஆண்டுகளில் தனித்த பெரும்பான்மை என்கிற அந்தஸ்தில் மட்டுமே ஆட்சியைத் தக்கவைத்துள்ளனர்.

2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வுக்குத் தனித்த மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் தயவுடன் ஐந்தாண்டுகள் கூட்டணி அரசைக் கடத்திய தி.மு.க, காங்கிரஸை மறந்தும் அமைச்சரவையில் சேர்க்கவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க வலுவான கோஷங்களை முன்வைத்துவருகிறது. தமிழகத்திற்கு என்று சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களை பா.ஜ.க-வும் இதுவரை செய்யவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி அரசு என்று பா.ஜ.க வாய்திறந்திருப்பதை அ.தி.மு.க-வின் தலைவர்கள் விரும்பவில்லை. அதை தாண்டி கடந்த சில நாள்களாகவே அ.தி.மு.க-வுக்குள் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒரு விவகாரமே, ``தேவையில்லாத சுமையான பா.ஜ.க-வை வரும் சட்டமன்றத் தேர்தலில் தூக்கிச் சுமக்க வேண்டாம்” என்பதே. பல மூத்த தலைவர்களும் இந்தக் கருத்தையே தொடர்ந்து முன் வைத்துவருகிறார்கள். பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்தால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு போல மீண்டும் நமக்கு வந்துவிடும் என்று வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துள்ளனர். இது எடப்பாடியையும் யோசிக்க வைத்துவிட்டது. ``இந்த நேரத்தில் கூட்டணி அரசு என்று முருகன் வாய்திறந்திருப்பதே தேவையில்லாத ஒன்று'' என்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்.

பா.ஜ.க அலுவலகம்

``தி.மு.க-வுக்கு எதிராக வலுவான அணியை அமைக்க வியூகம் அமைப்பது பா.ஜ.க-வின் சாதுர்யமாக இருக்கலாம். ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட அந்தக் கட்சிக்கு இப்போது இல்லை. அடுத்த தேர்தலில் கூட்டணியில் இடம்பிடித்து தனது கட்சி சார்பில் உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்பத் திட்டமிடுவதை விட்டு கூட்டணி அரசுக்கு அந்தக் கட்சித் தலைவர் இப்போதே அடிபோடுவது அபத்தம்” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

ஆனால், இதற்கு பா.ஜ.க தரப்பில் சொல்லப்படும் கணக்கு வேறுவிதமாக இருக்கிறது. ``அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குப் பெரும்பான்மை பெறாது. எங்கள் கணக்குப்படி தி.மு.க கூட்டணியில் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் சந்திக்கும் என்பதால் அந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அப்போது பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருந்தால் கூட எங்கள் தயவில்தான் புதிய அரசு அமையும்” என்று போகாத ஊருக்கு வழி சொல்லும் கதையாக ஒரு கணக்கைச் சொல்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

Also Read: பா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500'... அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்! #2021TNElection

முதலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா? என்கிற கேள்விக்கே விடை இன்னும் கிடைக்காத நிலையில் பா.ஜ.க-வின் இந்த அதீத நம்பிக்கை பற்றி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன், ``எல்லா கட்சிக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பது போல எங்களுக்கும் உள்ளது. இன்றைக்கு பா.ஜ.க தமிழகத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. கூட்டணி கணக்குகள் கடைசி நேரத்தில் மாறலாம். அரசியலில் யாரும் எப்போதும் இடம்மாறலாம். ஆனால், எங்கள் இலக்கை நோக்கை நாங்கள் சரியாக பயணிக்கிறோமா என்றுதான் பார்க்க வேண்டும்” என முருகன் கருத்துக்கு வலுசேர்த்துள்ளார். ஆனால், அ.தி.மு.க தரப்பில் பா.ஜ.க-வுடனான கூட்டணியைக் கடைசி நேரத்தில் உதறிவிட்டுத் தேர்தலைச் சந்திப்பதையே விரும்புகிறார்கள் என்று பா.ஜ.க-வினரும் அறிந்து வைத்துள்ளனர்.

வைகைச் செல்வன்

``முருகன் சொன்ன கூட்டணி ஆட்சிக்கான கனவு சரி... ஆனால், எந்தக் கட்சியுடன் கூட்டணி ஆட்சி என்பதை பா.ஜ.க முதலில் முடிவுக்கு செய்யட்டும்” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். பா.ஜ.க தலைவரின் கருத்து குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் கேட்டபோது, ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்த எந்தத் தேர்தலிலும் கூட்டணி அரசு அமையவில்லை. அ.தி.மு.க தனித்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதுதான் வழக்கம். தமிழக அரசியல் களம் கூட்டணி ஆட்சிக்குப் பழக்கப்படாத ஒரு மாநிலம். தேசியக் கட்சிகளின் நிலைப்பாடும், தமிழகத்தின் திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் கூட்டணி அரசுக்கு பழக்கப்படாத ஒன்று. அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். பா.ஜ.க-வுடன் கூட்டணியா, இல்லையா? என்பதை அ.தி.மு.க தலைமைதான் முடிவு செய்யும்” என்கிறார் தெளிவாக.

``முருகனின் கனவு பலிக்கட்டும்...” என்று வாழ்த்துகளை மட்டுமே நாம் இப்போது சொல்ல முடியும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/an-analysis-on-lmurugans-statement-about-bjp-coalition-govt-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக