``எனக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை. திருச்சியிலிருந்து மாந்துறை செல்லும் வழியில் உள்ள பாலாம்பிகை சமேத ஆம்ரவனேஸ்வரர் எங்கள் குலதெய்வம். ``மாங்கனி யுடைந்து தேங்கவயல்வந்து மாண்புநெல் விளைந்த வளநாடாமாந்தர்தவ ரும்பர் கோன்பரவிநின்ற மாந்துறை யமர்ந்த பெருமாளே'' என அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலம்.
என் குருதெய்வம் என்று சொன்னால், காஞ்சி மகா பெரியவர். அவரின் பரம பக்தன் நான். என் தாய்மாமா தி.சு மலையப்பன், தலைமை ஆசிரியராக இருந்தவர். புதுக்கோட்டையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கம்பன் கழகச் செயலாளராகப் பணிபுரிந்தார். இதனால், கி.வா.ஜகந்நாதன், பேராசிரியர் ராதாகிருஷ்ணன், ஆசான் ஞானசம்பந்தம் ஆகியோர் தொடங்கி, சுகிசிவம் வரை எல்லோரும் எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்து பட்டிமன்றங்களிலும் கம்பன் கழகக் கருத்தரங்கங்களிலும் பேசிச் செல்வார்கள்.
குன்றக்குடி அடிகளாரின் தொடர்பு மாமாவுக்கு இருந்ததால், சிறுவயதிலேயே என் மனதில் ஆன்மிகப் பதியம் போட்டு வளர்க்கப்பட்டு வந்தது. எங்கள் வீட்டின் வாயிலிலேயே சிறிய அளவில் முருகன் கோயில் அமைத்து வழிபாடும் செய்து வந்தோம். எல்லோரும் அந்த முருகனை வணங்கிச் செல்வார்கள். தமிழ்வழி வழிபாட்டுக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து எங்கள் மாமா எங்களை வளர்த்து வந்தார்.
சிறுவயதிலேயே முருக வழிபாடு எனக்கு அதிகமாக இருந்தது. ``ஓம் முருகா போற்றி... அருணகிரிக்கு அருள் தந்த முருகா போற்றி... பாம்பன் சுவாமிகள் போற்றி'' என்று என் தாயார் முருகனை தமிழ் வழியிலேயே பாடி வழிபடுவார். `முருகா சரணம்' என்று சொன்னால்தான் எங்களுக்குக் காலை சிற்றுண்டியே வழங்கப்படும்.
Also Read: காரைக்கால் மாங்கனித் திருவிழா... பக்தி வைராக்கியமும், பேயுரு வேண்டலும்..!
என்னுடைய தமிழ் ஆர்வத்தையும் முருகன் மீது கொண்ட பக்தியையும் வாரியார் சுவாமிகள் கவனித்து, நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது பட்டிமன்றத்தில் மூன்றாவது ஆளாக என்னைப் பேசும்படி கூறினார். ஒருபக்கம் சத்தியசீலனும் இன்னொரு பக்கம் அறிவொளி ஐயாவும் பேச, அவர்களுக்கு மத்தியில் சிறுவனான நானும் பேசினேன். `ஆடித் தள்ளுபடிபோல் இன்றைய பேச்சுக்குத் தள்ளுபடியான ஓர் ஆளைப்போட்டிருக்கிறேன். அவர்தான் மணிகண்டன்' என்று என்னை அறிமுகப்படுத்தினார் சுவாமிகள்.
பெரிய புராணத்தின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு வந்தது. முருக பக்தி, தமிழ்ப் பாடல்களின் மீது ஈடுபாடு, அடிகளார் அறிமுகம் கிடைத்ததால் பெரியபுராணத்தில் ஆர்வம் என என்னுடைய பால்ய காலம் ஆன்மிகச் சிந்தனையுடனே வளர்ந்து வந்தது.
பெரிய புராணக் கதைகளை தீரன் சொல்லப் பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் அந்தக் கதைகளை விவரிக்கும்போது ஓர் உயிர்த்துவத்தோடு கூடிய நிகழ்வாகவும் அனுபவமாகவும் அது எல்லோருக்கும் இருக்கும். அது எனக்கும் வாய்த்தது. இன்றளவும் நான் மேடைகளில் பேசுவதற்கு உந்து சக்தியாகவும் ஊக்க சக்தியாகவும் ஆக்க சக்தியாகவும் அது இருந்து வருகிறது.
Also Read: ஜூலை 5 சந்திர கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?
வாரியார் சுவாமிகள், தீரன் ஆகியோரின் கூட்டம், பேராசிரியர் ராதாகிருஷ்ணன், அ.ச.ஞானசம்பந்தன், இஸ்மாயில் மூவரின் பட்டிமன்றம் ஆகியவை எங்கு நடந்தாலும், நான் சென்று கேட்பது வழக்கம். பள்ளிப்படிப்பு முடிந்ததும், திருச்சி தேசியக் கல்லூரியில் படித்து வந்தேன். படிப்பு முடித்ததும் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக சில காலம் பணியாற்றினேன். அதன் பிறகு பெரிய புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்காக இலங்கைக்கு அடிக்கடிசென்று வந்தேன்.
ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் பற்றி விகடன் பிரசுரம் வெளியிட்ட `காஞ்சி மகானின் கருணை நிழலில்' எனும் நூலை வாசித்தேன். அதில் என் மனதைப் பறிகொடுத்தேன். காஞ்சி மகா பெரியவர் மீது பித்தானேன். காஞ்சி மடத்துக்குச் செல்வதைவிட, ஓரிகை தேனம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு நான் அடிக்கடி செல்வேன்.
வியாழக்கிழமைதோறும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர், காஞ்சி மகா பெரியவர், முருகன் ஆகிய மூவருக்கும் வழிபாடு செய்துவிட்டு, மூன்று பேருக்கு அன்றைய தினம் அன்னதானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆன்மிகமும் நகைச்சுவையும் எனக்கு ஒருசேர வருவதால், இறைவன் போட்ட பிச்சையாக சபரிமலை ஐயப்பன் மகரஜோதி, திருவண்ணாமலை தீபம் இரண்டையும் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நேர்முக வர்ணனை செய்யும் பாக்கியம் கிடைக்கப் பெற்றுள்ளேன்.
`ஐயப்பன் விரத மகிமை', `கருணைக்கடல் காஞ்சி மகான்', `உயர உயர தினசரி வழிபாடு', `பாம்பன் சாமிகள் வரலாறு' நூல்களை நான் எழுதியிருக்கிறேன். என் குரு, மகாபெரியவா. மேடைப்பேச்சில் எனக்கு குரு, சுகிசிவம்'' என்றவரிடம், `நீங்கள் கடவுளை உணர்ந்த தருணம் எது?' என்று கேட்டோம்.
Also Read: தேவசயனி ஏகாதசி, வாசுதேவ துவாதசி விரத மகிமைகள்... கடைப்பிடிக்கும் வழிமுறைகள்!
``கடந்த பிப்ரவரி மாதம் கனடா நாட்டின் அட்லான்டா நகரில் தங்கியிருந்தேன். முழுக்க முழுக்க திராவிட சிந்தனை உள்ள அண்ணாதுரை என்ற நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கு அவர்கள் என்னை மிகவும் அன்பாக உபசரித்தனர். நான் புதன்கிழமை இரவு அட்லான்டா போய் இறங்கினேன். மறுநாள் வியாழக்கிழமை. அவர் பெரியார் தொண்டர், அவரின் மனைவி சாயிபாபா மற்றும் பக்தை. காலையில் `பாபா கோவிலுக்குப் போகலாமா?' என்று கேட்டார். நான் அவரிடம், ``என்ன சார் பெரியார் படமும் வைத்திருக்கிறீர்கள், பிள்ளையார் படமும் வைத்திருக்கிறீர்கள்?'' என்றேன். ``நான் பெரியாரின் தொண்டன். என் மனைவி பிள்ளையார் பக்தை. இரண்டுமே இருந்துவிட்டுப் போகட்டும் என்று வைத்திருக்கிறேன்'' என்றார்.
அன்று மாலை அங்கு நான் சொற்பொழிவாற்ற வேண்டும். காலை 6 மணிக்கே நகரின் வானிலை மிகவும் மோசமாக இருந்தது. காலை 6.30 மணி அளவில் மிகப்பெரிய பனிப்பொழிவு. மல்லிகைப்பூ வானிலிருந்து கொட்டுவதுபோல் எங்கு பார்த்தாலும் பனி கொட்டித் தீர்த்தது. 9:30 வரை, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கொட்டித் தீர்த்த பனியுடன், மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. மாலையில் நிகழ்ச்சி இருப்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. `ஐஸ் கட்டிகள் சாலைகளில் இரண்டடி வரை இருப்பதால் யானும் வாகனத்தில் செல்ல வேண்டாம்' என்று அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள்.
மாலை 3.30 மணிக்கு விழா. 800 பேருக்கு தலைவாழை இலை சாப்பாடு, 60 வகையான உணவுடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் என்னிடம் கவலையோடு பேசினார்கள். ``நான் வணங்கும் மகா பெரியவா கூட்டம் தங்கு தடையின்றி நடக்க வகை செய்வார், கவலையின்றி இருங்கள்'' என்று கூறினேன்.
நீங்கள் நம்பமாட்டீர்கள்... பகல் 12 மணியிலிருந்து 2 மணிவரை வெயில் சுட்டெரித்தது. பகலவனைக் கண்ட பனிபோல் பறந்து போயின என்று சொல்வார்கள் அல்லவா... அப்படி பனிக்கட்டி கரைந்துபோனது. மாலை 3:30 மணிக்கு நிகழ்ச்சி சிறப்பாகத் தொடங்கிச் சீராக நடந்து முடிந்தது. அட்லான்டா தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சாரதி, என் நம்பிக்கையைப் பெரிதும் பாராட்டினார். நான் கடவுளை உணர்ந்த தருணம் அது!"
source https://www.vikatan.com/spiritual/gods/orator-manikandan-speaks-about-his-spiritual-beliefs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக