புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. சாகுல் அமீதுக்கு ஒரு மகன், மகள் என 2குழந்தைகள். கடந்த சில தினங்களுக்கு முன்பு சாகுல் ஹமீது தனது மகன் முகமது சாலிக்குடன் அருகே உள்ள குளத்திற்குக் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஏற்கெனவே, ஏழ்மை நிலையிலிருந்த அந்தக் குடும்பம், இருவரின் இறப்பாலும் செய்தவறியாது பரிதவித்து நிற்கிறது. இந்தநேரத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தினர் சாகுல் அமீதுவின் ஐந்து வயது மகள் முஸ்பனா சாலிகாவின் படிப்புக் கட்டணம் உள்ளிட்ட கல்விச் செலவினை முழுமையாக ஏற்றுக்கொண்டு அந்தக் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தின் தலைவர் முகமது இப்ராஹிம், மாவட்ட நிர்வாகிகள் சாகுல் ஹமீதுவின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று கல்வி உதவிக்கான உறுதிக் கடிதத்தைக் கையில் கொடுத்து குடும்பத்தினரை நெகிழ்ச்சியடை வைத்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை சூர்யா நற்பணி இயக்கத்தினர் கூறும்போது,``அண்ணன் சூர்யா, அகரம் பவுண்டேசன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றி வருகிறார். ஒவ்வொரு வருடமும் அண்ணன் பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் கொடுப்பது வழக்கம். இந்த வருடம் அண்ணனைப்போல நம் மாவட்டத்தில் நன்கு படித்தும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பவர்களின் கல்விக்காக உதவுவோம் என்று முடிவெடுத்தோம்.
அதன்படி விசாரித்ததில், சாகுல் அமீதுவின் 5 வயது மகள் முஸ்பனா சாலிகா அன்னவாசலில் உள்ள தனியார்ப் பள்ளியில் 1ம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்திருக்கிறார்.
குடும்பத் தலைவரின் இறப்பால், படிப்பைப் பாதியில் கைவிடும் நிலையிலிருந்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. ஏழ்மை நிலையிலிருந்தாலும், சாகுல் அமீது தனது பிள்ளைகளைத் தனியார்ப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். சாகுல் ஹமீது இப்போது இல்லை. அவரது இடத்திலிருந்து அந்தப் பிள்ளையை மேற்கொண்டு படிக்க வைக்கலாம்னு திட்டமிட்டோம். அந்தப் பள்ளியைப் பற்றி விசாரித்த போது எல்லாரும் அங்க நல்லா சொல்லிக்கொடுப்பாங்கன்னுதான் சொன்னாங்க.
உடனே, எதப்பத்தியும் யோசிக்கலை. பள்ளித் தாளாளரைப் போய் பார்த்து, `முஸ்பனா சாலிகாவிற்கு 1ம் வகுப்புல இருந்து 12ம் வகுப்பு வரைக்கும் கல்வி சம்பந்தமாக வருகிற எல்லாக் கட்டணத்தையும் நாங்க கட்டிக்கிறோம். இந்த வருடம் பள்ளி திறந்தது கட்டணத்தை நேரடியாகப் பள்ளிக்கு வந்து கட்டுகிறோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறுமியின் படிப்பை நிறுத்திவிடக்கூடாது. சிறுமியின் கல்வி சம்பந்தமாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கன்னு' சொல்லிவிட்டு வந்துட்டோம். இதுபோல இன்னும் 10 பேருக்கும் மேல கல்விக்காக உதவி செய்யணும்னு திட்டமிட்டிருக்கிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/pudukottai-surya-fans-helps-child-with-taking-care-of-educational-expenses
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக