Ad

திங்கள், 6 ஜூலை, 2020

Triple Lockdown: முடங்கிய திருவனந்தபுரம்! - போலீஸுக்கு போன் செய்யும் மக்கள்

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 3-ம் தேதி 221 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த 4-ம் தேதி 240 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று புதிதாக 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இப்படி தினமும் இருநூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுவதால் கேரள மக்கள் கலக்கத்தில் உள்ளனர். அதிலும் பலருக்கு நோய் யாரிடமிருந்து தொற்றியது என்று கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் இதுவரை 3,174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 2,228 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர். 1,80,939 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 153 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் மரணமடைந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சமூகப் பரவலுக்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருப்பதால் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் ஏழு நாள்களுக்கு ட்ரிபிள் லாக்டெளன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு இன்று காலை 6 மணி முதல் ட்ரிபிள் லாக்டெளன் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஏழு நாள்களுக்கு இந்த ட்ரிபிள் லாக்டெளன் அமலில் இருக்கும். ட்ரிபிள் லாக்டெளன் காரணமாக திருவனந்தபுரம் மாநகரத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அலுவலகமும் செயல்படாது. முதல்வர் பினராயி விஜயன் தனது அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: #TripleLockdown : `நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது!’ - கட்டுப்பாடுகளை இறுக்கும் கேரளம்

திருவனந்தபுரத்தில் உள்ள கோர்ட்டுகள் ஏழு நாள்களுக்கு செயல்படாது. புதிய மனுக்கள் எதுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக ஆன்லைன் மூலம் விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. காய்கறிக் கடைகள், மெடிக்கல் ஷாப் மற்றும் பால் பூத் ஆகியவை செயல்படும். ஆனால், பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லக் கூடாது எனவும், பொருள்கள் தேவை என்றால் போலீஸாருக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.

போலீஸார் பொருள்களை வாங்கி வீடுகளுக்குக் கொண்டுவருவார்கள் என டி.ஜி.பி லோக்நாத் பெகரா அறிவித்துள்ளார். மெடிக்கல் ஷாப்புகளுக்கு செல்பவர்கள் மட்டும் அதற்குரிய டாக்டர் சீட்டு உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் அழைக்க தனி எண் அறிவிக்கப்படும் எனவும் டி.ஜி.பி அறிவித்துள்ளார்.

கொரோனா

இதையடுத்து, திருவனந்தபுரம் நகரத்தில் இன்று காலை மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. திருவனந்தபுரத்துக்குள் நுழைய முயன்ற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவை எல்லைப் பகுதிகளில் திருப்பி அனுப்பப்பட்டன. மருத்துவர்கள், போலீஸ் மற்றும் மீடியாவினர் மட்டுமே சாலையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். திருவனந்தபுரத்தைத் தொடர்ந்து எர்ணாகுளம், மலபார் பகுதிகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/india/kerala-government-implement-triple-lock-down-in-thiruvananthapuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக