இந்தியா முழுவதும் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிக சோதனைகளின் மூலம் வைரஸை முன்னரே கண்டறிந்து அதன் பரவலைத் தடுக்க முடியும் என்ற நோக்கில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் பல தனியார் மருத்துவமனைகளும் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு வைரஸ் சோதனை செய்வதற்கான கட்டணத்தையும் அரசு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நெகட்டிவ் எனப் போலிச் சான்றிதழ் தருவதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Also Read: மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபர், கொரோனா சோதனை செய்து அதன் முடிவு நெகட்டிவ் என ரிபோர்ட் தர மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ரூ. 2,500 செலவாகும் என்றும் கூறுகிறார். இந்த வீடியோ சர்ச்சையானதை அடுத்து தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அந்த மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய மீரட் மாவட்ட ஆட்சியர் அனில் திங்க்ரா, ``மீரட்டில் பதிவான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் வழக்குப் பதிவு செய்து அந்த நர்சிங் ஹோமின் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். மேலும், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான இந்தக் கொரோனா நேரத்தில் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
source https://www.vikatan.com/news/india/private-hospital-providing-fake-covid-19-report-at-uttarpradesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக