Ad

திங்கள், 6 ஜூலை, 2020

`கொரோனா, எங்கள வாழவிடுமான்னு தெரியல!' - கலங்கும் கரூர் பலாப்பழ வியாபாரி

"கடந்த வருடம் இதே சீஸன்ல லோடு ஒண்ணுக்கு 7,000 ரூபாய் வரை லாபம் பார்த்தேன். ஆனால், இப்போ கொரோனா பாதிப்பால, நாலாயிரம் வரை நஷ்டம். கால்வாசிப்பழம் விக்காம அழுகிப்போயிடுச்சு. முதலுக்கே மோசமாயிடுச்சு சார்" என்று கண்ணீர் வடிக்கிறார், சாலையோரம் பலாப்பழம் விற்கும் பெண் வியாபாரி நதியா.

பலாப்பழம் விற்பனை

உலகையே உலுக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ், மக்களை அல்லாட்டத்தில் தள்ளியிருக்கிறது. இன்னும் தனது வீரியத்தைக் குறைத்துக்கொள்ளாமல், நாளுக்குநாள் மக்களை பீதியில் தள்ளிக்கொண்டிருக்கிறது.

பெருவணிகர்களையும் தொழில் நிறுவனங்களையும் முடக்கிப் போட்டிருக்கிறது. சாலையோரம், பிளாட்பாரங்களில் சிறு சிறு வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் சொற்ப வருமானத்துக்கும் வேட்டு வைத்திருக்கிறது.

பலாப்பழ விற்பனை

`ஊரடங்கு' என்று பொத்தாம் பொதுவாக அரசு சொல்லிவிட்டாலும், இவர்களால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியவில்லை. காரணம், கையில் சேமிப்பும் இல்லாமல் போனதால், தொழிலைத் தொடர வேண்டிய சூழல். ஆனால், முன்புபோல் அவர்களின் தொழில் சிறப்பாக நடைபெறவில்லை. சீண்டக்கூட ஆளில்லாமல், வாங்கிப் போட்ட பொருள்கள் போணியாகாமல், அல்லாட்டத்தில் தள்ளி, அவர்களைப் பார்த்து வேடிக்கையாகச் சிரிக்கிறது கொரோனா.

Also Read: `எதிரிக்குக்கூட என் நிலைமை வரக்கூடாது!' -டெக்ஸ்டைல் தொழிலாளி டு பொரிகடலை வியாபாரம்

அப்படி, சாலையோரம் பலாப்பழம் விற்கும் நதியாவின் நிலைமை, போட்ட முதலையே எடுக்க முடியாத சூழலுக்குப் போயிருக்கிறது. அழுகும் பழத்தை விற்க முடியாமல் அவர் பரிதவித்து நிற்கிறார். கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள சீயம்புரத்தில் சாலையோரத்தில்தான், நதியா பலாப்பழம் விற்பனை செய்துகொண்டிருக்கிறார்.

பலாப்பழம் விற்பனை

அவரை நெருங்கும் ஓரிரு வாடிக்கையாளர்களும், 'அழுகிய பழமா இருக்கு. 40 ரூபாய்க்குத் தருவீங்களா?' என்று குறைவான ரேட்டுக்கு கேட்க, அவர்களிடம், பலாப்பழம் கொள்முதலுக்காகத்தான் போட்ட பணம், பலாப்பழத்தை இங்கே கொண்டுவர பட்ட கஷ்டம் என எல்லாவற்றையும் விவரித்து, அவர்களிடம் விலையைக் கூட்டி கேட்கிறார். ஆனாலும், வாடிக்கையாளர்கள் சொல்லும் ரேட்டுக்கு கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார் நதியா.

சோகம் கப்பிப்போன முகத்தோடு வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த நதியாவிடம் பேசினோம்.

"என் கணவர் டூவீலர் மெக்கானிக்காக இருக்கார். சொந்த ஊர் சீயம்புரம்தான். ஆனால், எங்கள் பிள்ளைகளை மட்டும் இங்கே விட்டுட்டு, கொல்லிமலையில் மெக்கானிக் கடை வச்சு நடத்திக்கிட்டு இருந்தோம். ஆனால், அதுல சரியா வருமானம் இல்லை. அதனால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆனி, ஆடி மாசங்கள்ல பலாப்பழ சீஸன்ல, இந்த வியாபாரத்தைத் தொடங்கினோம். கொல்லிமலையில் வாரத்துக்கு ஒருதடவை பலாப்பழம் வாங்கிக்கிட்டு வந்து, சீயம்புரத்துல விற்பனை செய்தேன். வாரத்துக்கு ஒரு லோடு இறக்குவோம்.

நதியா

அதுல, பலாப்பழம் வாங்கிய தொகை, ஆட்டோ வாடகை எல்லாம் போக 7,000 ரூபாய் வரை லாபம் கிடைச்சுச்சு. அதனால், இரண்டு வருஷமா தொடர்ந்து செஞ்சோம். இந்த வருஷம் ஆனி மாதம் தொடங்கியதும், பலாப்பழ சீஸனும் தொடங்குனுச்சு. கொரோனால ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், எங்களோட வருமானம் சுத்தமா குறைஞ்சுப்போச்சு. அதனால், கழுத்துல கிடந்த தாலிக்குண்டை அடகு வச்சு அந்தப் பணத்துல, கொல்லிமலையில் இருந்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு லோடு பலாப்பழம் இறக்கினோம்.

Also Read: கேரளாவின் 'மாநிலப் பழம்' ஆனது பலாப்பழம்....!

அதை, போலீஸ் கெடுபிடுகளை மீறி, சீயம்புரத்துக்கு கொண்டுவர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிட்டு. லோடு 18,000 ரூபாய்க்கு பலாப்பழம் வாங்கினோம். குட்டியானை வாடகையாக 3,000 ரூபாய் வரை கொடுத்தோம். போலீஸுக்கு அழுதது தனிக்கணக்கு. ஆனால், 18,000 ரூபாய்க்குத்தான் விற்க முடிஞ்சது. 4,000 ரூபாய் நஷ்டம். நடுவில் மழைவேறு பெய்ததால், அதில் பழங்கள் நனைஞ்சு, லேசா அழுகிப்போயிட்டு. அதனால், சல்லிரேட்டுக்கு பழங்களைக் கேட்டாங்க. அதோடு, கால்வாசி பழங்கள் சுத்தமா அழுகிப்போயிட்டு. அதனால், வாடிக்கையாளர்கள் கேட்குற விலைக்கு பழங்களைக் கொடுத்தால் போதும்னு வித்தோம்.

பலாப்பழம் விற்பனை

கடன் வாங்கித்தான் தொழிலை ஆரம்பிச்சேன். ஆனால், இந்த வருடம் முதல் முயற்சியே நஷ்டத்துல தள்ளிட்டு. தொடர்ந்து பலாப்பழத்தை விற்பதானு யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன். ஆனால், வேற வருமானமும் இல்லை. என்ன பண்றதுன்னு புரியாம, பித்துப்புடிச்சாப்புல இருக்கு. இந்த கொரோனா எங்களை உயிரோட வாழவிடுமானு புரியலையே சார்" என்று சொல்லும்போதே, நதியாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

அந்தக் கண்ணீர் கொரோனாவை மூழ்கடித்து சாகடிக்கட்டும்!



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-jackfruit-vendor-shares-her-experience-in-lock-down-period

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக