பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
`நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை' என்பார் டிக்கன்ஸன்.
ஒருவனது பயத்தைவிட வலிமையானது அவனது நம்பிக்கை. நாம் எதை நம்புகிறோமோ, அதுவாகவே மாறுகிறோம் என்கிறது மனித மனம் குறித்த தத்துவங்கள்.
தரையில் வீழ்ந்து கிடக்கும், ஒரு தாவரத்தின் கொடி படர்ந்து வளரக் கொழுக்கொம்பு தேவைப்படுவது போன்று, ஒரு மனிதனது வாழ்க்கை உயர்ந்து வளர உதவும் கொழுக்கொம்பாக நம்பிக்கையே உள்ளது.
மனித வாழ்வே இருட்டில் மறைந்துள்ள நட்சத்திரங்களை ஒவ்வொன்றாகத் தேடிக் கண்டறியும் மாயவேட்டைதானே! வாழ்க்கை ஒரே மாதிரி சென்றுகொண்டிருப்பதைவிட எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில்தான் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம் உண்டாகிறது. வாழ்க்கை மீதான பிடிப்பும் நம்பிக்கையும் கூடுகின்றன.
குழந்தைகள் மீதான பெற்றோரின் எண்ணற்ற எதிர்பார்ப்புகளை விட, அவர்கள் மீது நாம் கொள்ளும் ஒரு நம்பிக்கை, நம் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்றிவிடும் இயல்புடையது. தன் மகன் குறித்த ஒரு தாயின் அசைக்க முடியாத நம்பிக்கை, அவரின் மகனை எப்படி மாபெரும் வெற்றியாளனாக மாற்றியது என்பதைக் கீழ்க்காணும் கதை தெளிவாக விளக்கும்.
தன்னுடைய சிறு வயதில் ஸ்கார்லட் என்னும் ஒருவகைக் காய்ச்சலில் அவதிப்பட்ட ஒரு சிறுவன், தாமதமாக தனது எட்டரை வயதில்தான் பள்ளிக்குச் சென்றான். மேலும், அவனுக்குப் பிறவியிலேயே காது கேட்கும் திறன் குறைந்திருந்தது. சில நாள்கள் சிறுவன் பள்ளிக்குச் சென்றபின், ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து அவனின் தாயிடம் கொடுக்குமாறு கூறினார். அந்தச் சிறுவன் மாலை வீடு திரும்பியதும் ஆசிரியர் அளித்த கடிதத்தைத் தன் தாயிடம் கொடுத்தான்.
அந்தக் கடிதத்தில், ``உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. எனவே, அவன் பள்ளியில் கட்டாயம் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் அது எங்கள் பள்ளியின் பெயரைக் கெடுத்துவிடும். அதனால் உங்கள் மகனை இனிமேல் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்" என்று எழுதப்பட்டு இருந்தது.
அதைப் படித்த அந்தத் தாயின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்த சிறுவன் தன் தாயிடம், ``அம்மா, ஆசிரியர் அப்படி என்ன எழுதியிருக்கிறார்?" எனக் கேட்டான்.
அவசரமாகக் கண்ணீரைத் துடைத்து, தனது துக்கத்தை மகனுக்குத் தெரியாமல் மனதினுள் மறைத்துக்கொண்டார் அந்தத் தாய். பிறகு அவனிடம், ``நீ மிகுந்த அறிவுத்திறன் கொண்டவன். மேலும், வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு நீ தகுதி உடையவன். அதனால், உனக்கு இனிமேல் பள்ளி தேவை இல்லை என்று உன் ஆசிரியர் எழுதியிருக்கிறார்!" என்று அன்புடன் கூறினார்.
அவனது பள்ளிப்படிப்பு அத்துடன் முடிந்துவிட்டது. அவன் தாயார் பள்ளியிலிருந்து அவனை விலக்கிவிட்டு மிகுந்த நம்பிக்கையுடன், தானே அவனுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். ஆசிரியரான தாயிடம் வீட்டிலிருந்தே சிறுவன் கல்வி கற்றான்.
வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதப் பயிற்சிகளுடன் பைபிள் மற்றும் நீதிக் கதைகளைப் படிக்கவும் சிறுவனின் தந்தை ஊக்கப்படுத்தினார். அவன் ஒவ்வொரு கதையைப் படித்து முடிக்கும்போதும், அவர் 10 செண்ட்டுகளை அவனுக்குப் பரிசாக அளித்தார். இதனால் அந்தச் சிறுவன் மிக விரைவிலேயே பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தான்.
அவன் தாயின் நம்பிக்கையுடன்கூடிய கற்பித்தல் மற்றும் தந்தையின் ஊக்கமூட்டல் காரணமாக மேம்பட்ட அறிவுத்திறன் உள்ளவனாகவும், நம்பிக்கை மிகுந்த அறிவியல் அறிஞனாகவும் எதிர்காலத்தில் அந்தச் சிறுவன் மாறினான்.
அந்தச் சிறுவன்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு வழங்கிய தாமஸ் ஆல்வா எடிசன்!
அவரின் தாயான நேன்சி மேத்தீவ்ஸ் எலியட்டிற்கு, தன் மகனால் சாதனைகள் நிகழ்த்த முடியும் என்னும் உள்ளார்ந்த நம்பிக்கை இருந்தது. தாயின் இந்த நம்பிக்கையே எடிசனின் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளாகப் பிற்காலத்தில் மலர்ந்தன.
எனவே, குழந்தைகள் குறித்த பெற்றோர்களின் நம்பிக்கையும், உயர்வான எண்ணங்களுமே ஞானிகளையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கும் ஆதார சக்தியாக என்றுமே விளங்குகின்றன. ஆனால், பெரும்பான்மையான நேரங்களில் நாம் நமது நம்பிக்கைகளுடன், நற்பண்புகளுடனும் அவ்வப்போது சமரசம் செய்துகொள்கிறோம்.
பள்ளியில் திருடும் குழந்தையைத் தவறு எனக் கண்டிக்கும் தந்தை, அலுவலகத்தில் இருந்து பென்சிலை எடுத்து வந்து குழந்தைக்குக் கொடுப்பது ஒருபோதும் நியாயமான செயலாக இருக்க முடியாது.
தந்தை மீதான குழந்தையின் நம்பிக்கையைக் குலைக்கும் எதிர்மறை செயலாகவே இது அமையும். நான் எப்படி இருந்தாலும் என் குழந்தை சிறந்தவனாகவும் நேர்மையாளனாகவும் இருக்க வேண்டும் என நாம் விரும்புவது ஏற்புடையது அன்று.
இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய ஒன்று நம்முடைய எண்ணங்கள், நம்மோடு முடிந்து போவதில்லை. பெற்றோரின் எண்ணங்கள்தான் அடுத்த தலைமுறைக்கு உரிய உயர்தரமான விதைகள். நம்முடைய எண்ணங்கள் மீதான நமது நம்பிக்கையின் படிப்படியான வளர்ச்சிதான், நாளை மரமாக வளரக்கூடிய நம் தலைமுறையின் வளர்ச்சி.
ஒரு மனிதனின் சுயசிந்தனை அவனது தன்னம்பிக்கையின் அளவை இயல்பிலேயே அதிகரிக்கச் செய்வதாய் உள்ளது. குழந்தைகளுக்கு சுய சிந்தனையை ஊட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது பெற்றோர்களே. ஆனால், சுயசிந்தனையை நாம், நம் குழந்தைகளுக்கு வலிந்து ஊட்ட முடியாது. அதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றோர் உண்டாக்கித் தரலாம். எதுவுமே சுலபம் இல்லை. ஆனால், எல்லாமே சாத்தியம்தான்!
சமுதாயத்தின் கேலி, கிண்டல், அவமானம், தோல்விகள் போன்ற இடிகளில் இருந்து குழந்தைகளைத் தாங்கி, நம்பிக்கையூட்டும் இடிதாங்கிகளாகப் பெற்றோர்கள் உருவாகும்போது குழந்தைகளின் வெற்றி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகிறது.
வெற்றியின்போது அகந்தை அடையாமலும், தோல்வியின் போது துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் இருக்கவும் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சிந்தனையாலும் செயலாலும் பெற்றோரிடம் வெளிப்படும் நம்பிக்கை என்னும் ஒளி குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தைப் பரப்பி, அவர்களின் வாழ்வை மலரச் செய்யும் என்பதில் துளியும் ஐயமில்லை!
தோழர் சே குவேரா கூறியதுபோல ``நம்பிக்கையுடன் தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருப்போம்; முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்!’’
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/how-thomas-alva-edison-mothers-motivation-helped-him-to-achieve-success
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக