இந்தியாவில் சிங்கிள் வுமனாக (Single Woman) இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கூறுகின்றன சாம்பிள் ரெஜிஸ்ட்ரேஷன் (Sample Registration) என்ற அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்! சிங்கிள் பெண்கள் அதிகமாக இருக்கும் இந்திய மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன.
கேரளாவில் உள்ள பெண்களில் 9.3% பேரும், தமிழகத்தில் 9.1% பெண்களும் தனியே உள்ளனர். இவர்கள் எவ்வித திருமண, காதல் உறவுக்குள்ளும் செல்லாமல் தனியாகவே வாழ்கிறார்கள் என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ஒரு பெண் 23 - 30 வயதுக்குள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்துவிட வேண்டும் என்பதே காலங்காலமாக நம் நாட்டுப் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டுவரும் பாடம். இந்த மறைமுகமான விதிமுறையை மீறி இப்போது பல பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே சிங்கிள் வுமனாக வாழ முடிவெடுத்து வருகின்றனர். ஒரு பெண் திருமண உறவுக்குள் செல்லாமல் இருக்க குடும்பச் சூழல், காதல் தோல்வி, தான் மேற்கொள்ளும் பணியின் தன்மை, விருப்பமின்மை, உடல்நல பிரச்னைகள் என்று அவரவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பல காரணங்கள் இருக்கலாம்.
காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு பெண், தான் சிங்கிள் வுமனாக வாழ முடிவுசெய்துவிட்டால் அவள் பல்வேறு கேலி, கிண்டல்களையும், உதாசினங்களையும் எதிர்கொள்ள நேரிடும். இதனால் அவளுக்கு அதீத மன உளைச்சலும், தன் வாழ்க்கையின் மீதே விரக்தியும்கூட ஏற்படலாம்.
இவற்றை எல்லாம் கடந்து ஒரு சிங்கிள் வுமன் தன் வாழ்க்கையை நேர்மறையாக அணுக என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர் கூறும் வழிமுறைகள்...
1. உதாசினங்களை உதறித்தள்ளுங்கள்!
திருமண, குடும்ப வாழ்க்கைக்குள் செல்லாத பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும், அவர்களின் நடத்தையைக் குறித்தும் தவறாகப் பேசுபவர்கள் அந்தப் பெண்களைச் சுற்றி இருந்துகொண்டேதான் இருப்பார்கள். நீங்கள் சிங்கிள் வுமனாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கை மற்றும் அதில் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருங்கள். மற்றவர்களின் கேலி, கிண்டல்களுக்கும் செவி சாய்க்காதீர்கள். உங்களின் சூழ்நிலை அல்லது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவே நீங்கள் குடும்ப வாழ்க்கைக்குள் செல்லாமல் இருக்கிறீர்கள். அதனால் மற்றவர்களின் விமர்சனங்களால் உங்கள் வாழ்க்கைமுறையை நினைத்து கழிவிரக்கம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. முடிவுகளில் உறுதியாக இருங்கள். நீங்கள் மேற்கொள்ளும் பணியில் உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
2. பொருளாதார சுதந்திரம் அவசியம்!
சிங்கிள் வுமனாக வாழ முடிவெடுக்கும் ஒவ்வொரு பெண்ணும் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் பொருளாதார தேவைகளுக்காகப் பெற்றோரையோ, உறவினர்களையோ சாராமல் இருப்பதே நல்லது. உங்கள் படிப்பிற்கேற்ற வேலைக்குச் சென்று, பொருளாதார தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த ஆடைகள், உணவுகள் என்று எல்லாவற்றையும் உங்கள் பணத்திலேயே நிறைவேற்றிக்கொள்ளும்போது ஏற்படும் ஒரு சுயமரியாதை, தனியாக வாழ்வதற்கான தைரியத்தை மேலும் கொஞ்சம் பலப்படுத்தும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எதிர்கால தேவைகளுக்காகவும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். பணத்தேவைக்காக மற்றவர்களிடம் உதவி கேட்டு நிற்பதை இதன்மூலம் தவிர்க்கலாம்.
3. கடைசிக் காலத்தை நினைத்து பயம் வேண்டாம்!
̀கல்யாணமே பண்ணிக்காம இருக்கியே... கடைசிக் காலத்துல உன்னை யார் பாத்துப்பாங்க?' - சிங்கிள் வுமனாக இருக்கும் பெண்கள் அனைவரும் இந்தக் கேள்வியை நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். தனியாக வாழ்வதில் உறுதியாக இருக்கும் பெண்களைக்கூட இந்தக் கேள்வி அசைத்துப் பார்த்துவிடும். `கடைசி காலத்துல என்னை யார் பாத்துப்பாங்க?' என்ற எண்ணமே ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைக் குலைத்துவிடும். ஆனால், சிங்கிள் பெண்கள் தங்களின் கடைசிக் காலத்தை நினைத்து பயம் கொள்ளத் தேவையில்லை. முதியவர்களைப் பார்த்துக்கொள்ளவே பிரத்யேகமாக இன்று எத்தனையோ கேர் சென்டர்கள், ஹோம்கள் வந்துவிட்டன. விருப்பமிருந்தால் உங்களின் வயதான காலத்தில் இந்த இல்லங்களில் சேர்ந்துகொள்ளலாம். அவர்கள் உங்களை நல்ல முறையில் பார்த்துக்கொள்வார்கள். இந்த இல்லங்களில் சேர்வதற்கான சேமிப்பை மட்டும் ஏற்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
4. தாழ்வுமனப்பான்மை வேண்டாம்!
திருமணம் செய்துகொண்டு கணவன், குழந்தை என்று வாழ்க்கை நடத்தும் தங்களின் தோழிகளைப் பார்க்க நேரிடுகையில் சிங்கிள் வுமனாக இருக்கும் பெண்களுக்கு `நமக்கு இதுபோல் வாழ்க்கை இல்லையே!' என்ற தாழ்வுமனப்பான்மை ஏற்படலாம். இந்த எண்ணம் ஏற்பட்டால் உடனே அதை உதறித்தள்ளுங்கள். குழந்தைகள் மீது பிரியம் இருந்தால் ஆதரவே இல்லாமல் இருக்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு ஆறுதலாக இருங்கள். எப்போதும் `இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதை மறவாதீர்கள். யாருக்குத் தெரியும்? திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இருக்கும் உங்களின் தோழிகள் 'உங்களைப்போல் தானும் சிங்கிள் வுமனாக இல்லையே...' என்று நினைத்து வருந்திக்கொண்டுகூட இருக்கலாம். அதனால் நீங்கள் மேற்கொள்ளும் சிங்கிள் சுதந்திர வாழ்க்கையை நினைத்து சிறிது கர்வமாகவே இருங்கள்.
Also Read: கொரோனா: `62 முறை டயாலிசிஸ்!’ கைவிடப்பட்டவரைக் காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்
5. காதலுக்கு வயதில்லை!
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்களுக்கு சிங்கிள் வுமன் லைஃப் வெறுத்துப்போகும் பட்சத்தில் திருமணம், காதல் மீது விருப்பம் வரலாம். உங்களுக்கு ஏற்ற, தகுதியான ஒரு துணையை இனம் கண்டிருக்கலாம். ஆனால் வயதாகிவிட்டதால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்ற பயம் திருமணம் பற்றிய முடிவெடுக்க உங்களைத் தடுக்கலாம். திருமணத்துக்குக் காதல்தான் முக்கியமே தவிர வயது அல்ல. அதனால் உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டால் சரியான துணையைத் தேர்வு செய்து திருமண வாழ்க்கையைத் தொடங்குங்கள். மற்றவர்களின் விமர்சனங்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் மட்டும் அவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.
மற்றபடி டோன்ட் கேர். வாழ்க்கை உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்கே!
source https://www.vikatan.com/lifestyle/women/a-psychological-guide-to-single-women-to-lead-a-life-in-comfortable-way
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக