பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
"அஸ்வந்த் ஸ்கூட்டி சாவிய எடுத்துக்கிட்டு வண்டிக்கிட்ட போ" என்றாள் ராதா.
"சரிங்கம்மா" என்று சொன்னான் 5 வயது மகன் அஸ்வந்த்.
ராதா கிளம்பியபடி கட்டைப் பை எடுத்துக்கொண்டு வெளியே வந்து வீட்டைப் பூட்டினாள்.
அஸ்வந்த் எப்பவும் போல் ஸ்கூட்டியின் முன்னால் வந்து நின்று கொண்டான்.
ராதா வண்டியைக் கிளப்பினாள்.
வண்டியில் வந்துகொண்டிருக்கும்போதே அஸ்வந்த் ஹாரன் அடித்துக்கொண்டே வந்தான்.
"அம்மா இது எதுக்கு... இது எதுக்கு? என்று வண்டி ஸ்பீடா மீட்டரில் உள்ள பெட்ரோல் முழுமையாக இருக்கும்போதும், குறையும்போதும் உள்ள குறியீடை பார்த்துக்கேட்டான்.
அப்புறம் வலது பக்கம், இடது பக்கம் திரும்பும் குறியீடுகளை கேட்டான்.
இதற்கெல்லாம் பதில் சொல்லியபடியே ராதா சூப்பர் மார்க்கெட் வந்தடைந்தாள்.
கடை உள்ளே நுழைந்ததும், "உனக்கு என்ன ஸ்னாக்ஸ் வேணுமோ அதையெல்லாம் இந்த கூடையில எடுத்து வை" என்று ஒரு அழகான சின்ன கூடையைக் கொடுத்தாள்.
"அம்மா வீட்டுக்குத் தேவையான பொருளெல்லாம் எடுத்துக்கிட்டு வர்றேன்" என்று சொல்லி பொருள்களை சுமக்கும் 3 சக்கர ட்ராலியை நகர்த்திக்கொண்டுச் சென்றாள்.
அஸ்வந்த் அவனுக்குப் பிடித்த ஸ்னாக்ஸை எல்லாம் ராதா கொடுத்த கூடையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
ராதா கையில் உள்ள லிஸ்ட்படி வீட்டுக்குத் தேவையான பொருள்களை எல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பின்,``அம்மா எனக்கு தேவையான ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டேன்" என்று ராதாவிடம் வந்தான்.
ராதாவும் அவனிடம் "அம்மாவும் வீட்டுக்குத் தேவையானதை எல்லாம் எடுத்துக்கிட்டேன் வா பில் போடலாம்" என்று 3 சக்கர ட்ராலியை நகர்த்தினாள்.
உடனே அஸ்வந்த் "அம்மா... அம்மா நான் தள்ளுறேன்" என்று குதித்தான்.
சரி என்று அவனிடம் ட்ராலியைக் கொடுத்தாள்.
அவனுக்கு அந்தச் சக்கரம் சுழன்று, சுழன்று போவதைப் பார்த்து தள்ளுவதென்றால் அப்படி ஒரு சந்தோஷம்.
அந்த ட்ராலியை சந்தோஷமாய் தள்ளிக்கொண்டு சக்கரத்தை பார்த்து மகிழ்ந்துக்கொண்டு பில்லிங் இடத்துக்கு வந்தான்.
பில்லிங் போடும் பெண்கள் பொருள்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து, பில் போட்டனர். மொத்தமாக பில் போட்டு முடித்தனர்.
"எவ்ளோ ஆச்சு?’’ என்று ராதா கேட்டாள்.
பில்லிங் பெண், "5,150" என்று கூறினாள்.
ராதா தன் ஹாண்ட்பேக்கில் இருந்து பணத்தை எடுத்து எண்ணினாள்.
பின் பில்லிங் பெண்ணிடம் பணத்தைக் கொடுக்கப்போக!
"அம்மா... என்றான் அஸ்வந்த்.
அருகில் இருக்கும் அஸ்வந்த்திடம் "என்னடி தங்கம் உனக்கு தேவையானது ஏதாவது மறந்துட்டியா?’’ என்று கேட்டாள்.
"ம்ஹும்" என்றான்
அப்புறம்?
"காலையில நம்ம வீட்டுக்கிட்ட ஒரு தாத்தா கீரை வித்துக்கிட்டு வந்தாருல்ல..?
"ஆமாம்!
"அந்த தாத்தாகிட்ட நீங்க கீரை வாங்கும்போது 10 ரூபாய்க்கு குடுங்கன்னு கேட்டிங்கல்ல?
"ப்ச் இப்ப அதுக்கென்ன?
"அந்த தாத்தா 15 ரூபாய்க்கு கம்மி இல்லன்னு சொன்னாரு! நீங்க 10 ரூபாய்க்கு குடுத்தா குடுங்க இல்லன்னா வேணாம்னு சொல்லிட்டிங்கல்ல...’’
"ஆமாம்!’’
"அந்த தாத்தாவும் போயிட்டாரு...’’
"இப்ப என்னடி தங்கம் அதுக்கு?’’
"அந்தத் தாத்தாக்கிட்ட அவ்ளோ பேசுனீங்க... இங்க இவ்ளோ பொருள் வாங்கிருக்கிங்க? எதுவுமே பேசாம காசு குடுக்குறீங்க?எவ்ளோ பேசணும்?’’ என்றான்.
ஒரு கணம் ராதா ஆடிப்போனாள்.
கடை உரிமையாளர் இவன் பேசியதைப் பார்த்து ஷங்கர் படம் பார்த்த மாதிரி பிரமித்துப் போனார்.
ராதாவின் மனதில் மகன் பேசியது சுருக்கென்று சுட்டது போல் இருந்தது.
"உண்மைதான் நாம் எல்லோரும் பெரிய, பெரிய கடைகள், வளாகங்களில் அவர்கள் போட்ட ரேட் எவ்வளவாக இருந்தாலும்... நாம் பேசாமல் அந்தக் காசைக் கட்டிவிட்டு பொருள்களை வாங்கி வந்து விடுகிறோம்! அதுவே தெருவில் வந்து விற்கும் உழைப்பாளிகளிடம் 5,10-க்கு அடித்துப் பேசி நம்ம சாமர்த்தியத்தை காட்டுக்கின்றோம்!’’ என்ற குற்றஉணர்வு ராதாவை சுட்டது.
அடுத்தநாள் தாத்தா சைக்கிளில் பெல் அடித்தபடி "கீரை... கீரை" என்று கூவியபடி வந்தார்.
குரல் கேட்ட ராதா "தாத்தா நில்லுங்க" என்று குரல் கொடுத்தபடி வீட்டிற்குள்ளே இருந்து வெளியில் வந்தாள்.
தாத்தா ராதாவிடம் "15 ரூபாதான் அப்புறம் வம்பு பண்ணக்கூடாது" என்றார்.
ராதா மெல்லிய புன்னகையோடு 15 ரூபாய் குடுத்து கீரை வாங்கினாள். கைநிறைய கீரை கட்டுக்கடங்காமல் இருந்தது. 25 ரூபாய்க்கு கூட தகும் அந்த கீரை கட்டு.
தாத்தா குடுத்துவிட்டு "நாளைக்கி வாழைப்பூ எடுத்துட்டு வர்றேன்... ஆமாம் எங்க பெரிய மனுஷனை காணோம்? என்று கேட்க, "உள்ள சாப்டுக்கிட்டு இருக்கான்" என்று கூறினாள்.
"சரிம்மா நாளைக்கி வாழைப்பூ எடுத்துட்டு வர்றேன்... அப்புறம் எடுத்துக்கிட்டு வந்ததுக்கப்புறம் வேணாம்னு சொல்லிப்புடாத ம்... நான் வர்றம்மா! என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு "கீரை... கீரை" என்று கூவிக்கொண்டே சென்றார் தாத்தா.
உள்ளேயிருந்து அஸ்வந்த் வந்தான். "தாத்தாக்கிட்ட கீரை வாங்கிட்டியா? என்று கேட்டான்.
புன்னகையோடு ராதா அவனுக்கு முத்தம் கொடுத்து தூக்கிக்கொண்டு, கீரையோடு வீட்டு உள்ளே சென்றாள்.
- செந்தில் வேலாயுதம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-of-a-kind-hearted-kid
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக