ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தின் பா.ஜ.க தலைவராக இருந்தவர் ஷேக் வாசிம் பாரி. இவரது குடும்பம் தன் வீட்டுக்கு அருகில் ஒரு கடை நடத்தி வந்துள்ளது. நேற்று இரவு வாசிம் பாரி, அவரின் தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகிய மூவரும் வழக்கம் போல் கடையிலிருந்துள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த தீவிரவாதிகள், சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கிகள் கொண்டு மூவரையும் சரமாரியாகச் சுட்டுள்ளனர்.
இதனையடுத்து மூவரும் பந்திப்போரா அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், துர்திஷ்டவசமாக மூவருமே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் இரவு மக்கள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் உள்ளூர் கட்சியினர் போன்ற அனைவரும் வாஷிம் பாரி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வாசிம் பாரி எதற்காகக் குறிவைக்கப்பட்டார்? யார் அவரைக் கொலை செய்தது என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால், வாசிம் பாரியை பாதுகாக்க 7 பேர் அடங்கிய பாதுகாப்புப் படை நியமிக்கப்பட்டிருந்துள்ளது. ஆனால், நேற்று தாக்குதல் நடந்தபோது ஒரு காவலரும் சம்பவ இடத்தில் இல்லை. இந்த விவகாரத்தில் காவலர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாகவும் அதனால் அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வாஷிம் பாரியின் கடையிலிருந்து வெறும் 10 மீட்டர் தொலைவில்தான் அப்பகுதி காவல் நிலையமும் இருந்துள்ளது, ஆனால், அவர்களாலும் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசியுள்ள காஷ்மீர் ஐ.ஜி விஜய் குமார், “இந்தத் தாக்குதல் மற்றும் கொலை ஆகிய அனைத்தும் பெரிய பாதுகாப்பு தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. எனவே, அலட்சியமாகச் செயல்பட்டது, உயிரைப் பாதுகாக்கத் தவறியது ஆகிய குற்றங்களுக்காக அந்தக் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: `பயங்கரவாதிகள் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு!’ - உடல்மீது அமர்ந்து அழுத 3 வயது குழந்தை
பா.ஜ.க முன்னாள் தலைவர் வாசிம் மற்றும் அவரது குடும்பத்தினரின் இறப்பு தொடர்பாகப் பேசியுள்ள பந்திப்போரா மாவட்ட மருத்துவர், ‘வாசிம் பாரி, அவரின் தந்தை, சகோதரர் ஆகிய மூவரும் தலையில் குண்டடிப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், இங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மூவரும் உயிரிழந்துவிட்டனர். மிக அருகிலிருந்து அவர்களைத் தாக்கியுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, நேற்று இரவு இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொலைபேசியில் விசாரித்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன் இரங்கலைத் தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, ``ஜம்மு - காஷ்மீரில் நடந்த கோழைத்தனமான தாக்குதலில் ஷேக் வாசிம் பாரி, அவரின் தந்தை, சகோதரரை நாம் இழந்துள்ளோம். இது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அந்த துணிச்சல் மிக்க குடும்பத்துக்கு எப்போதும் பா.ஜ.க ஆதரவாகத் துணை நிற்கும். அவர்களின் தியாகம் வீண் போகாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/india/bjp-leader-shot-dead-by-terrorists-in-jammu-kashmir
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக