Ad

செவ்வாய், 7 ஜூலை, 2020

சாத்தான்குளம்: சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு! - விசாரணையில் இனி என்ன நடக்கும்?

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடும் முழுவதும், காவல்துறையின் செயல்பாடு குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை

இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்குள் சாட்சியங்கள் கலைக்கப்பட்டுவிடும் என்பதால், அதுவரை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Also Read: சாத்தான்குளம் சம்பவத்தை நேரில் பார்த்த ரேவதி சொல்வது என்ன? #Revathi | Sathankulam

நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், சாத்தான்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்களான ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர் மீதும் கொலைவழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள், காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள், பென்னிக்ஸின் நண்பர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், உறவினர்கள் எனப் பலரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர, சிசிடிவி காட்சிகள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சேகரித்துள்ளனர்.

சாத்தான்குளம் வழக்கின் விசாரணையை தற்போது சி.பி.ஐ ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் இதுவரை நடந்த விசாரணையின் அறிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் அளிப்பார்கள். அதில் யாரிடம் எல்லாம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, அவர்கள் தெரிவித்த கருத்துகள் என்ன, இதுவரை சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் என்ன என்பதை எல்லாம் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

சி.பி.ஐ

ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி போலீஸார் தனியாகப் பதிவு செய்த வழக்கை முடித்துக் கொண்டு, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்வார்கள். தங்களிடம் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்குவார்கள் எனத் தெரிகிறது.

Also Read: சாத்தான்குளம்: `காக்கிச் சட்டைக்காக சும்மா விடறேன்!' -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை எச்சரித்த சிறை அதிகாரி

சி.பி.ஐ விசாரணை குறித்து மூத்த வழக்கறிஞர்களிடம் கேட்டதற்கு, ``சி.பி.ஐ விசாரணை என்பது தனித் தன்மையுடன் இருக்கும். இதுவரை நடந்த விசாரணைகளை ஆய்வு செய்து அதில், கிடைக்கும் சில குறிப்புகள் அடிப்படையில் தங்கள் புலனாய்வைத் தொடங்குவார்கள். தேவையான நபர்களை அழைத்து நேரிலும் விசாரிப்பார்கள். 

சாட்சியங்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும். ஒவ்வொரு சிறிய விசயங்களையும் அக்கறையுடனும் ஆழமான பார்வையுடனும் விசாரிப்பார்கள் என்பதால் கைது செய்யப்பட்டவர்களிடம் அவர்கள் விசாரிக்கும்போது, முழுமையான தகவலும் கிடைத்துவிடும். சி.பி.ஐ துரிதமாக விசாரணை நடத்தினால் இந்த வழக்கில் குற்றவாளிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்கள் நம்பிக்கையுடன்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/what-will-happen-in-sathankulam-case-after-cbi-take-over-the-probe

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக