சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 84 வயது முதியவர், 82 வயது மூதாட்டி, 62 வயது ஆண் ஆகியோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர்கள், தாமாக முன்வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பினர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மூவரும் கடந்த மாதம் 25-ம் தேதி புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் தற்போது ஒரே நேரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள், முதியவர்கள் உட்பட பலரும் குணமடைந்து வீடு திரும்பி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தைப் போக்கியுள்ளது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, "புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து அறிந்துதான் இங்கு சேர்கிறோம் என்று நோயாளிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட முதியவர்கள் மூவருக்குமே சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்புகள் இருந்தன. இத்தனை வியாதிகளுடன் கொரோனா தொற்று இருந்தநிலையில், மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பின் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனத் தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், நோயாளிகளை மீட்டுக்கொண்டு வரவும் போராடி வருகின்றனர்" என்றார்.
குணமடைந்த முதியவர்களிடம் கேட்டபோது, "வயதானவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால், ஆபத்து என்று கூறியதால், கொரோனா தொற்று எங்களுக்கு ஏற்பட்டவுடன் ரொம்பவே பயந்தோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றிரண்டு நாள்களுக்குப் பிறகு, குணமடைந்து திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கை வந்திருச்சு.
அதற்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் ஒவ்வொரு முறையும் எந்த நேரத்தில் அழைத்தாலும் முகம்சுளிக்காமல் வந்து தேவையைப் பூர்த்தி செய்தனர். கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டோம். மீளக் காரணமாக இருந்தவங்களை என்றைக்கும் மறக்க மாட்டோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/healthy/pudukkottai-older-people-shares-their-experiences-in-corona-ward
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக