கீழடியில் தற்போது 6-ம் கட்ட அகழாய்வு நான்கு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் தொடர்ந்து தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக கொந்தகை கிராமத்தில் கதிரேசன் - சுரேஷ் சகோதரர்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பு அருகே நடைபெறும் அகழாய்வு பழைமையான ஈமக்காட்டில் நடைபெற்று வருகிறது.
இங்கு முதுமக்கள் தாழிகளும் மனித எலும்புகளும் கிடைத்துள்ளன. இதே போல் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், மானாமதுரை, காளையார்கோவில் வட்டங்களிலும் ஈமக்காட்டில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு கிராமத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் கொடுத்த தகவலின்பேரில் இக்கற்களை ஆய்வு செய்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணை ஆய்வாளர் பரந்தாமன், ஆய்வாளர் முருகன் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் சரவண மணிகண்டன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோர் இந்தப் பகுதியில் உள்ள கல்வட்டங்களைக் கணக்கெடுத்தனர்.
இக்குழு ஆய்வு மேற்கொண்ட பின் பேசுகையில், "காளையார்கோவில் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம் என்னும் ஈமச்சின்னங்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியவை நூற்றுக்கும் மேல் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் மிகப்பெரிய கற்கள் இணைத்து வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். அவையெல்லாம் சீரற்ற வகையில் காணப்படும்.
Also Read: `6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!' - கீழடி ஆச்சர்யம்
ஆனால், அவ்வாறு இல்லாமல் ஒரே ஒரு கல் மட்டும் உருளை வடிவில் சீராகச் செதுக்கப்பட்டு தூண் போன்று உள்ளது. குறிப்பிட்ட இந்த ஈமச்சின்னம் சுற்றளவு சுமார் 235 செ.மீ உயரம் பூமிக்கு வெளியே 55 செ.மீ விட்டமானது 100 செ.மீ கொண்ட அளவுகளில் காணப்படுகிறது.
இந்த ஈமச்சின்னக் கல் இருக்கும் பகுதியில் கல்வட்டங்களும் முதுமக்கள் தாழிகளும் நிறைந்து காணப்பட்டாலும் இந்தக் கல் மட்டும் அரிய வகையாக உள்ளதால் ஆண்டுதோறும் நினைவுச் சடங்குகள் நடத்த பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ஒரு ராஜாவோ, தளபதியோ என முக்கியமான நபரைக் குறிப்பிட இவ்வாறு அமைத்திருக்கலாம்.
இதுபோன்ற உருளை வடிவிலான ஒழுங்குமுறையான ஈமச்சின்னக் கல் தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை" என்றும் தெரிவித்தனர்.
Also Read: ` உருவத்திலும் அளவிலும் மாறுபட்ட எலும்புகள்..!' - தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்திய கீழடி
source https://www.vikatan.com/news/tamilnadu/traces-of-ancient-civilizations-found-in-kalayarkoil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக