தனது தாத்தா வசிக்கும் அப்பார்ட்மென்ட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து, செல்ஃபி எடுக்க முயன்று தவறி விழுந்து, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இறந்த சம்பவம், கரூர் நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆண்ட்ராய்டு மொபைல்கள் அனைவரின் கைகளிலும் சரளமாகப் புழங்கத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், செல்ஃபி மோகமும் பெருகிவிட்டது. அதுவும், கொடூரமான விலங்குகளுக்கு முன்பு எடுப்பது, மலைகளில் ஏறி எடுப்பது, ஆற்றுப்பாலத்தில் எடுப்பது, போக்குவரத்து நிறைந்த சாலைகளில் எடுப்பது, பாய்ந்து செல்லும் ரயில்களுக்கு முன்பு எடுப்பது என்று செல்ஃபி மோகத்தால் பலர் உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது.
Also Read: `செல்போனா உனக்கு சோறு போடுது?' -தந்தை திட்டியதால் தவறான முடிவெடுத்த இளைஞர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் செல்ஃபி எடுக்கும் மோகம் பலரிடம் குறைந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஐந்தாவது மாடியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்று, தவறி கீழே விழுந்து இறந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: `சுழலில் சிக்கவைத்த செல்ஃபி மோகம்’ - அருவியில் குளிக்கவந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
கரூர் நகர்ப் பகுதியில் உள்ள எல்.ஜி.பி நகரைச் சேர்ந்தவர்கள், முருகன் - உமாதேவி தம்பதி. இதில், உமாதேவி கரூர் நகர மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு, 15 வயது நிரம்பிய விஷாலினி என்ற மகள் உள்ளார். விஷாலினி புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடந்த விஷாலினிக்கு, போர் அடித்திருக்கிறது. இதனால், அதே எல்.ஜி.பி பகுதியில் உள்ள தனது தாத்தா தங்கியிருக்கும் அரவிந்த் அப்பார்ட்மென்ட்டுக்குச் சென்றுள்ளார். அந்த அப்பார்ட்மென்ட் ஐந்து மாடிகளைக் கொண்டது. ஐந்தாவது மாடியின் உச்சிக்குச் சென்ற விஷாலினி, தனது நண்பர்களுக்கு அனுப்ப ஏதுவாக, செல்ஃபி எடுக்க நினைத்திருக்கிறார்.
மொட்டை மாடி சுவரில் ஏறி செல்ஃபி எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது கால்தவறி கீழே விழுந்திருக்கிறார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த விஷாலினியை தூக்கிக்கொண்டு போய், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
ஆனால், அங்குள்ள மருத்துவர்கள், 'விஷாலினி நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காப்பாற்றுவது கடினம்' என்று கைவிரித்துள்ளனர். இதனால், விஷாலினியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள், 'விஷாலினி இறந்துட்டாங்க' என்று சொல்ல, சோகத்தில் கதறியழுதனர் உறவினர்கள்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மார்ச்சுவரிக்கு விஷாலினியின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, கரூர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்ஃபி எடுக்கப் போய் ஐந்தாவது மாடியிலிருந்து, மாணவி தவறி விழுந்து இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/accident/karur-school-girl-died-due-to-fall-from-fifth-floor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக