Ad

வியாழன், 23 ஜூலை, 2020

கரூர்: `இனி நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்!’ - உதவிகளால் நெகிழும் சுந்தர்ராஜ்

கடலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் சுந்தர்ராஜுக்கு, விகடன் இணையதள செய்தியால் எண்ணற்ற உதவிகள் கிடைத்திருக்கின்றன. ``நானும் என் மனைவியும் இனி நல்ல சாப்பாடு சாப்பிடுவோம். விகடன் செய்தியால் எங்களுக்கு புதுஉறவுகளும் கிடைச்சிருக்கு" என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார்.

சுந்தர்ராஜ்

65 வயது நிரம்பிய பெரியவரான சுந்தர்ராஜ், மனைவி கலாவதியோடு கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் வசிக்கிறார். மாத வாடகை ரூ. 3,000 கொடுத்து, ஒரு வாடகை வீட்டில், ஏழ்மை, சோகம், கவலை, அளவில்லாத பசி உள்ளிட்ட பிரச்னைகளோடு, 'கூட்டு குடித்தனம்' நடத்தி வருகிறார்.

Also Read: கரூர்: `பலவேளைகள்ல டீதான் மதியசாப்பாடு!’ - கலங்கும் கடலை விற்கும் பெரியவர்

கடையில் ஒரு கிலோ வறுத்தக் கடலையை ரூ. 120 கொடுத்து வாங்கி வந்து, மனைவியோடு சேர்ந்து அதை 20 பாக்கெட்களாக போடுகிறார். அதை ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில் அடுக்கிவைத்துக் கொண்டு, `எல்லா சாலைகளும் ரோம் நோக்கி' என்பதுபோல், வேலாயுதம்பாளையத்தைச் சுற்றியுள்ள எல்லா சாலைகளிலும் கடலை விற்க நடக்கத் தொடங்கிவிடுகிறார் சுந்தர்ராஜ்.

அண்ணாமலை உதவி

தினமும் காலை 10 மணிக்கு கிளம்பினால், இரவு 7 மணிவரை நடந்தே போய் வியாபாரம் பார்க்கிறார். ரொம்ப அதிசயமாக சிலநாள்கள் ரூ. 200-க்குகூட விற்கிறது. ஆனால், பலநாள்களில் ஒரு பாக்கெட் கடலைகூட விற்காமல் போய்விடுவதாக நம்மிடம் சொன்னார் சுந்தர்ராஜ். இவரைப் பற்றி, விகடன் இணையதளத்தில், 'பலவேளைகள்ல டீதான் மதியசாப்பாடு!' - கலங்கும் கடலை விற்கும் பெரியவர் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரை பலரையும் உருக வைத்தது. அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, சிலர் சுந்தர்ராஜுக்கு உதவிகள் செய்து, அவரை நெகிழ வைத்திருக்கிறார்கள்.

சுந்தர்ராஜைப் பற்றிய கட்டுரை, வேலாதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராமன், தலைமைக் காவலர் சேகர் ஆகியோர் கவனத்துக்கு சென்றிருக்கிறது. சுந்தர்ராஜுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான 2 மூட்டை அரிசி, மளிகைச் சாமான்களை வாங்கிக் கொடுத்து, `நாங்கள் இருக்கிறோம். எதற்கும் கலங்காதீங்க' என்று சொல்ல, அந்த அரவணைப்பின் கணம் தாங்காமல் கரகரவென கண்ணீர்விட்டார் சுந்தர்ராஜ். அவர்களோடு, சென்ற கரூரைச் சேர்ந்த சமூக நல அமைப்பைச் சேர்ந்தவர்கள், சுந்தர்ராஜுக்கு ரூ. 5,000 உதவித்தொகை வழங்கினர். இவர்களைத் தவிர, கரூரைச் சேர்ந்த வி.த லீடர் அறக்கட்டளையைச் சேர்ந்த அண்ணாமலை, தனது அமைப்பைச் சேர்ந்தவர்களோடு சென்று, ரூ. 5,000 த்தை சுந்தர்ராஜுக்கு வழங்கினார். `உங்களுக்கு நான் மூத்தமகனா இருந்து உதவுறேன். என்ன உதவின்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க' என்று சொன்னார்.

போலீஸார் உதவி

அதோடு, சுந்தர்ராஜ், அவர் மனைவி கலாவதிக்கு அரசு சார்பில் கிடைக்ககூடிய முதியோர் உதவித்தொகையை வாங்கி தரும் முயற்சியிலும் இறங்கி இருப்பதாக சொல்ல, சுந்தர்ராஜ் வார்த்தைகள் வராமல் தத்தளித்தார். தொடர்ந்து, குவைத்தில் பணியாற்றிவரும் மகாதானப்புரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சீதாராமன் என்பவர், ரூ. 4,500 சுந்தர்ராஜுக்கு அனுப்பி வைத்து, உதவிக்கரம் காட்டினார். அதோடு, `இரண்டு மாதமாக 3,000 வாடகையைக் கொடுக்க முடியவில்லை' என்று புலம்பிய சுந்தர்ராஜின் கஷ்டத்தைப் போக்கும்விதமாக, ஆஸ்திரேலியா சிட்னியில் சாஃப்ட்வேர் ஃபீல்டில் பணியாற்றிவரும், கோயமுத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது பெயரை குறிப்பிட மறுத்துவிட்டு, சுந்தர்ராஜின் வாடகை பணத்தை மாதாமாதம் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், சுந்தர்ராஜுக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறார்.

Also Read: `ஆதரவற்ற மக்களின் பசியாற்றும் ராஜஸ்தான் குடும்பம்! - மனிதம் போற்றும் கோவை

`கண்ணுக்கு முன்னால் நடப்பவை எல்லாம் நிஜமா?' என்று மலைப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தர்ராஜிடம் பேசினோம்.

``கடலை விற்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தோம். ஆனால், கொரோனா வந்தபிறகு, என் வருமானம் சுத்தமா குறைஞ்சுபோச்சு. ரேஷன் அரிசியை வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். ஆனாலும், பலநாள் நான் மதியம் வெறும் டீயை மட்டும் குடிச்சுக்கிட்டு காலத்தை தள்ளிக்கிட்டு இருந்தேன். எனக்கு நடந்த விபத்துக்குப் பிறகு, எனக்கு உடம்பு சரியில்லாம போயிட்டு. என் மனைவிக்கு உடம்புக்கு முடியாத சூழல். வாடகை வேற இரண்டுமாசமா கொடுக்க முடியலை. சொல்லமுடியாத கஷ்டத்துல தத்தளிச்சோம். இந்த நிலையில்தான், என்னைப்பற்றி விகடன்ல செய்தி எழுதி, எனக்கு ஏராளமான பேர்களை உதவ வழிபண்ணிட்டீங்க.

சுந்தர்ராஜுக்கு உதவி

இனி நாங்க நல்ல சாப்பாடு சாப்பிடுவோம். அதோடு, எனக்கு உதவுன எல்லோரும், தங்களை என்னிடம் உறவுகளாக பாவிக்கச் சொன்னாங்க. அதைக்கேட்டு நானும், என் பொண்டாட்டியும் மகிழ்ச்சியாயிட்டோம். எங்களுக்கு இத்தனை உதவிகள் கிடைக்க காரணமான விகடனுக்கும் உதவிகள் செய்தவங்களுக்கும் காலம் முழுக்க கடமைப்பட்டிருக்கிறோம்" என்றார் உணர்ச்சிமேலிட!



source https://www.vikatan.com/news/tamilnadu/people-helps-karur-sundarraj-in-his-difficult-times

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக