ஆளும்கட்சியாக அ.தி.மு.க இருந்தாலும் கட்சி அமைப்புரீதியாகப் பலவீனம் அடைந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பன்னீர்செல்வம் அணி தனியாகப் போனது, தினகரன் தனிக்கட்சி கண்டது என அடுத்தடுத்த சோதனைகளால் அ.தி.மு.க-வின் கட்டமைப்புக்குள் விரிசல்கள் ஏற்பட்டன.
உண்மையில் அ.தி.மு.க-வில் அனைத்து நிர்வாக இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்களா என்கிற விபரமே தலைமையிடம் முழுமையாக இல்லை. அந்த அளவுக்கு நிர்வாகரீதியிலான சிக்கலைக் கண்டுள்ளது அ.தி.மு.க தலைமை. அதன் விளைவு, நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி முதல் உள்ளாட்சித் தேர்தலில் சரிவு வரை ஆளும்கட்சிக்கு அடிமேல் அடி விழுந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் கட்சிக்குள் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி முடிவு செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் முதலே கட்சியினை சீரமைப்பு செய்யும் வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அதன் விளைவாக, ஊராட்சி செயலாளர் என்கிற பதவியே அ.தி.மு.க-வில் ஒழிக்கப்பட்டது.
அந்தப் பதவியிலிருந்த பலரும் தினகரன் பக்கம் சென்றதும் ஒரு காரணம் என்கிறார்கள். அதேபோல் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில பொறுப்பும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அப்போதே மாவட்ட வாரியாக ஒரு பட்டியலை அ.தி.மு.க தலைமை எடுத்திருந்தது. எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் ஒழுங்காகச் செயல்படுகிறார்கள், அமைச்சர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் இருப்பவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது பன்னீர் செல்வம் தரப்பு, ``கட்சியில் இணைந்தது முதல் எனது ஆதரவாளர்களுக்கு போதிய பதவிகள் தரவில்லை” என்று முதல்வரிடம் மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன்பிறகு அடுத்தகட்ட ஆலோசனை நடந்துள்ளது. அ.தி.மு.க-வில் தற்போது உள்ள 52 மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இரண்டு தொகுதி அல்லது மூன்று தொகுதியை ஒரு மாவட்டமாக அறிவிக்க முடிவு செய்தனர். அதன்மூலம் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் கணிசமான பதவிகளைக் கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி எண்ணியுள்ளார். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் யாரை மாற்றுவது, யாரை புதிய பொறுப்புக்குக் கொண்டு வருவது என்கிற சிக்கல் கடந்த சில நாள்களாகவே இருந்து வந்தது.
Also Read: `நான் மட்டும்தான் ராஜா!' எம்.ஜி.ஆர். பாணியில் எடப்பாடி பழனிசாமி
கடந்த ஒருவாரமாகவே மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் குறித்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் தினமும் ஆலோசனை நடந்தது. முதலில் மாற்ற வேண்டிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலைத் தயார் செய்து அதைச் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அமைச்சர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளார். இதில் சில அமைச்சர்களுக்கும் வருத்தம் இருந்துள்ளது. சி.வி.சண்முகம் வசம் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைப் பிரிப்பதற்கு அவர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அந்த மாவட்டத்தைப் பிரித்து பன்னீர்செல்வம் ஆதரவாளரான லட்சுமணன் வசம் ஒரு பகுதியை ஒப்படைக்க உள்ளனர். அடுத்தகட்டமாகப் புதிய மாவட்டங்கள் பிரிப்பது குறித்த வரைவு தயார் செய்யப்பட்டு அதற்கும் பட்டியலைத் தயார் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியை அந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக இப்போது அறிவித்துள்ளனர். அந்த மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்டத்தை மட்டும் ராஜேந்திர பாலாஜி வசம் ஒப்படைத்து செக் வைக்க உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தையும் பிரித்து ஒரு மாவட்டத்தை மனோஜ் பாண்டியன் தரப்புக்கு வழங்க வாய்ப்புள்ளது அல்லது ராதாபுரம் இன்பதுரைக்கு வழங்கப்படலாம் என்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டமும் பிரிக்கப்பட உள்ளதாம். அமைச்சராக இருக்கும் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று விஜயபாஸ்கர் நெருக்கடி கொடுத்து வருகிறார். இப்படி புதிதாகக் கட்சிக்குள் 15 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. பட்டியல் தயாராகி இறுதி செய்யப்பட்டு வருவதால் இன்னும் இரண்டொரு நாளில் இந்த பிரமாண்ட அறிவிப்பை, அ.தி.மு.க தலைமை வெளியிட உள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-partys-new-secretaries-will-be-announced-soon
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக