புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மதியாணி கிராமத்தைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி மற்றும் 72 வயது முதியவர் என முதிய தம்பதி சென்னையில் வசித்து வந்தனர். சென்னையில் வசித்து வந்த மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்து போகவே, அடக்கம் செய்வதற்காகக் கணவர் உள்ளிட்ட சிலர் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குக் கொண்டு வந்தனர். ஊரில் உள்ள இடுகாட்டில் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
துக்க நிகழ்வில் கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், சென்னையிலிருந்து வந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், மூதாட்டியின் கணவர் 72 வயது முதியவர் உட்பட 8 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், துக்க நிகழ்வில் பங்கேற்ற, இவர்களுடன் தொடர்பிலிருந்த 100 பேருக்குப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 15 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Also Read: கொரோனா: `சென்னை, மும்பையைவிட அதிகம்!’ - திணறும் பெங்களூரு; அச்சத்தில் மக்கள்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே உடல் நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுத்தான் உயிரிழந்துள்ளார் என்பதும் அதை அறியாமல் உறவினர்கள் ஒன்றுகூடி மூதாட்டியை அடக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது முதியவரும் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளார்.
இதுகுறித்து பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ``மதியாணி கிராமத்தில் அதிகம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டும், கிராமத்தினரே தாமாக முன்வந்து சிறிது நாள்களுக்குக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், அப்படிச் செய்யவில்லை. பொன்னமராவதி டவுன் பகுதிக்குள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரும் நடமாடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நோயாளிகளில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்தவர்களே மூன்றில் ஒரு பங்கினர். குறிப்பாக, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து தினமும் பலரும் வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரையும் கண்டறிந்து உரிய பரிசோதனைகள் எடுக்க வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/15-tested-corona-positive-in-pudukottai-participated-in-last-rites
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக