Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

சாத்தான்குளம்: அடுக்கடுக்கான கேள்விகள்; திணறிய காவலர்கள்! - சி.பி.ஐ விசாரணையில் என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கினை சி.பி.ஐ விசாரித்துவருகிறது. கைது செய்யப்பட்ட 10 போலீஸாரில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும், 3 நாள்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ விசாரித்தது.

காவலர்கள்

அதனையடுத்து, நேற்று முன்தினம், காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை மற்றும் சாமதுரை ஆகிய 3 பேரை 3 நாள்கள் காவலில் எடுத்த சி.பி.ஐ, இன்று இரண்டாவது நாளாக தொடர் விசாரணை செய்துவருகிறது.

Also Read: சாத்தான்குளம் இரட்டைக்கொலை... இறுகும் விசாரணை... அடுத்த ‘அரெஸ்ட்’ பட்டியல் ரெடி!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை, காவல்நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது, சாத்தான்குளம் காவல்நிலைய நீதிமன்றப் பிரிவு ஏட்டு சாமதுரை மற்றும் நீதிமன்றத்தில் இருந்து கோவில்பட்டி கிளைச்சிறைக்கு இருவரையும் அழைத்துச் சென்ற காவலர் செல்லதுரை ஆகிய இருவரும் தற்போதைய சி.பி.ஐ விசாரணையில் உள்ளனர்.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்

கோவில்பட்டி கிளைச்சிறைக்கு இருவரையும் அழைத்துச் சென்றபோது காவலர் செல்லதுரையுடன், காவலர் முத்துராஜ் இருந்துள்ளார். முன்னதாக, காவலர் முத்துராஜை காவலில் எடுத்து விசாரித்த சி.பி.ஐ அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுடன், தற்போது காவலில் எடுக்கப்பட்டு விசாரணையில் உள்ள செல்லதுரை கூறும் தகவல்களோடு சரியாக உள்ளதா என ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.

மேலும், சாத்தான்குளத்தில் இருந்து கோவில்பட்டி கிளைச்சிறை வரை சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருடனும் காவலர்கள் செல்லதுரை மற்றும் முத்துராஜ் இருந்துள்ளனர். இந்நிலையில், அந்த மூன்று மணிநேரப் பயணத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவலர்களோடு ஏதாவது பேசினார்களா? உணவு, தண்ணீர் மேலும் மருத்துவ உதவிகள் ஏதும் கேட்டனரா, இடையில் எங்கேயாவது வாகனத்தை நிறுத்தினீர்களா, பயணத்தின்போது ஆய்வாளரோ, உதவி ஆய்வாளர்களோ யாராவது தொடர்புகொண்டு பேசினார்களா என அடுக்கடுக்கான கேள்விகள் சி.பி.ஐ அதிகாரிகளால் கேட்கப்பட்டதாகவும், அதற்கு பதில் சொல்ல் முடியாமல் காவலர் செல்லதுரை திணறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: சாத்தான்குளம்: `3 காவலர்களுக்கு சி.பி.ஐ காவல்!’ - கோவில்பட்டிக்கு அழைத்துச் செல்ல திட்டம்?

காவலில் எடுக்கப்பட்ட மூவரும், விசாரணை முடிந்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளனர். தொடர்ந்து, காவலர் தாமஸ், எஸ்.எஸ்.ஐ பால்துரை ஆகிய இருவரையும் காவலில் எடுக்குமா சி.பி.ஐ என்பது இனிதான் தெரியவரும்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/cbi-investigation-updates-in-sathankulam-police-brutality-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக