Ad

திங்கள், 6 ஜூலை, 2020

சிவாஜியின் `திருவிளையாடல்'... `ஓ பாட்டாவே பாடிட்டியா' - ஒரு 2K கிட்டின் விமர்சனம்!

லாக்டெளன் ஸ்பெஷலாக 'காலத்தை வென்ற காவியங்கள்' என்ற பெயரில் எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்து கிளாஸிக் ஹிட் படங்கள் டி.வியில் ஒளிபரப்பாகிவருகின்றன. அதில் முக்கியமானது சிவாஜியின் 'திருவிளையாடல்'. எப்போது டி.வியில் ஒளிபரப்பானாலும் இந்தப் பட ரசிகர்களின் ட்வீட்ஸ் டைம்லைனில் ஆக்கிரமிக்கும். 2K கிட்ஸுக்கு இந்தப் படம் எப்படியிருக்கிறது?

டைட்டில் கார்டிலிருந்தே ஆரம்பிப்போம். ஒரு கோயில் கோபுரத்தைக் காட்டி இயக்கம் A.P. நாகராஜன் என வந்தவுடனே நமக்கு இயக்குநர் ஹரி ஞாபகம் வந்துவிட்டார். 'தாமிரபரணி' பார்த்து வளர்ந்த 2K கிட் ஆச்சே!

Sivaji Ganesan, Nagesh

ஐந்து நிமிடங்கள் K.S.மகாதேவனின் பின்னணி இசையோடு டைட்டில் கார்டு ஓடி முடிந்தவுடனே அடுத்து ஒரு பாடல். அது ஓடி முடிந்தவுடனே சிவனும் பார்வதியும் அறிமுகமாகிறார்கள். ஞானப்பழத்தை வைத்து முருகருக்கும் விநாயகருக்கும் சண்டை. அதற்குப் பத்து பதினைந்து நிமிட பாடல். ஒளவையார் பாட்டியை பார்த்தவுடன் ஒன்றாம் வகுப்பு ஆத்திசூடி நாஸ்டால்ஜியாக்கள் றெக்கை கட்டி பறந்தன.

முதல் அரைமணி நேரத்தில் பாட்டுக்கு நடுவில் ஆங்காங்கே படமிருந்தது. ஆனால், இப்போது இருப்பதுபோல் ஏன் எதற்கு என்றே தெரியாமல் பாடல் வராமல் பாட்டின் மூலமே கதையையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் அவை எடுத்துக்கூறின. என்டர்டெய்னிங்காக இருந்தாலே செல்போனில் கைவைக்கும் மில்லியனியம் நோய் கொண்ட நமக்குக் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்தது.

ஒரு வழியாக பாடல்கள் எல்லாம் முடிந்து ஆங்ரி மோடில் இருந்த முருகனை கூலாக்க பார்வதி சில ஃப்ளாஷ்பேக்களை சொல்லத் தொடங்க முதல் எபிசோடு விரிந்தது. முதல் கதையே எட்டாம் வகுப்பு செய்யுளில் படித்த தருமி - நக்கீரர் கதை என்பதால் சுவாரஸ்யம் அதிகரித்தது. சிவாஜி - நாகேஷ் - நக்கீரராக நடித்திருந்த மூவரும் செமத்தியான பர்ஃபாமன்ஸ். சேர்ந்தே இருப்பது - சேரக்கூடாது என அந்த நாகேஷ் - சிவாஜி கேள்வி பதில் கான்வர்ஷேசனை பலவிதங்களில் ட்ரோல் மெட்டீரியலாக இணையத்தில் பார்த்திருப்போம். ஆனால், ஒரிஜினல் வெர்ஷனை முழுப்படத்துடன் கண்கொட்டாமல் பார்த்தது ஒரு தனி ஃபீல்.

படம் முழுவதும் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் அந்த எதிர் - எதிர் விவாதங்கள் எல்லாம் நெருப்பான டக் ஆஃப் வார்கள். அதிலும் இரண்டாவது எபிசோடில் 'ஆணுக்கு பெண் அடிமை' எனப் பேசும் ஈசனுக்கு 'ஆணை பெற்று தருவதே பெண், நானின்றி நீயில்லை. சக்தியில்லையேல் சிவமில்லை' என தாட்சாயணி பதிலடி கொடுக்கும் இடமெல்லாம் அந்தக் காலத்து டூரிங் டாக்கீஸ்களின் கீத்து கொட்டகைகள் கிழியும் அளவுக்குப் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் என நினைக்கிறேன்.

Sivaji Ganesan

சிவனாக சிவாஜி கோபப்படும்போதெல்லாம் ரெட் கலரில் லைட்டிங் செய்திருக்கிறார்கள். சிவனின் ஒவ்வொரு மோடுக்கும் ஏற்றவாறு லைட்டிங். இப்போது இதை பார்க்கும்போது NGK படத்தில் சூர்யாவுக்கு இதே மாதிரி லைட்டிங் செய்திருந்ததும் அந்த இயக்குநரின் ரசிகர்கள் லைட்டிங் வச்சே எங்க ஆளு கதை சொல்லுவாருடா எனக் கம்பு சுற்றியதும் ஞாபகத்துக்கு வந்தது.

1965-ல் சோஷியல் மீடியாக்கள் இருந்திருந்தால் மூன்றாவது எபிசோடில் சிவாஜி சுறா பிடிக்கும் காட்சிகள் வைரல் மீம் கன்டென்ட்டாக மாறியிருக்கும். 'பாட்டும் நானே பாவமும் நானே' இதற்கு 'பாட்டு மட்டும்தான் நீ... பாவம் நாங்கதான்' என இந்த ஒன்லைனை தமிழ் ஜோக்குலகம் பல ஆண்டுகளாக கூறி கடுப்பேற்றினாலும் ஒரிஜினல் வெர்ஷனில் அந்தப் பாட்டுக்கு பாட்டு எபிசோடில் விறகு வெட்டியாக வரும் சிவாஜி கணேசனும் அந்தப் பாட்டும் ஸோ ஸ்வீட்!

இறுதியாக நான் லீனியர் முறையில் ஃப்ளாஷ்பேக் - பிரசென்ட் என மாறி மாறி கதை சொல்லி முருகனை சமாதானப்படுத்தி அழைத்துவந்து ஈசனின் குடும்பம் குரூப் போட்டோ எடுப்பதோடு முடிகிறது படம்.

சிவாஜி - சாவித்திரி - நாகேஷ் - பாலையா - முத்துராமன் தொடங்கி சின்ன சின்ன வசனம் பேசும் சிறு நடிகர்கள் வரை எல்லாருமே 100% பர்ஃபெக்டாக தங்களது நடிப்பையும் வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அட்வான்ஸ்ட்டான பல டெக்னாலஜிக்கள் இருந்தும் இந்தளவுக்கு பர்ஃபெக்ட்டான மேக்கிங்கோடு இன்று வெளியாகும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

Also Read: ஜர்னலிஸ்ட் டு ஸ்போர்ட்ஸ் ஸ்டார்... விஜய் கரியரில் இத்தனை கேரக்டர்களா?! #VijayFilmography

''திருவிளையாடலை டூரிங் டாக்கிஸில் பார்த்திருக்கிறேன். பிளாக் & ஒயிட் டி.வியில் பார்த்திருக்கிறேன். கலர் டி.வியில், LED டி.வியில், ஸ்மார்ட்போனில் என எல்லாவற்றிலும் பார்த்திருக்கிறேன். அடுத்து ஒன்று வந்தால் அதிலும் பார்ப்பேன்'' என ஒருவர் படம் பார்த்துக்கொண்டே டிவீட்டியிருந்தார். அந்தளவுக்கு 2K கிட்களை ஈர்க்காமல் கொஞ்சம் போரடித்தாலும் 'திருவிளையாடல்' படம் ஒரு புதுவித அனுபவமாக இருந்தது.



source https://cinema.vikatan.com/tamil-cinema/2k-kids-review-for-sivajis-classic-movie-thiruvilayadal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக