Ad

திங்கள், 6 ஜூலை, 2020

திருநங்கைகளுடன் காதல்; நேவி ஆபீஸர்; சீட்டிங்! - தூத்துக்குடி இளைஞரின் அதிர்ச்சிப் பின்னணி

சென்னை அமைந்தகரை பிபி கார்டன் பகுதியைச் சேர்ந்த திருநங்கை பர்சனா என்கிற பிரியங்கா (35), கடந்த 17.2.2020-ல் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, `நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். சென்னை புழல் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது உசேன் என்னிடம் பழகினான். எனக்குத் தோல் நோய் இருப்பது தெரிந்து குணப்படுத்துவதாகக் கூறி காதலித்து நம்பவைத்து உண்மையானவன் போல் நடித்து என்னை நம்ப வைத்தான்.

Also Read: `பாரபட்சம் காட்டாமல் சேவை; ஊழலுக்கு இடமில்லை!' - ஒன்றியக் கவுன்சிலரான திருநங்கை ரியா

நானும் என்னுடைய செல்போனை அடிக்கடி போன் செய்ய கொடுப்பேன். அதில், அவன் என்னுடைய போனில் உள்ள போன்பே மூலமாக 1,30,000 ரூபாயை எடுத்துக்கொண்டான். பேலன்ஸ் விவரம் வந்தாலும் தெரியாதவாறு போனிலிருந்து டெலிட் செய்துவிடுவான். கடந்த 12.11.2019 முதல் 25.11.2019 வரை எனது வங்கிக் கணக்கிலிருந்து அவனது வங்கிக் கணக்குக்குப் பணத்தை மாற்றம் செய்துள்ளான். அவனுக்கு சுமார் 5 வங்கிக் கணக்குகள் உள்ளதாகக் கூறியிருக்கிறான். என்னுடைய குரு லத்தீப் என்பவரிடம் ரொக்கமாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். அதையும் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டான்.

இது தெரிந்து நாங்கள் கேட்டதற்கு 100 ரூபாய் பத்திரத்தில் 2,30,000 ரூபாய் திருப்பி தருவதாக எழுதிக் கொடுத்துள்ளான். பின்னர் சகோதரன் அமைப்புக்குச் சென்று புகார் கொடுத்தேன். அவர்கள் மூலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். எனவே முகமது உசேனை பிடித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு என்னுடைய நீண்ட கால சேமிப்புப் பணத்தை (பிச்சை எடுத்து சம்பாதித்தது) வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: `கல்வியும் வேலையும்தான் அங்கீகாரத்தைக் கொடுக்கும்!' - குரூப் 1 தேர்வில் சாதித்த திருநங்கை ஸ்வப்னா

இந்த புகாருக்கு அமைந்தகரை போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை தமிழ்ச்செல்வி என்கிற பாத்திமா, தீக்குளித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 03-7-2020-ல் உயிரிழந்தார். முகமது உசேன் மீது புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் தூத்துக்குடியில் யுவஸ்ரீ தற்கொலை செய்திருக்க மாட்டார் என்று திருநங்கைகள் அமைந்தகரை காவல் நிலையத்தைச் சில தினங்களுக்கு முன் முற்றுகையிட்டனர். இதையடுத்து அண்ணாநகர் சரக காவல் உதவி கமிஷனர் பாலமுருகன் மற்றும் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முகமது உசேன் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். அதன் பிறகு திருநங்கைகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதையடுத்து சென்னை புழலில் தங்கியிருந்த முகமது உசேனின் முகவரிக்கு போலீஸார் சென்றனர். ஆனால், அங்கு அவர் இல்லை. ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மா நகரத்துக்குச் சென்றிருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அமைந்தகரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீஸார் தூத்துக்குடிக்குச் சென்று முகமது உசேனைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பர்சனாவிடம் பணம் வாங்கி ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட முகமது உசேன்

அமைந்தகரை போலீஸார் கூறுகையில், ``முகமது உசேன், தன்னுடைய முகநூலில் கடற்படையில் பணியாற்றுவதுபோல சீருடை அணிந்து போட்டோக்களைப் பதிவு செய்துள்ளார். முகநூல் மூலம்தான் பர்சனாவுக்கும் முகமது உசேனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் முகமது உசேன், சென்னை அண்ணாசாலை ரிச்சி தெருவில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்துவந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு ஏராளமான திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆடம்பரமாக வாழ பர்சனாவிடமிருந்து பணத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு செல்போன் நம்பரை மாற்றிய முகமது உசேன், பர்சனாவுடனான நட்பைத் துண்டித்துள்ளார். அதனால்தான் பர்சனாவுக்கு முகமது உசேன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் தங்கியிருந்த புழல் பகுதிக்குச் சென்று விசாரித்தபோதுதான் முகமது உசேனின் சுயரூபம் தெரிந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். முகமது உசேனுக்கு இன்னும் சில திருநங்கைகளுடன் பழக்கம் இருந்துள்ளது.

திருநங்கை யுவஸ்ரீ

Also Read: `என் பெற்றோரால் உயிருக்கு ஆபத்து!’ -ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கலங்கிய திருநங்கை

அதில் ஒருவர்தான் தூத்துக்குடியைச் சேர்ந்த யுவஸ்ரீ. அவரை திருமணம் செய்த முகமது உசேன், தூத்துக்குடியில் அவருடன் சில மாதங்கள் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது வீடுகட்டக் கடன் வாங்கியுள்ளார். அதனால் முகமது உசேனுக்கும் யுவஸ்ரீக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த வழக்கை தூத்துக்குடி மாவட்ட போலீஸார் விசாரித்து வருகின்றனர். பர்சனா கொடுத்த புகாரின்பேரில் முகமது உசேனை கைது செய்துள்ளோம்" என்றனர்.

கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீஸார் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது அவரால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அதை போலீஸார் தடுத்தனர். அப்போது ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர், செருப்பைக் கழற்றி போலீஸ் வாகனத்தை நோக்கி எரிந்தார்.

தூத்துக்குடி திருநங்கை தற்கொலை வழக்கில் முகமது உசேனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்போது, மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/social-affairs/crime/tuticorin-youth-arrested-in-cheating-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக