“உங்களின் திரைப்படங்கள் நாடகத்தன்மையோடு இருக்கின்றதே?” என்கிற புகார் போன்றதொரு கேள்வி இயக்குநர் விசு முன் வைக்கப்பட்டது. “அப்படியா?.. சந்தோஷம்.. இதை நான் காம்ப்ளிமெண்ட் ஆகவே எடுத்துக் கொள்கிறேன். அவை மக்களால் நாடகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதில்தான் எனக்கு அதிக மகிழ்ச்சி. அதுதான் என் வெற்றியும் கூட” என்பது போல் பதில் சொன்னார் விசு.
அந்த ஊடகத்திற்கேயுரிய பிரத்யேக இலக்கணங்களையும் நுட்பங்களையும் ஒரு சினிமா கொண்டிருக்க வேண்டும் என்று மெனக்கெடும் இயக்குநர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். ‘தாம் சொல்ல வந்த கருத்து அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் எளிமையாகவும் அழுத்தமாகவும் சென்று சேர வேண்டும்’ என்று நினைக்கும் இயக்குநர்கள் இன்னொருபுறம் இருக்கிறார்கள். இதில் விசு இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
கீழ் மத்தியவர்க்க குடும்பங்களில் நிகழும் பல்வேறு விதமான சிக்கல்களை, பிரச்னைகளை இவரது பெரும்பாலான திரைப்படங்கள் ஆராய்ந்தது. இவர் திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன் மேடை நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு அடுத்தபடியாக கூட்டம் பெருமளவில் கூடியது இவரது நாடகங்களுக்குத்தான்.
இப்படி இவர் உருவாக்கிய ஒரு நாடகம்தான் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்கிற பெயரில் பிறகு திரைப்படமாகியது. இது விசு இயக்கிய திரைப்படம் என்பதாக பலரின் மனப்பதிவு இருக்கிறது. ஆனால் இதை இயக்கியது எஸ்.பி.முத்துராமன். இதற்கு கதை வசனம் எழுதியதோடு மட்டுமல்லாமல், சீனிவாச ராகவன் என்கிற முக்கிய வேடத்திலும் நடித்தார் விசு.
விசு என்றாலே ‘ஃபேமிலி சப்ஜெக்ட் இயக்குநர்’, ‘அதிக டிராமாவாக இருக்கும்’ என்கிற முகச்சுளிப்பு இளைய தலைமுறையினரிடம் இருக்கிறது. அந்த வயதுக்குரிய கோணத்தில் அது இயல்பானது. அவர்களுக்கு ரொமான்ஸ், ஆக்ஷன் படங்களே அதிகம் பிடிக்கும். வாழ்க்கையில் பல அடிகளை வாங்கி சிரமப்பட்டு முன்னேறியவர்கள், குடும்பம் என்னும் நிறுவனத்தில் பல அனுபவங்களைக் கடந்தவர்கள் போன்றவர்களால்தான் விசுவின் திரைப்படங்களை அதிகம் ரசிக்க முடியும்.
ஆனால் ‘ஃபேமிலி டிராமா’ என்பதற்காக டி.வி சீரியல் போல ஜவ்வாக இழுக்கும் தன்மை விசுவின் திரைப்படங்களில் இருக்காது. அவருக்கேயுரிய பிரத்யேகமான கிண்டல்களும், கூர்மையான வசனங்களும், சுவாரஸ்யமான திரைக்கதையும் இருப்பதால் இளைய தலைமுறையினரும் அவருடைய திரைப்படங்களை ரசித்துப் பார்க்கலாம். அதற்கானதொரு உதாரணம் ‘குடும்பம் ஒரு கதம்பம்’.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்று பணிக்கு செல்ல ஆரம்பித்திருந்த காலக்கட்டத்தில் அது குறித்து நல்லதும் பொல்லாததுதமாக பல சமூக விமர்சனங்கள் எழுந்தன. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று பெண்கள் பொதுவெளியில் புழங்க ஆரம்பித்த சமயத்தில் நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் புழுக்கங்களும் ஆண்களின் மனதில் எழுந்தன.
‘குடும்பம் ஒரு கதம்பம்’ திரைப்படம் அடிப்படையில் இந்தப் பிரச்னையைப் பற்றிதான் பேசுகிறது. பெண்கள் வேலைக்குச் செல்வதனால் ஒரு லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலியில் உருவாகும் சாதகங்களையும் பாதகங்களையும் நடுநிலைமையில் நின்று அலசுகிறது. ஒரு பட்டிமன்றத்தின் தலைப்பு போல இரு தரப்பு கோணங்களிலும் உள்ள நடைமுறைப் பிரச்னைகளைப் பற்றி அக்கறையுடன் உரையாடுகிறது.
ஓர் ஒண்டுக்குடித்தன வீடுதான் இதன் கதைக்களம். ஃபிளாட் கலாசாரத்தில் வளரும் இளையதலைமுறை இந்தச் சூழலை புரிந்து கொள்வது கடினம். எலி வளைப் போல பல பொந்துகள் இருக்கும் ஒரு கட்டடத்தில்தான் மனிதர்கள் வாழ வேண்டியிருக்கும். பத்து குடித்தனங்களுக்கு இரண்டே இரண்டு பொதுக் கழிப்பறைகள்தான் இருக்கும். அதற்கும் வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்டதொரு வீட்டில் உள்ள நாலைந்து குடும்பங்களின் வழியாக இந்தப் பிரச்னை அலசப்படுகிறது.
பிரதாப் போத்தன் மற்றும் சுமலதா தம்பதியினர், இருவருமே பணிக்குச் செல்வதால் பொருளாதார ரீதியாக பிரச்னையில்லையென்றாலும் குழந்தையை ஹாஸ்டலில் விட்டிருப்பதால் அது சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பிரதாப் போத்தனின் தந்தையான எம்.ஆர். ராஜாமணி, வீட்டுக்குப் பெரியவர் என்கிற முறையில், குழந்தையை அருகிலிருந்து வளர்க்காமல் பெற்றோரின் கடமையில் இருந்து பிறழ்வதை தொடர்ந்து இடித்துரைத்துக் கொண்டேயிருக்கிறார். (எனவே தன் அப்பாவிற்கு ‘அம்ஜத்கான்’ என்கிற பட்டப்பெயரை வைக்கிறார் பிரதாப்).
எஸ்.வி.சேகர் மற்றும் சுஹாசினி பக்கத்து குடித்தனத்தில் இருக்கும் இன்னொரு தம்பதி. இதில் சேகர், பழைமைவாத எண்ணமும் ஆணாதிக்க மனோபாவமும் உடையவர். அடுத்த வேளை சோற்றுக்கு அல்லாடினாலும் மனைவியை வேலைக்கு அனுப்புவதை தன் தன்மானத்திற்கு சவாலான விஷயமாகப் பார்க்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசாமி.
மனைவியை வேலைக்கு அனுப்புவதால் கிடைக்கும் பொருளாதார அனுகூலங்கள் பிரதாப்பிற்கு பெரிதாகத் தெரிகின்றன. ஒருவகையில் மனைவிக்கும் அதில் உடன்பாடுதான் என்றாலும் தன் குழந்தையையும் குடும்பத்தையும் கவனிக்க முடியவில்லையே என்று ஒரு சம்பிரதாய இல்லத்தரசியின் நோக்கில் நின்று உள்ளூற மறுகுகிறார்.
எஸ்.வி.சேகரின் மனைவியான சுஹாசினியோ, ‘முறையாக கல்வி கற்றிருந்தும் தன்னால் பணிக்குச் சென்று குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்க முடியவில்லையே’ என்று வருந்துகிறார். இப்படி நேரெதிராக இயங்கும் இரண்டு மனோபாவங்களின் முரண்கள் படம் பூராவும் சுவாரஸ்யமாக உலவுகின்றன.
இந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் இன்னொரு குடும்பம் விசுவுடையது. ‘குடும்பத் தலைவர்’ என்பது விசுவிற்கு ஒரு சம்பிரதாய அடையாளம் மட்டுமே. மாறாக குடும்பத்தின் அத்தனை சுமையையும் தாங்குபவர் அவரது மனைவியான கமலா காமேஷ். வீட்டின் மூத்த மகனான பூபதி (நடிகை மனோரமாவின் மகன்) சினிமாப் பித்துடன் ரசிகர் மன்ற கோஷ்டியில் இணைந்து பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கிறான். இவனது தங்கை, பள்ளியில் படிப்பவள். தன் குடும்பம் எதிர்கொள்ளும் வறுமையை பரிபூர்ணமாக உணர்ந்தவள்.
பெண்கள் பணிக்குச் செல்வதில் உள்ள இன்னொரு பரிமாணமும் இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த எலி வளையில் உள்ள ஒரு சிறிய பொந்தில், சொற்பமான வாடகைக்கு குடி வருகிறார் ஓர் அப்பாவி ஆசாமி. நாகப்பட்டினத்தில் அடித்த புயல், இவரது வாழ்கையை பந்தாடுகிறது. அங்கு பணியை இழக்கும் இவர், முதலாளியின் உத்தரவின் பேரில் சென்னைக்கு வருகிறார். ஊரில் இருக்கும் மனைவியுடன் கடிதங்களின் வழியாக மட்டுமே உரையாடும் பரிதாப வாழ்க்கை இவருக்கு அமைகிறது.
இப்படியாக சில சுவாரஸ்யமான, தனித்தன்மையை உடைய பாத்திரங்களை உருவாக்கி இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் இன்ப, துன்பங்களின் வழியாக பெண்கள் பணிக்குச் செல்லும் பிரச்னை அலசப்படுகிறது.
‘முரட்டுக்காளை’, ‘சகலகலாவல்லவன்’ போன்ற ‘மாஸ்’ திரைப்படங்களை இயக்குவதில் சாமர்த்தியம் உள்ள அதே எஸ்.பி.முத்துராமன், இது போன்ற ‘கிளாஸ்’ படங்களையும் சுவாரஸ்யம் குன்றாமல் இயக்குவதில் திறமையானவர்.
ஒரு நாடகத்தை சுவாரஸ்யமான சினிமாவாக்குவது உண்மையில் சவாலானதொரு வேலை. நாடகம் என்பது அதற்கேயுரிய வடிவத்தில், சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும் வடிவம். அதை அப்படியே சினிமாவாக்கினால் சலித்துப் போய் விடும். எனவே இந்த வடிவத்திற்குரிய ஜோடனைகளைச் செய்தாக வேண்டும். ஆனால் அதே சமயத்தில் நாடகத்தின் ஜீவனும் பாழ்பட்டு விடக்கூடாது. இந்த இரண்டு வடிவங்களின் எல்லைகளையும் புரிந்து கொண்டு அதை சுவாரஸ்யமான படைப்பாக்கும் கலையில் விற்பன்னர் முத்துராமன். அதற்கான சரியான உதாரணம் இந்தத் திரைப்படம்.
மனைவிக்கு சொம்பு தூக்கும் கணவராக பிரதாப் போத்தன் அட்டகாசமாக நடித்துள்ளார். பிறரின் கிண்டலை துளி கூட பொருட்படுத்தாமல் மனைவியின் ஜாக்கெட்டிற்கு இவர் பட்டன் தைப்பதே அத்தனை அழகு. “ராமாயண காலத்துலயே பெண்கள் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. மன்னருக்கு பின்னாடி சாமரம் வீசறாங்களே.. அவங்கள்லாம் யாரு?” என்று பெண்கள் வேலைக்கு போவதை நியாயப்படுத்தி இவர் சொல்லும் லாஜிக் நல்ல நகைச்சுவை. (இவருக்கு டப்பிங் குரல் தந்திருப்பவர் ‘டெல்லி’ கணேஷ்).
பிரதாப்பிற்கு நேரெதிராக படைக்கப்பட்டிருப்பது எஸ்.வி.சேகரின் பாத்திரம். வீட்டு புரோக்கராக நடித்துள்ளார். “நீயும் உன் ஹஸ்பண்ட் கிட்ட ஜாக்கெட்டிற்கு பட்டன் தைக்கச் சொல்லி கேட்டுப்பாரு” என்று சுஹாசினியின் தம்பி தூண்டி விட, அவரும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு நடுங்கும் குரலில் கேட்க, சேகர் முறைத்துப் பார்க்க அந்தக் காட்சியின் இறுதியில் நிகழும் ‘டிவிஸ்ட்’ அட்டகாசம்.
சுஹாசினிக்கு தமிழில் இது மூன்றாவது திரைப்படம். முதல் இரண்டு திரைப்படங்களிலும் அந்தந்த இயக்குநர்களின் வற்புறுத்தலுக்கேற்ப வந்து போய் விட்டாலும் ‘என்னை ஒரு நடிகையாக முதன் முதலில் உணரத் துவங்கியது ‘குடும்பம் ஒரு கதம்பம்’ திரைப்படத்தில்தான்’ என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார் சுஹாசினி. தான் பணிக்குச் செல்ல விடாமல் மறுக்கப்படுவது குறித்த மனப்புழுக்கத்தை அடக்கிவைத்து ஒரு கட்டத்தில் கணவனிடம் வெடிப்பது... என தன் பாத்திரத்தை அற்புதமாக கையாண்டுள்ளார். ‘அஞ்சு பைசா புளிப்பு மிட்டாயில்’ தங்கள் வறுமையை இவர் மழுப்ப நினைப்பது சராசரி குடும்பத் தலைவிகளின் குணாதிசயம்.
‘டட்டடாய்ங்க்.’ என்கிற முத்தாய்ப்பு சத்தத்துடன் (அதுவொரு code word) இந்தத் தம்பதி வெளியில் செல்வதற்காக திட்டமிடுவதும், ஆனால் வாடிக்கையாளர்களால் ஏமாற்றப்பட்டு பணமில்லாமல் கடற்கரையில் அனத்துவதுமான காட்சி, மிடில் கிளாஸ் பெரும்பான்மையாக எதிர்கொள்ளும் சாபங்களில் ஒன்று.
இந்தப் படத்தின் சுவாரஸ்யங்களுள் மிக முக்கியமானது விசுவின் கேரக்டர். தன் வீட்டிலுள்ள வறுமையை உணராமல் அமெரிக்க அரசியலைப் பற்றி திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அலசுபவர். வேலைக்குச் செல்லாமல் அனைவரிடமும் வம்பிழுத்துக் கொண்டிருப்பவர்.
இவரது நண்பரான ஓமக்குச்சி நரசிம்மன், இவரிடம் "சாப்பிட்டியா?” என்று சம்பிரதாயமாக விசாரிக்க அதற்கு தலையைச் சுற்றும் விதத்தில் இவர் பதில் அளிப்பது சுவாரஸ்யமான நகைச்சுவை. "இனிமே யாரையாவது சாப்பிட்டியா?-ன்னு கேட்பியா?” என்று தலையில் அடித்துக் கொள்வார் ஓமக்குச்சி.
இந்தப் படத்தை இன்றும்கூட நினைவு கொள்ளும் விதத்தில் இது புகழ்பெற்று விட்டது. எனவே இப்படி பேசிக் குழப்புவதை தன் பிரத்யேக பாணிகளுள் ஒன்றாக்கிக் கொண்டார் விசு.
இந்தப் பைத்தியக்கார வசனத்தை எழுதியவர் ‘குரியகோஸ்’ ரங்கா. விசுவின் மைத்துனர். இந்தப் படத்தில், கடிதங்களில் குடும்பம் நடத்தும் பரிதாப வேடத்தில் நடித்திருப்பார். இவர் இளம் வயதில் எழுதிய நாடகங்களை விசுவிடம் காட்டிய போது இந்தக் குறிப்பிட்ட வசனத்தால் ஈர்க்கப்பட்ட விசு, இதை தம்முடைய நாடகத்தில் இணைத்துக் கொண்டாராம்.
ஒரு குறிப்பிட்ட வசனத்தை திரும்பத் திரும்ப சொல்வதும் விசுவின் ஸ்டைல்களுள் ஒன்று. இதில், ‘நீ ஃபேனைப் போடு... நீ கமிஷனருக்கு லைனைப் போடு’ என போலீஸ் ஸ்டேஷனில் விசு பேசுவது சுவாரஸ்யமான காட்சி. இதைப் போலவே ‘பன்’னுக்கு பதிலாக ‘வாழைப்பழத்தை’ வாங்கிச் சாப்பிடும் காட்சியும் சுவாரஸ்யமானது. ‘அதாண்ணே.. இது’ என்கிற கரகாட்டக்காரன் ‘வாழைப்பழ’ காமெடிக்கு முன்னோடி காட்சி என்று இதைச் சொல்லலாம்.
விசுவின் படங்களில் படம் பூராவும் நகைச்சுவை கலந்திருந்தாலும் மிக உணர்ச்சிகரமான ‘சீன்’ ஒன்று வரும். உதாரணத்திற்கு ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் விசுவிற்கும் ரகுவரனுக்கும் நிகழும் காரசாரமான உரையாடல் கொண்ட அந்த ஹைவோல்டேஜ் டிராமா, எவராலும் மறக்க முடியாத ஒன்று. தமிழ் சினிமாவின் முக்கியமான ‘சீன்’களை தேர்ந்தெடுத்தால் அதில் உறுதியாக இடம்பெறும் பெருமை அதற்குண்டு.
அதைப் போலவே இதிலும் அதியுணர்ச்சியைக் கொண்ட ஒரு சீன் வருகிறது. குடும்பத்தின் வறுமையை உணர்ந்த விசுவின் மகள், வீட்டிற்குத் தெரியாமல் சம்பாதித்து மணியார்டர் அனுப்புவார். ஒரு கட்டத்தில் இதைக் கண்டு பிடித்து விடும் விசுவின் குடும்பத்திற்கு, ‘தன் மகள் தவறாக சம்பாதிக்கறாளோ’ என்கிற சந்தேகம் வரும்.
விசுவின் அதுவரையான உடல்மொழி முற்றிலும் மாறி இன்னொரு ‘விசு’வை இதற்குப் பின்னான காட்சிகளில் பார்க்கலாம். “ஒரு அப்பனா.. இந்தக் குடும்பத்திற்கு நீ என்ன செஞ்சிருக்கே.. அதை செஞ்சிட்டு வந்து என்னைக் கேள்வி கேள்” என்று மகள் சவால் விட்டதும்... விசு செய்யும் உணர்ச்சிகரமான காரியங்கள் அனைத்தும் நம்மை நெகிழ வைத்து விடும். இதில் மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருப்பார் விசு.
குடும்பத்திற்காக சம்பாதிக்காமல் ரசிகர் மன்ற வேலைக்காக சுற்றிக் கொண்டிருக்கும் தன் மகனை விசு அறைவதும் சூப்பரான காட்சி.
இந்த ஒண்டுக் குடித்தனகாரர்கள் தரும் சொற்பமான வாடகை போதாமல், இவர்களை வீட்டை விட்டு காலி செய்ய இதன் சொந்தக்காரர் எடுக்கும் முயற்சிகளும் அதில் அவர் பரிதாபமாக தோற்றுப் போகும் காட்சிகள் எல்லாம் பட்டாசு ரகம். ‘ஹவுஸ் ஓனர்’ செட்டியாராக இந்தப் பாத்திரத்தில் சிறிது நேரமே வந்தாலும் கலக்கியிருப்பார் கவுண்டமணி.
இன்னொரு காட்சியில் திருமணத் தரகராக வரும் ‘சாமிக்கண்ணு’, "கன்ப்யூஷன் பண்றவங்கள்லாம் போயிட்டாங்க. நான் என்ன கேட்கறேன்னா,” என்று ஆரம்பித்து விசு கேட்கும் கேள்விகளைத் தாங்காமல் தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடி விடுவார்.
இந்தத் திரைப்படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இதில் மூன்று பாடல்கள் உள்ளன. விசுவின் மகளான நித்யா, சுஹாசினியின் தம்பியை மணமகனாக கற்பனை செய்து கொண்டு ‘பிராமண’ சமூகத்தின் திருமணப் பின்னணியில் பாடும் ‘எங்காத்துக்கு மாப்பிள்ளை நீ’ என்று வரும் பாடலை எஸ்.பி.பியும் ஜானகியும் பாடியிருப்பார்கள்.
பிரதாப் – சுமலதாவின் மகள் பிறந்த நாள் கொண்டாட்ட சமயத்தில் அனைவரும் அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடும் பாடல் ‘கல்வியில் சரஸ்வதி..’. பாடலில் அவரவர்களின் ஆசைகளும் விருப்பங்களும் வெளிப்படும் வகையில் வரிகள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த இரண்டு பாடல்களையும் விட ஹைலைட்டான பாடல் ‘குடும்பம் ஒரு கதம்பம்’. ஒட்டுமொத்த திரைப்படத்தின் ஜீவனும் இந்தப் பாடல் வரிகளில் வந்து விழுந்து விடும். எம்.எஸ்.வி. அருமையாகப் பாடியிருப்பார்.
இது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு. பாடல் வரிகளை எழுதி வாங்கும் உத்சேத்துடன், கண்ணதாசனைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் விசு. கதையின் பாத்திரங்களையும் சூழல்களையும் உணர்ச்சிகரமாக விவரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் சொல்வதை சரியாக கவனிக்காமல் தன் வழக்கப்படி இசையமைப்பாளர் விஸ்வநாதனிடம் குறும்பு செய்து கொண்டிருந்தாராம் கண்ணதாசன்.
விசுவிற்கு உள்ளூற ஏமாற்றமாக இருந்திருக்கிறது. "தாம் சொல்லும் சூழலை இவர் சரியாகவே காதில் வாங்கவில்லையே.. என்ன எழுதி விடப் போகிறார்” என்கிற அதிருப்தி எழுந்திருக்கிறது. ஆனால் இசையமைப்பாளர், மெட்டை சொல்லி முடித்த அடுத்த கணத்திலேயே... இதன் பாடல் வரிகளை தன் பாணியில் உடனே சொல்லியிருக்கிறார் கண்ணதாசன். படத்தின் ஒட்டுமொத்த ஜீவனும் இந்தப் பாடல் வரிகளில் வெளிப்பட்டு விட்டதைக் கண்டு பிரமித்து விட்டாராம் விசு.
படத்தின் மையம் தொடர்பான காட்சிகளின் இடையில் ஒரு காதல் கதையும் ஓடிக் கொண்டிருக்கும். சுஹாசினியின் தம்பி மீது காதல் கொள்வார் விசுவின் மகளான நித்யா. அவருக்கும் இவர் மீது விருப்பம் இருக்கும். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதைச் சுட்டிக் காட்டி, பையனை குழப்பி விட்டு விடுவார் பிரதாப்.
படத்தின் இறுதியில் இந்தக் காதல் முறிவது திரைப்படச் சுவரொட்டிகளின் வழியாக பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டு விடும். ‘அலைகள் ஓய்வதில்லை.. படம் பார்த்தீங்களா.. நல்ல மெசேஜ்’ என்று நித்யா சொல்ல.. ‘எனக்கு பன்னீர் புஷ்பங்கள் படம்தான் பிடிச்சிருக்கு’ என்று சொல்லி அவன் சென்று விடுவான்.
ஒரு பெண் பணிக்குச் செல்வதிலும் வீட்டை நிர்வாகிப்பதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், குழப்பங்கள் போன்றவை இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும். பெண்கள் பணிக்குச் செல்வது மிக சகஜமாகி விட்ட சமகால சூழலில், இந்தத் திரைப்படம் outdated ஆக தோன்றினாலும், இன்றைக்கும் செல்லுபடியாகக் கூடிய காட்சிகள் இதில் உண்டு.
‘பொருளாதார விடுதலை, அதற்காக ஆண்ளைச் சார்ந்து அடிமையாக வாழாதிருத்தல் போன்ற சமூக மாற்றங்கள் பெண்கள் கல்வி கற்று பணிக்குச் செல்வதின் மூலம்தான் நிகழும். சம்பாதிக்கும் கணவன் தன்னை கைவிட்டு விட்டால் என்ன செய்வது என்பதுதான், கல்வியறிவு இல்லாத பல இல்லத்தரசிகள், தங்களின் மனப்புழுக்கங்களை தங்களுக்குள்ளேயே வைத்து அவதிப்படுவதற்கு காரணம்.'
இந்த ஆதாரமான செய்தியை படம் இன்னமும் அழுத்தமாகப் பேசியிருக்கலாம். ஆனால் எண்பதுகளின் காலக்கட்டத்தின் ஒரு சமூகப் பிரச்சினையை இரு தரப்பிலும் நின்று பேசியதற்காகவே இந்தப் படம் பாராட்டப்பட வேண்டியது.
‘பணமின்றி வாழ்க்கை இல்லை. ஆனால் பணமே வாழ்க்கை இல்லை’ என்கிற நியூட்ரலான செய்தியுடன் படம் நிறைவடையும்.
விசுவின் அபாரமான கதை-வசனமும், எஸ்.பி.முத்துராமனின் திறமையான இயக்கமும், முக்கியமான தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் ‘குடும்பம் ஒரு கதம்பத்தை’ இணைத்திருக்கிறது எனலாம்.
இந்தத் தொடரில் அடுத்த எந்தப் படத்தைப் பற்றி பார்க்கலாம்? கமென்ட்டில் சொல்லுங்கள்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/nostalgia-series-revisiting-visu-classic-movie-kudumbam-oru-kadambam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக