'''பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தை' நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறேன். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்" என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பேசிய உரையில் சொல்லியிருந்தார்.
ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றால், இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களில், 80 கோடி பேர் ஏழைகளா... என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அப்படியே சற்று ரீவைண்ட் செய்து கடந்த மார்ச் 26-ம் தேதிக்குச் செல்வோம்... அன்று, இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரடங்கு காலத்துக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்துக்கொண்டிருந்தார். அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றுதான் பிரதமர் மோடி குறிப்பிட்ட 'பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம்.'
இந்தியாவின் நிதியமைச்சரே, இந்தியாவில் 80 கோடி ஏழைகள் இருப்பதாக அந்த அறிவிப்பின்போது சொல்லியிருந்தார்.
2014-ம் ஆண்டின் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, 60 மாதங்களில் அதாவது 5 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையை ஒழிப்பேன் என்று உறுதியளித்தார். அப்படியே அங்கிருந்து, 2019-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்துக்கு வருவோம்... இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, சவுதி அரேபியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. அந்த சுற்றுப் பயணத்தின்போது ஒரு கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி 'இந்தியாவில், இன்னும் சில ஆண்டுகளில் வறுமை ஒழிந்துவிடும் என நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.
2014-ம் ஆண்டில் 60 மாதங்களில் வறுமையை ஒழிப்பேன் என்று உறுதி கூறிய பிரதமர் மோடி, 2019-ம் ஆண்டில் 'வறுமை இன்னும் சில ஆண்டுகளில் ஒழியும் என நம்புகிறேன்' என்று கூறியிருந்தார். தொடக்கத்தில் வறுமையை ஒழிப்பேன் என்றவர் கடந்த ஆண்டு வறுமை இன்னும் ஒழியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும்படி பேசியிருந்தார். இவற்றுக்கெல்லாம் மேலாகக் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் பேசியபோது 'பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம்' மூலம் இந்தியாவில் உள்ள 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று சொன்ன செய்தி, 'இந்தியாவில் 80 கோடி பேர் ஏழைகளா?' என்ற பேரதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
வறுமைக் கோடு?
இந்தியாவில் யார் ஏழைகள்... அதற்கான வரைமுறை என்ன?
2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் பட்ஜெட் அறிவிப்புக்கு முன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையிலான திட்டக் கமிஷன் குழு வறுமைக்கோடு குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 36.3 கோடி பேர். அதற்கு முன்பாக 2012-ம் ஆண்டு சுரேஷ் டெண்டுல்கர் என்பவரின் தலைமையிலான திட்டக் கமிஷன் குழு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 29.6 கோடி என்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு 47 ரூபாயும் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாயும் செலவிட முடியாதவர்கள்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரங்கராஜன் கமிட்டியின் இந்த அளவீடுகள் அந்தச் சமயத்தில் பெரும் கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டது.
`ஒரு லிட்டர் பாலின் விலையே 40 ரூபாய். அப்படி இருக்கையில் கிராமப்புறத்தில் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுபவர்களையும் நகரத்தில் 47 ரூபாய்க்கு மேல் செலவிடுபவர்களையும் எப்படி வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவர்களாகக் கருத முடியும்' என்று பொருளாதார வல்லுநர்களால் அந்த அளவீடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இந்தியாவைப் பொறுத் வரையில், ரங்கராஜன் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைதான் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் அதிகாரபூர்வ மக்கள் தொகை. ஆனால், பல அரசு சார அமைப்புகள் இந்தியாவின் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் தொகையைக் கணக்கிட்டிருக்கிறது. சமீபத்தில் 'National Council for Applied Economic Research' என்கிற அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவில் மொத்தம் 8.4 கோடி பேர்தான் ஏழைகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, கனடா நாட்டைச் சேர்ந்த அரசு சார நிறுவனமான 'SOS CHILDREN'S VILLAGE' என்ற அமைப்பு இந்தியாவில் 80 கோடிக்கும் மேல் ஏழை மக்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.
வறுமையின் வகைகள்!
இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக வறுமை ஒழிப்பு பேச்சளவிலேயே இருப்பதற்கான காரணத்தைப் பார்ப்பதற்கு முன், வறுமையின் வகைகளைப் பார்த்துவிடுவோம்.
`ஒப்பீட்டு வறுமை' (Relative Poverty), `அப்பட்டமான வறுமை' (Absolute Poverty) என்று வறுமையில் இரண்டு வகைகள் உள்ளன.
'ஒப்பீட்டு வறுமை' என்ற பிரிவின் கீழ் வருபவர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்கள். தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஓரளவாவது செய்துகொள்ளக் கூடியவர்கள் இவர்கள். அதுவே 'அப்பட்டமான வறுமை' என்ற பிரிவின் கீழ் வருபவர்கள், வசிப்பதற்கே சரியான இடமில்லாமல் தவிப்பவர்கள். வீடு மட்டுமல்ல எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாதவர்கள்தான் அப்பட்டமான வறுமையைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள்.
இந்தியாவின் மக்கள் தொகையில், வெறும் 10 சதவிகித மக்களிடம் 80 சதவிகித சொத்துகள் இருக்கின்றன.
இந்த ஏற்றத் தாழ்வு காரணமாகத்தான் இந்தியாவில் வறுமையானது தலை விரித்து ஆடுகிறது என்ற கருத்தைப் பல பொருளாதார நிபுணர்கள் முன் வைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலானவர்களின் தனிநபர் வருவாய் என்பது 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது அல்லது மிகக் குறைந்த அளவிலேயே உயர்ந்திருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசியோ மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையானது, ஒப்பீட்டு வறுமை என்ற பிரிவின் கீழுள்ளவர்களை அப்பட்டமான வறுமை என்ற பிரிவின் கீழ் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகிய மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவில் உள்ள சிறு குறு தொழிலாளர்களை வறுமைக்கோட்டுக்குக் கீழ் கொண்டு சென்றுவிட்டதாக ஒரு கருத்து நிலவியது. இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது. பலரும் வேலைவாய்ப்பை இழந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் செல்லப்போகிறவர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்றே தெரியவில்லை.
2014-ம் ஆண்டு ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையில், இந்தியாவில் 36.3 கோடி ஏழை மக்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2020-ல், ஊரடங்குக்கான நலத் திட்ட அறிவிப்பு உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதாவது, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஏழைகள் என்று குறிப்பிட்டிருந்தார். இது இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது கடந்த 6 ஆண்டுகளில், 36 கோடியாக இருந்த ஏழைகளின் மக்கள் தொகை 80 கோடியாக உயர்ந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.
Also Read: 83 டன் போலித்தங்கம்; 2.8 பில்லியன் டாலர் கடன்பெற்ற நிறுவனம்... சீனாவை உலுக்கிய தங்க ஊழல்!
ரங்கராஜன் திட்டக் கமிஷன் அறிக்கையில் சொல்லும் படி, நாளொன்றுக்கு நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் கிராமப்புறத்தில் 32 ரூபாயும் செலவழிக்க முடியாதவர்கள் அப்பட்டமான வறுமையை எதிர்க் கொண்டுள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். அதற்கு மேல் செலவழித்து ஓரளவாவது தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருபவர்கள் ஒப்பீட்டு வறுமை வகையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு வகையான வறுமையையும் சந்தித்துக்கொண்டிருப்பவர்களின் மக்கள் தொகைதான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட 80 கோடிப் பேராக இருக்க வேண்டும்.
மேற்கண்ட ஏழை மக்களின் எண்ணிக்கையோடு, ஊரடங்கு காலத்தில் வேலையின்மை, வருமானமின்மை என்று தொடர்ந்து வரும் செய்திகளைத் தொடர்புப் படுத்திப் பார்த்தால் இனி வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள ஏழைகளின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
கண்ணுக்குத் தெரியாத சிறிய வைரஸான கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பின்னடைவிலிருந்து இந்தியா எப்படி மீளப்போகிறது என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அதே சமயத்தில் இந்தக் கொடிய வைரஸ் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் மக்கள் தொகையையும் அதிகரிக்கப் போகிறது என்பது வருத்தமளிக்கிறது.
ஊரடங்கு காலத்துக்குப் பின் இந்திய மக்கள் எப்படி வறுமையிலிருந்து மீளப்போகிறார்கள் என்பதும் இந்திய அரசு வறுமையை ஒழிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பதும் இந்தச் சமயத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/policies/is-80-crore-people-in-india-are-poor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக