Ad

திங்கள், 6 ஜூலை, 2020

ஆம்பூர்: `செருப்பின் விலை 6,500 ரூபாய்!’ - தொடர் சர்ச்சையில் தி.மு.க எம்.எல்.ஏ

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட பொன்னப்பள்ளி கிராமத்தில், மழைக்குச் சேதமடைந்த தடுப்பணையைப் பார்வையிடுவதற்காக அந்தத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், கடந்த 30-ம் தேதி சென்றார். தடுப்பணைக்குச் செல்லும் பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், செருப்பை ஓரமாகக் கழற்றிவிட்டு வெறும் காலில் நடந்து சென்றிருக்கிறார்.

அப்போது, பின்னால் வந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியின் தி.மு.க செயலாளர் சங்கர் என்பவர் எம்.எல்.ஏ-வின் செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தை அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் வீடியோவாகப் பதிவுசெய்தனர்.

வைரலான சர்ச்சை காட்சி

உள்ளூர் வாட்ஸ்-அப் குழுக்களிலும் ஃபேஸ்புக்கிலும் அந்தப் பதிவை பகிரத் தொடங்கியதால், நான்கு நாள்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் வைரலாகி தி.மு.க-வுக்கு எதிராக சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரத்தில், ``எம்.எல்.ஏ செருப்பைத் தூக்கி வரச்சொல்லவில்லை. சேற்றுப் பகுதி என்பதால், எம்.எல்.ஏ ஓரமாக விட்டுச்சென்ற செருப்பை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் நானேதான் தூக்கிச் சென்றேன்’’ என்று ஊராட்சிச் செயலாளர் சங்கர் விளக்கம் அளித்தார். எம்.எல்.ஏ வில்வநாதனும் இதே விளக்கத்தைக் கூறினார்.

Also Read: `சாதி பார்த்து பழகியது கிடையாது!’ - சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ

இந்தநிலையில், ``தி.மு.க எம்.எல்.ஏ கட்டாயப்படுத்தித்தான் செருப்பைத் தூக்கி வரச் சொன்னார்’’ என்று பல்வேறு தலித் அமைப்புகள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கின்றன. எம்.எல்.ஏ-வைக் கண்டித்து இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை காரை ஆகிய மூன்று இடங்களில் இன்றும், ஆம்பூரில் நாளையும் போராட்டம் நடைபெறுகிறது.

நம்மிடம் பேசிய இந்தியக் குடியரசுக் கட்சியின் வேலூர் மாவட்டத் தலைவர் தலித்குமார்,``ஊராட்சிச் செயலாளர் சங்கர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். எம்.எல்.ஏ வில்வநாதனும் அவரைப் பக்கத்தில் சரிக்குச் சமமாக உட்கார வைத்து ஊடகங்களுக்கு இப்போது பேட்டிக் கொடுக்கலாம்.

தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன்

ஏன்னா, இருவருமே தி.மு.க-வில் இருக்கிறார்கள். உண்மையில் அன்றைக்கு நடந்த சம்பவத்துக்கும், இவர்கள் தரும் விளக்கத்தும் துளியும் சம்பந்தம் இல்லை. எம்.எல்.ஏ அணிந்திருந்த செருப்பின் விலை 6,500 ரூபாய். சேற்றில் படாமல் பட்டியலின சமூக நிர்வாகியைக் கைகளால் தூக்கி வரச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அருகிலிருந்த பல நிர்வாகிகளிடம் பேசித்தான் நடந்த உண்மையை அறிந்திருக்கிறோம்.

சமூக நீதிக்கு எதிராகப் பிரச்னை வரும் போதெல்லாம் கண்டனத்தைப் பதிவு செய்கிறோமே தவிர எம்.எல்.ஏ வில்வநாதன் மீது எங்களுக்குத் தனிப்பட்ட பகையோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. எதேச்சையாக இந்தச் சம்பவம் நடந்திருந்தாலும் எம்.எல்.ஏ அதற்கு சிறிய வருத்தம் கூட மீடியா முன்பு தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் முன்பு நடிக்கிறார்’’ என்றார் கொதிப்புடன்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/dalit-organizations-accused-ambur-dmk-mla

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக