Ad

புதன், 22 ஜூலை, 2020

6 கேமரா, 90 Hz டிஸ்ப்ளே... எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸின் `மிட்ரேஞ்ச்' நார்டு? #FirstImpressions

COVID-19 காரணமாக டெக் விழாக்கள் அனைத்துமே ஆன்லைனில் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒன்ப்ளஸ் இன்னும் ஒரு படி மேலே சென்று AR (Augmented Reality) முறையில் நேற்றைய அறிமுக விழாவை நடத்தியது. கிட்டத்தட்ட போனை நேரில் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இது இன்னும் பல புதுமைகளை இது போன்ற டெக் விழாக்களுக்கு எடுத்துவரும் என நம்பலாம்.

ஒன்ப்ளஸ் AR லாஞ்ச்

அறிமுகம் மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தபடியே அன்பாக்ஸிங் செய்யும் அனுபவத்தையும் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அப்படி நாங்கள் அன்பாக்ஸ் செய்த வீடியோவை கீழே காணலாம்.

சரி போனுக்கு வருவோம். இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போன்களில் முக்கியமானது ஒன்ப்ளஸ் நார்டு என்று சொன்னால் மிகையாகாது. இப்போது 40,000 - 60,000 ரூபாய் ரேஞ்சில் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் தேர்வுசெய்வது ஒன்ப்ளஸைதான். ஆனால், `ஒன்ப்ளஸ் போன்களின் விலை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஏறிவிட்டது; மீண்டும் பழைய விலையில் ஒரு போன் வேண்டும்' என்பது ஒன்ப்ளஸ் ரசிகர்களின் சில வருடக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்குச் செவிசாய்த்து விரைவில் ஒரு மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸிடமிருந்து வரப்போகிறது எனத் தகவல்கள் வெளிவந்தன. இதன் பெயர் ஒன்ப்ளஸ் Z அல்லது ஒன்ப்ளஸ் 8 லைட் என இருக்கலாம் என முதலில் தகவல்கள் கசிந்தது. இறுதியாக இதன் பெயர் நார்டு என அறிவித்தது ஒன்ப்ளஸ். அதிலிருந்தே ரசிகர்கள் பலரும் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இறுதியாக இது நேற்று அறிமுகமும் செய்யப்பட்டுவிட்டது.

என்ன ஸ்பெஷல்?

இதற்கு முன்பு கசிந்த தகவல்கள் அனைத்தும் பெரும்பாலும் உண்மையாகவே இருந்திருக்கிறது. இதுகுறித்து விகடனிலும் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஏறத்தாழ அதே வசதிகளுடன்தான் வெளிவந்திருக்கிறது ஒன்ப்ளஸ் நார்டு.

டிசைன்

டிசைன்

க்ளாஸ் பினிஷுடன் போன் பார்ப்பதற்கு ப்ரீமியமாகவே இருக்கிறது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த ரியல்மீ X3-யை இது நினைவுபடுத்தாமல் இல்லை. அதுவும் முக்கியமாக முன்புறம். பின்புறம் ஒன்ப்ளஸுக்கேயான டிரேட்-மார்க் லுக். முதலில் பல டிசைன்கள் முயற்சி செய்துபார்த்து இறுதியில் ரிஸ்க் எதற்கு எனக் கிட்டத்தட்டப் பழைய லுக்கையே ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள். இதைச் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் CEO கார்ல் பே. மற்றபடி குறைசொல்ல ஒன்றுமில்லை. முழு விமர்சனத்தில் இதைப்பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்ப்ளே

OnePlus Nord

ப்ரீமியம் ஒன்ப்ளஸ் போன்களை போல ஒன்ப்ளஸ் நார்டிலும் AMOLED டிஸ்ப்ளேதான். அதே போன்ற இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் இருக்கிறது (ரியல்மீ X3-ல் இது கிடையாது). 6.44-இன்ச் Full-HD+ டிஸ்ப்ளேயான 90Hz ரீஃப்ரெஷ் ரேட் திறன் கொண்டது. இந்த விலையில் இதுதான் தற்போது சந்தையில் சிறந்த டிஸ்ப்ளே என சொல்லிவிடலாம். மேலே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.

கேமரா

முதல்முறையாக ஒன்ப்ளஸ் நார்டில்தான் இரண்டு செல்ஃபி கேமராக்கள் கொடுத்திருக்கிறார்கள். 32MP (Sony IMX616 sensor) மெயின் கேமரா ஒன்று. மற்றொன்று 8MP அல்ட்ரா-வைடு கேமரா (105-degree FOV). ரியல்மீ X3-ல் இருக்கும் அதே செல்ஃபி கேமரா செட்-அப்.

OnePlus Nord Camera

பின்புறம் நான்கு கேமராக்கள். 48MP (f/1.75) Sony IMX586 sensor மெயின் கேமரா. இது ஒன்ப்ளஸ் 8-ல் இருக்கும் அதே கேமரா சென்சார். இது ஷேக் இல்லாமல் வீடியோ எடுக்க OIS மற்றும் EIS என இரண்டு சப்போர்டுடனுமே வருகிறது. இத்துடன் 8MP அல்ட்ரா-வைடு கேமரா (119-degree FOV), 2MP மேக்ரோ கேமரா மற்றும் 5MP டெப்த் சென்சார் கொடுத்திருக்கிறார்கள். இதில் இரண்டு கேமராக்கள்தான் பெரிதும் பயன்படப்போகிறது. மற்ற இரண்டும் இன்று அனைத்து போன்களிலும் கடமைக்குக் கொடுக்கப்படும் கேமராக்கள்தான்.

சாம்சங், ஆப்பிள், கூகுளிடம் போட்டிப்போடுவதில் சற்றே திணறும் ஒன்ப்ளஸ். ஆனால், அது பிரீமியம் ஏரியா. இந்த மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் மிகச் சிறந்த கேமரா அனுபவத்தை ஒன்ப்ளஸ் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கான மென்பொருள் பலமும் ஒன்ப்ளஸிடம் இருக்கிறது. கேமரா பர்ஃபாமன்ஸ் உண்மையில் எப்படி என முழுமையான விமர்சனத்தில் விரிவாகப் பார்ப்போம்.

பர்ஃபாமன்ஸ்

OnePlus Nord Chipset

இனிவரும் அனைத்து ஒன்ப்ளஸ் போன்களும் 5G சப்போர்ட்டுடன்தான் வரும் என அறிவித்திருந்தது அந்த நிறுவனம். இதுவரை பிரீமியம் 5G போன்களில் கொடுக்கப்பட்டுவரும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 புராசஸரை இந்த மிட்ரேஞ்ச் விலையில் தர முடியாது. முதல்முறையாக மீடியாடெக் புராசஸர்களுடன் ஒன்ப்ளஸ் களமிறங்கலாம் என்ற பேச்சு முதலில் அடிபட்டது. ஆனால், சமீபத்தில் 5G சப்போர்ட்டுடன் குவால்காம் அறிமுகப்படுத்திய மிட்ரேஞ்ச் ஸ்னாப்டிராகன் 765G புராசஸர்தான் ஒன்ப்ளஸ் நார்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 865 அளவுக்குச் சக்திவாய்ந்த சிப்செட் இல்லையென்றாலும் பர்ஃபாமன்ஸில் பெரிய குறைகள் இருக்காது என்றே தெரிகிறது. சில வருடப் பயன்பாட்டுக்குப் பிறகு போன் ஸ்லோ ஆகலாம்.

6GB/8GB/12GB என மூன்று RAM வேரியன்ட்களிலும், 128 GB/256 GB என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்களிலும் ஒன்ப்ளஸ் நார்டு வெளிவந்திருக்கிறது.

பேட்டரி

4115 mAh பேட்டரியும் முந்தைய போன்களில் இருக்கும் Warp 30T ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 765G கொஞ்சம் லைட்டான சிப்தான் என்பதால் இன்னும் கூட நல்ல பேட்டரி லைஃப் இதில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆக்ஸிஜன் ஓஎஸ்தான் என்பதால் ஒன்ப்ளஸில் மெச்சப்படும் மென்பொருள் அனுபவம் நிச்சயம் இதிலும் இருக்கும். இம்முறை இன்னும் கூட ஸ்டாக் ஆண்ட்ராய்டு பக்கம் சென்றிருக்கிறார்கள். கூகுள் போன் மற்றும் மெசேஜிங் ஆப்பை இன்பில்ட்டாக கொடுத்திருக்கிறார்கள்.

ஆக்ஸிஜன் ஓஎஸ்

ஒன்ப்ளஸ் நார்டு ஸ்பெக்ஸ்:

அளவு: 158.3 x 73.3 x 8.2 மிமீ

எடை: 184 கிராம்

டிஸ்ப்ளே: 6.44-இன்ச் Full-HD+ Fluid AMOLED (90Hz, 2400 x 1080 pixels)

புராசஸர்: ஸ்னாப்டிராகன் 765G

RAM: 6GB/ 8GB/ 12GB LPDDR4x

ஸ்டோரேஜ்: 64GB/ 128GB/ 256GB UFS2.1

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 மேல் கட்டமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் 10.5

செல்ஃபி கேமரா: 32MP Sony IMX616 + 8MP அல்ட்ரா-வைடு (105-degree)

பின்பக்க கேமரா: 48MP (f/1.75) Sony IMX586 + 8MP அல்ட்ரா-வைடு (119-degree)+ 2MP மேக்ரோ+ 5MP டெப்த் சென்சார்

பேட்டரி: 4,115 mAh

சார்ஜிங்: Warp Charge 30T

மற்ற சப்போர்ட்: Bluetooth 5.1, WiFi 802.11ac, NFC, GPS, NavIC, GLONASS, Beidou, Galileo

நிறங்கள்: Gray Onyx, Blue Marble

விலை:

6GB+64GB - 24,999 ரூபாய்

8GB+128GB - 27,999 ரூபாய்

12G+256GB - 29,999 ரூபாய்

ஆகஸ்ட் 4 விற்பனைக்கு வருகிறது ஒன்ப்ளஸ் நார்டு!

எதில் விலையைக் குறைத்திருக்கிறார்கள்?

பொதுவாக, ஒன்ப்ளஸ் அதன் போன்களில் சமீபத்திய வேகமான UFS 3.0 ஸ்டோரேஜ் கொடுப்பது வழக்கம். ஆனால், யாரும் பெரிதும் கண்டுகொள்ளாத ஏரியா இதுதான் என்பதால் இதில் UFS 2.1தான் கொடுத்திருக்கிறார்கள். இதன் USB-C ஃபைல் டிரான்ஸ்பரும் மெதுவாகத்தான் இருக்கும். மற்றபடி வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர்ஃப்ரூப் ரேட்டிங் போன்ற ஆடம்பர விஷயங்களை எப்போதும் போலக் கட் செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் குறைந்த விலையில் தங்களது ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் லைட் வெர்ஷன்களை வெளியிடுவது ட்ரெண்ட்டாகிவிட்டது. ஆப்பிள், சாம்சங், கூகுள் என அனைத்து நிறுவனங்களும் இந்த ரூட்டை எடுத்திருக்கின்றனர். ஆனால், அப்படி பிரீமியம் போன்களை எடுத்துவரும்போது அதிலிருக்கும் ஒரு முக்கிய ஹைலைட்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற விஷயங்களைக் கைவிட்டுவிடுகின்றன நிறுவனங்கள். உதாரணத்துக்குக் கூகுள் பிக்ஸல் 3a-வை வெளியிடும்போது அதன் பிரீமியம் கேமராவை மட்டும் அப்படியே எடுத்துவந்தது. ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் SE-ல் ஐபோன் 11 ப்ரோவில் இருக்கும் அதே சிப்செட்டை எடுத்துவந்திருந்தது. ஆனால் மற்ற ஏரியாக்களில் சறுக்கின இந்த போன்கள். ஆனால் ஒன்ப்ளஸ் நார்டு அதைச் செய்யவில்லை. ஆல்-ரவுண்டு நல்ல பேக்கேஜாக முக்கியமான வசதிகளில் சமரசம் இல்லாமல் வெளிவந்திருக்கிறது.

COVID-19 பாதிப்புகளால் உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கும் இந்த நேரத்தில் ஸ்மார்ட்போன் அதிகம் செலவு செய்ய விரும்பமாட்டார்கள் மக்கள் என்பதே அனைவரது கண்டிப்பாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு விலையில் நிச்சயம் மக்களை ஈர்க்கும் ஒரு மாடலாகவே அறிமுகமாகியிருக்கிறது ஒன்ப்ளஸ் நார்டு. இப்படியான புதிய அறிமுகங்களுடன் என்றுமில்லாத அளவு மிட்ரேஞ்ச் சந்தையில் போட்டி சூடுபிடித்திருக்கிறது. யார் இறுதியில் நிலைத்திருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.



source https://www.vikatan.com/technology/gadgets/six-cameras-90-hz-display-oneplus-nord-first-impressions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக