Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

சுற்றுச்சூழல் அறிக்கையை விமர்சித்த 3 இணையதளங்கள் முடக்கம்... வாய்ப்பூட்டு போடுகிறதா மத்திய அரசு?

இந்திய அரசு, புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான 2020-ம் ஆண்டிற்கான வரைவை கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதியன்று வெளியிட்டது. பொதுமக்கள் அந்தப் புதிய வரைவின் மீதுள்ள விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரியப்படுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையே முக்கிய அம்சமாகக் கொண்டிருக்க வேண்டியதுதான் சூழலியல் தாக்க மதிப்பீடு. ஒரு நிலத்தின் இயல்புத் தன்மையும் அதன் சூழலியல் சமநிலையும் அவற்றைச் சார்ந்திருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரமும், தொழில் வளர்ச்சித் திட்டங்களால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாதென்ற நோக்கத்தோடு இந்த மதிப்பீட்டு முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், 1994-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த மதிப்பீட்டு முறையில் பல்வேறு வழிமுறைகளும் செயல்திட்டங்களும் உள்ளன. குறிப்பிட்ட திட்டத்திற்கு மக்களுடைய கருத்து என்ன என்பதில் தொடங்கி, அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் வரை அனைத்தையுமே அந்த வழிமுறைகளின் மூலமாகப் பதிவு செய்யவேண்டும். இதற்குரிய சட்டவிதிகளில் இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் மீண்டும் தற்போது திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அதற்கான திருத்தப்பட்ட புதிய தாக்க மதிப்பீட்டின் வரைவுதான் இந்தப் `புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு-2020.'

இணையதளங்கள்

ஆனால், கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மக்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான போராட்டத்தில் இருக்கின்ற சூழலில், அந்தக் கால அவகாசம், அனைத்துத் தரப்பு மக்களிடமும் அதைக் கொண்டுசேர்க்கப் போதுமானதாக இல்லையென்று கூறி, அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதேநேரம், புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020-ம் ஆண்டு வரைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதாக நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன. தொழிற்சாலைகளின் மாசுபாடுகளிடமிருந்து இயற்கையைப் பாதுகாக்கவென்றே இதுவரை இருந்த பல விதிமுறைகள், மழுங்கடிப்பட்டுள்ளன என்று சூழலியலாளர்கள் இந்தப் புதிய வரைவை எதிர்க்கின்றனர்.

இந்நிலையில், புதிய வரைவு குறித்து இணைய வழியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்த, அதில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து, அது ஏற்படுத்தவுள்ள சூழலியல் சீரழிவுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்த மூன்று இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும், இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகின்ற சுற்றுச்சூழல் இயக்கங்கள்தான் fridaysforfuture.in, letindiabreathe.in, thereisnoearthb.com போன்றவை. இவர்கள் நாடு முழுவதும் எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளான புதிய வரைவை விமர்சித்ததற்காக, மக்கள் மத்தியில் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, அவர்களுடைய இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. சர்வதேச சூழலியல் ஆர்வலராக அறியப்படும் 17 வயதே நிரம்பிய கிரெட்டா துன்பெர்க் தொடங்கி வைத்த fridays for future என்ற இயக்கத்தின் இந்திய இணையதளம்தான் fridaysforfuture.in. அதுபோக, இதர இரண்டுமே, மாணவர்களால் நடத்தப்படுகின்றன. இந்தியாவின், பூமியின் எதிர்காலமாக அறியப்படும் மாணவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை அரசு முடக்கியது, சூழலியல் ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி இளைய சமூக, சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேசிய இணையவழி மாற்றத்திற்கான National Internet Exchange of India (NIXI) என்ற அமைப்புதான் அவர்களுடைய இணையதளங்களை முடக்கியுள்ளது. நடுநிலை அமைப்பாகத் தன்னை அறிவித்துக் கொண்டு இயங்குகின்ற இந்த NIXI அமைப்பு, இந்திய அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளருக்குக் கீழே செயல்படுகின்றது. பல்வேறு இணைய சர்வர்களில் There is No Earth B அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டது தெரிய வந்ததும், அவர்கள் தொலைத்தொடர்புத் துறையிடம் விவரம் கேட்டனர். ஆனால், அதற்குரிய எந்த விவரத்தையும் அவர்கள் அளிக்கவில்லை.

Also Read: சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 - சூழலியாளர்களின் குரலுக்கு செவி கொடுக்குமா மத்திய அரசு?

இந்த மூன்று இயக்கங்களுமே, மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020-ஐ கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த சூழலியல் இயக்கங்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தன. இதுவரையிலான விதிமுறைகள், ஒரு தொழிற்சாலை வருவதற்கு முன்னமே, அது உடன் கொண்டுவரக்கூடிய சீர்கேடுகளை மதிப்பிட வலியுறுத்தியது. அதன் அடிப்படையிலேயே, குறிப்பிட்ட திட்டத்திற்கு சூழலியல் அனுமதி கொடுக்கலாமா என்பது முடிவு செய்யப்படும். ஆனால், தற்போதைய திருத்தத்தில் தொழிற்சாலையைத் தொடங்கி, அதை நடத்திக் கொண்டே, மற்றொரு பக்கம் சூழலியல் அனுமதியைக் கோரிப் பெறலாம். இது, சீர்கேடுகளைப் பற்றிய கவலையே இல்லாத அணுகுமுறை என்று சூழலியலாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இது இப்போதுள்ள, குறைந்தபட்ச சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இல்லாமலாக்கிவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து, LetIndiaBreathe தரப்பில் பேசினோம். சூழலியல் தாக்க மதிப்பீடு புதிய வரைவு குறித்த அவர்களுடைய விமர்சனங்களைக் கேட்டபோது, ``புதிதாகத் திருத்தப்பட்டுள்ள விதிமுறைகளில் தீவிரமாகக் கவனிக்கவேண்டிய சிக்கல்கள் இருக்கின்றன. அதிலும் உச்சபட்சமாக, திட்ட வேலைகளை சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பே தொடங்குவதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய அம்சம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இந்தத் திருத்தம், இந்தியச் சூழலியல் நீதிப் பரிபாலனத்தின் அஸ்திவாரத்தையே குலைக்கின்றது. அலெம்பிக் பார்மா நிறுவனம் மற்றும் ரோகித் பிரஜபதிக்கு இடையிலான வழக்கில், உச்சநீதிமன்றம் இதுகுறித்துப் பேசியுள்ளது. அந்த வழக்கில், `சூழலியல் நீதியைப் பொறுத்தவரை, இப்படி திட்டத்தைத் தொடங்கிய பின்னர் அனுமதி கொடுப்பதென்பது, நீதியின் அடிப்படைக் கொள்கைகளுடைய தரத்தைக் குறைப்பதற்குச் சமம். அதோடு, இந்தச் செயல் ஜனவரி மாதம், 27-ம் தேதி 1994-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டத்தைப் பொறுத்தவரை வெறுப்பூட்டக்கூடிய செயல். இது சூழலைச் சீரழிக்கக் கூடியது. சரிசெய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்தகூடியது" என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய பல ஆபத்தான திட்டங்களுக்கு, பொதுமக்கள் கருத்துக் கேட்பு விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு மோசமான அம்சங்கள், சூழலுக்குச் சீரழிவை ஏற்படுத்தவல்ல, தொழிற்சாலைகளுக்குச் சாதகமான வழிமுறைகள் இந்தப் புதிய வரைவில் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, பன்னாட்டு நிறுவனங்களிடம் இயற்கை வளங்களைத் தாரை வார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் இப்போது செய்யவுள்ள மாற்றங்கள் சீர்திருத்த முடியாத இழப்புகளைக் கொண்டுவரும்.

சூழலியல் நீதிக்குரிய அடிப்படைக் கொள்கைகளைத் தகர்த்தெறிவது, ஒரு நாட்டில் தொழில் வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைந்த வகையில் வளர்க்க முடியுமென்ற நம்பிக்கையை உடைத்தெறிவதற்குச் சமம்" என்று எச்சரிக்கின்றார் LetIndiaBreathe அமைப்பைச் சேர்ந்த ஜெயா பாலச்சந்திரன்.

சுற்றுச்சூழல் சீரழிவு

இதுபோக, மாசுபடுத்தக்கூடிய தொழிற்சாலைகள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கான அம்சங்கள்கூட அதில் முழுமையாக இல்லை. இவை குறித்த மக்களுடைய கருத்துகளை, பொதுமக்கள் கருத்துப் பதிவுக்கான கால அவகாசம் முடிவதற்குள் பதிவு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு, மக்களுக்குப் புதிய வரைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய கருத்துகளைச் சேகரித்து, அரசிடம் பதிவு செய்தது LetIndiaBreathe அமைப்பு. கால அவகாசம் முதலில் மே 22-ம் தேதியாக இருந்தது. பின்னர் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, மேலும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டம் என்பதனால், சூழலியலாளர்கள் இதுபோல் இணையவழியாகத் தங்கள் எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பிரகாஷ் ஜவடேகருக்கும் அமைச்சகத்தின் இதர அதிகாரிகளுக்கும் இந்த வரைவு குறித்த கருத்துகளை ஈ-மெயில் வழியாக மக்கள் அனுப்புவதற்கு அவர்கள் உதவி செய்தனர். அந்த இ-மெயில் வசதியில், புதிய வரைவு வருவதனால் ஏற்படக்கூடிய சீர்கேடுகள், ஆபத்துகள், நாட்டின் பல்லுயிரிய வளத்தில் அதன் தாக்கம், மாசுபாட்டு அளவில் இருக்கக்கூடிய விளைவுகள் என்று அனைத்தையும் விவரித்தது. அதைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு மெயில் அனுப்ப முயன்றவர்களில் பெரும்பாலானோர் தங்கள் இ-மெயில் சென்றடையாமல், மீண்டும் அவர்களுக்கே திரும்பிவிட்டதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு, LetIndiaBreathe அமைப்பு, மெயிலில் இருக்கின்ற முக்கிய வார்த்தைகளில் புதிய வரைவு குறித்த வார்த்தைகளை நீக்கிவிட்டு அனுப்பவும் அவரவர் பிராந்திய மொழிகளில் தங்கள் கருத்துகளை அனுப்பவும் அறிவுறுத்தினர். அந்த இ-மெயில்கள் அமைச்சகத்தின் இணைய முகவரியைச் சென்றடைந்தன. அப்போதுதான் அவர்களுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமக்கு வருகின்ற இ-மெயில்களில் வடிகட்டும் வேலையைச் செய்வது தெரியவந்துள்ளது. அதையும் சமாளித்து, பிராந்திய மொழிகளிலும் புதிய வரைவு குறித்த வார்த்தைகளை மேற்கோள் காட்டாமலும் கருத்துகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, LetIndiaBreathe அமைப்பினுடைய இணையதளம் முடக்கப்பட்டது. அவர்களைப் போலவே, There is no Earth B என்ற அமைப்பும் தங்கள் இணையதளம் மூலமாக, மக்களை ஒன்றுபடுத்தி, இதுவரை 30,000-க்கும் அதிகமான இ-மெயில்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சத்திற்கு அனுப்பியுள்ளது.

Also Read: ஹுபலி-அங்கோலா திட்டம்... சூழலியல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம்... சூழலியல் சுரண்டலுக்கு வித்திடுகிறதா மத்திய அரசு!

``வாழ்வாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020-ஐ எதிர்த்து மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க நாங்கள் உதவினோம். எங்களைப் போலவே, இன்னும் பல இணையதளங்களும் அதையே செய்தன. இந்நிலையில், நாங்கள் உட்பட மூன்று அமைப்புகளுடைய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதற்கான எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை. மக்கள் குரலை முற்றிலுமாக முடக்கும் நோக்கத்தைத்தான் இந்தச் செயல்பாடு வெளிப்படுத்துகின்றது. நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேயிருப்போம். ஜனநாயக் கருத்துரிமைக்கு எதிரான இந்த அணுகுமுறைக்கு நாங்கள் பணிந்து போக மாட்டோம்" என்று LetIndiaBreathe அமைப்பு தெரிவித்துள்ளது.

LetIndiaBreathe அமைப்பைச் சேர்ந்த ஜெயா பாலசந்திரன் அதுகுறித்துப் பேசியபோது, ``இதுகுறித்து NIXI தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்களது பதிலுக்காகக் காத்திருக்கின்றோம். ஆனால், இப்போது வரைக்குமே ஏன் எங்கள் இணையதளத்தை முடக்கினார்கள் என்று எந்த விளக்கத்தையுமே NIXI கொடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும், இந்த இணைய முடக்கம் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளோம்.

தொழிற்சாலை மாசுபாடுகள்

இதுகுறித்துச் சட்டப்படி அணுகுவதற்கு முன்பாக, இணையதளம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமென்று நம்புகின்றோம். இல்லையென்றால், உரிய வகையில் சட்டப்படி நாங்கள் இதை எதிர்ப்போம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மட்டுமில்லை, வேடந்தாங்கல் சரணாலயம், டிபாங் பள்ளத்தாக்கு, மோலெம் தேசியப் பூங்கா பிரச்னை என்று பல சூழலியல் பிரச்னைகளுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். இனியும் கொடுப்போம்" என்று கூறியுள்ளார்.

லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட letindiabreathe.in இணையதளத்தைப் போலவேதான், இதர அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்தியா முழுவதும் ஏற்படுகின்ற சூழலியல் சீர்கேடுகளை எதிர்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த இளைய சமுதாயத்தை முடக்கி உட்கார வைக்க மத்திய அரசு முயல்வதாக சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அணுகுமுறை, மக்களைக் கேள்வி கேட்க விடாத, விமர்சிக்க விடாத அணுகுமுறை, நம் எதிர்காலச் சமூகத்தின் ஜனநாயக ஆரோக்கியத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. மத்திய அரசு உடனடியாக, இந்த இணையதள முடக்கத்திலிருந்து பின்வாங்க வேண்டும். கருத்துரிமைக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/govt-blocked-3-environmental-websites-for-opposing-new-eia-draft

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக