Ad

செவ்வாய், 21 ஜூலை, 2020

புதுக்கோட்டை: 108 ஆம்புலன்ஸில் பிரசவம்! - ஓட்டுநர், உதவியாளருக்குக் குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் எருக்குமணிப்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரின் மனைவி ஐஸ்வர்யா (23). நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, ராப்பூசல் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர் ஐஸ்வர்யாவை உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, பரிந்துரை செய்தனர். இதையடுத்து, இலுப்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

108 ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் முத்துடையான்பட்டி என்ற இடம் அருகே சென்றபோது, ஐஸ்வர்யாவுக்குப் பிரசவ வலி அதிகரித்து வலியால், துடித்துள்ளார். ஆம்புலன்ஸை இதற்கு மேல் இயக்க முடியாது என்று பெண்ணின் நிலைமையை அறிந்த மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தேவா பாஸ்கரன் ஆகியோர் ஆம்புலன்ஸிலேயே வைத்து பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். அதன்படி, ஆம்புலன்ஸிலேயே வைத்து இருவரும் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். சுகப்பிரசவத்தில் ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

Also Read: பீகார்: `பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி!’ - கழுத்தளவு தண்ணீரில் இறங்கி மீட்ட மக்கள்

தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிற்காக, தாயும் குழந்தையும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். ஆபத்தான நேரத்தில் பிரசவம் பார்த்த இருவருக்கும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தேவா பாஸ்கரன் கூறும்போது, ``ஆம்புலன்ஸில் செல்லும்போதே சில பெண்களுக்குப் பிரசவ வலி அதிகமாகிறது. அவர்களுக்குக் கட்டாயம் பிரசவம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

பிரசவ சிகிச்சை என்பது மிகவும் சிக்கலானது. ஆனாலும், பதற்றம் கொள்ளாமல் பிரசவம் பார்க்க வேண்டும். இரண்டு உயிர்களையும் எப்படியும் காப்பாற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையில்தான் பிரசவம் பார்க்க முடிவு செய்வோம். அதுபோலவே, இரண்டு உயிர்களையும் காப்பாற்றிக் கொடுத்துவிடுவோம். இந்த ஆண்டில் மட்டும் இந்த ஆம்புலன்ஸில் 10-க்கும் மேற்பட்ட பிரசவங்களை வெற்றிகரமாகப் பார்த்துள்ளோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/woman-delivers-baby-boy-in-108-ambulance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக