Ad

வியாழன், 23 ஜூலை, 2020

வேலூர்: `வீதியில் கிடந்த 2 மூதாட்டிகள்!’ - இதயத்தை நொறுக்கிய துயரம்

கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல துயரங்களைக் கொடுத்திருக்கிறது கொரோனா. மனித இனம் இதுவரையில் சந்திக்காத வாழ்வியல் சிக்கல்களை நான்கு மாதங்களில் எதிர்கொண்டிருக்கிறோம். இன்னும் என்னவெல்லாம் சோதனைகளைக் கடக்கப்போகிறோம் என்பதுதான் அச்சத்தின் உச்சமாக இருக்கிறது. இப்படியான சூழலிலும், மனிதம் மரித்துப் போகாமல் காக்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும்கூட. எளியோரை அரவணைக்க முடியாவிட்டாலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் போகிற போக்கில் எவராலும் செய்துவிட முடியும்.

மூதாட்டியை மீட்ட சேவை மைய அலுவலர்கள்

நமக்கென்ன என்று கடந்துசெல்லும் ஒரு நொடியில் உதவிக்கரம் நீட்டலாம். சமூக அவலங்களைத் துடைத்தெறிய `அன்புக்கரம்’ என்ற வார்த்தையைச் சமூக பரவலாக மாற்ற வேண்டும் என்கிறார்கள் சமூகப் பற்றாளர்கள். இந்த நிலையில், வேலூரில் ஆதரவற்ற மூதாட்டிகளை வீதியில் கிடத்திவிட்டு சென்ற சம்பவம், இதயத்தை நொறுக்கும் விதமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: மதுரை: `என் குடும்பத்தில் இருப்பவங்களா நினைக்கிறேன்!’ - டீ விற்று உதவும் ஆதரவற்ற இளைஞர்

வேலூர் பாகாயம் பகுதியில் இன்று காலை, எழுந்து நடக்க முடியாத நிலையில் இரண்டு மூதாட்டிகள் கிடப்பதாக சமூக நலத்துறையின் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்காவிற்கு போன் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். மூதாட்டிகள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் படுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை தங்களின் காரிலேயே மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர் சேவை மைய அலுவலர்கள்.

மூதாட்டியை மீட்ட சேவை மைய அலுவலர்கள்

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் மூதாட்டிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியவில்லை. கொரோனா சூழல் காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யவும் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அரியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டிகளுக்குத் தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட பிறகு, அங்குள்ள காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த மூதாட்டிகளை எங்கிருந்து யார் கொண்டுவந்து வீதியில் கிடத்தினார்கள் என்று தெரியவில்லை. உடல்நிலை தேறிய பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்ற முடிவில் உள்ளனர் சமூக நலத்துறையின் சேவை மைய அலுவலர்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/vellore-officials-rescued-2-older-women-abandoned-in-road

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக