Ad

புதன், 22 ஜூலை, 2020

புதுக்கோட்டை: மூளையில் ரத்தக்கட்டி, முடங்கிய கை, கால்கள்! - முதியவரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்

புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவர் கடந்த மாதம் 26-ம் தேதி மயக்கமடைந்து கீழே விழுந்ததால், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். அதில், மூளையின் வலது மற்றும் இடதுபுறத்தில் மூளையின் பக்கவாட்டு பகுதி, மேல்பகுதிகளில் ரத்தக்கட்டு இருப்பது தெரியவந்தது.

நன்றி கூறும் ராஜேந்திரன்

இதையடுத்து, ரத்தக்கட்டைச் சரிசெய்யத் தொடர்ந்து மூன்று நாள்கள் வரையிலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால், கடந்த மாதம் 30-ம் தேதி நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யத் திட்டமிட்டனர். மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஸ்டாலின் ராஜ்குமார் தலைமையில் அறுவைசிகிச்சை நடைபெற்றது. மருத்துவர்கள் சாய்பிரபா, சரவணன் தலைமையிலான மருத்துவர்கள் நோயாளிக்கு மயக்க மருந்து அளித்தனர். நோயாளி தலையின் இரு பக்கங்களிலும் இரண்டு துவாரங்கள் வீதம் நான்கு துவாரம் இடப்பட்டு அதன்மூலம் ரத்தக்கட்டி அகற்றப்பட்டது.

Also Read: கொரோனா: `62 முறை டயாலிசிஸ்!’ கைவிடப்பட்டவரைக் காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்

அறுவைசிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு நாள்களுக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட நோயாளி ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் உள்ளார்.

இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, "வயதானவர்கள் பெரும்பாலும், மூளையின் ரத்தக் குழாய்களில் வெட்டு ஏற்பட்டு மயக்கம் வந்து கீழே விழ நேரிடலாம். அப்படியே கீழே விழுந்து அறிகுறி ஏதேனும் தெரியவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக உடனே சி.டி ஸ்கேன் எடுத்து மருத்துவரை அணுகுவது அவசியமான ஒன்றாகும்.

நோயாளியுடன் மருத்துவர்கள்

மூளையின் இருபக்கமும் ரத்தக் கசிவு ஏற்பட்டுக் கட்டி உருவானதால், நோயாளியின் வலது கை மற்றும் இரண்டு கால்களும் பக்கவாதம் போல முடங்கி நோயாளியின் நிலை மிகவும் மோசமானது. உடனே, அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு ரத்தக்கட்டி அகற்றப்பட்டு நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள சுமார் 10 லட்சம் வரையிலும் செலவாகும். அரசு மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/pudukkottai-government-doctors-saves-old-mans-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக