ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் தேதி ``உலக மண் தினம்” உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
குறைந்து வரும் மண்வளம், மண் மாசுபாடு இவற்றால் எதிர்கால தலைமுறை சந்திக்கப் போகும் சவால்களை கருத்தில் கொண்ட தாய்லாந்து மன்னர் பூமி பால் முயற்சியால் இந்த நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2013 ஆண்டு Food and agriculture organization [FAO] நிறுவனத்தால் முன் மொழியப்பட்டு ஐக்கிய நாடு சபையால் அங்கீகாரம் தரப்பட்டு 2014 முதல் இந்த நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதை முன்னெடுக்க காரணமாக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அவர்களின் பிறந்த தினத்தில் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படும் நிகழ்வு இது.
மண் என்றால் என்ன?
அதன் முக்கியத்துவம் என்ன?
மண் நமக்கு எவற்றை தருகிறது? எப்படி தருகிறது?
நாம் மண்ணை எப்படி மாசுபடுத்துகிறோம்?
மண்ணை ஏன் நாம் பாதுகாக்க வேண்டும்? எப்படி பாதுகாக்க வேண்டும்? யார் பாதுகாக்க வேண்டும்?
என்ற பல கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் நாள்
``உலக மண் தின நாள்”
உணவின் தொடக்கம்...
நாம் உண்ணும் உணவு மண்ணில் இருந்துதான் தொடங்குகிறது. இந்த பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் மண்ணை நம்பியே இருக்கின்றன. ஆனால் நாம் மண் பற்றி சிந்திக்கிறோமா?? இல்லை !! அதை சிந்திப்பதற்கான நாள்தான் டிசம்பர் 5.
டிசம்பர் 5, 2014 முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த மண் நாளுக்காக ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருள் [THEME] தரப்படுகிறது அந்த கருப்பொருளை மையமாக வைத்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வருடத்திற்கான கருப்பொருள்
SOIL AND WATER , A SOURCE OF LIFE
இந்த கருப்பொருளைக் கொண்ட ஒரு புறநானூற்றுப் பாடலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்தார் சங்க இலக்கிய புலவரான குடபுலவியனார்.
“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே”
நல்ல நிலமும் நல்ல நீர்ப் பாசனமும் இருந்தால்தான் உணவு விளைச்சல் கிடைக்கும் என்பது இந்தப் பாடலின் பொருள்.
தரமான மண் [HEALTHY SOIL]
தரமான மண் வானம் தரும் மழை நீரை தன் மேல் படிந்திருக்கும் மாசுகளை நீக்கி நல்ல நீராக தனது அடிப்பகுதியில் சேர்த்து வைத்துக் கொள்கிறது.
இந்த நீரை நாம் கிணறு, போர் மூலமாக குடிநீராக இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
எதிர்கால தலைமுறைக்கு இந்த நல்ல நீர் கிடைக்குமா?? அதற்கு வாழும் தலைமுறைதான் வழி விட வேண்டும்.
நல்ல மண் ஏராளமான உயிரினங்களை தன்னகத்தில் வைத்துக் கொண்டு பல கோடி உயிரினங்கள் வாழ துணை புரிகின்றன.
ஒரு அங்குலம் கனமுடைய, மண் உருவாக 500 ஆண்டுகள் தேவை.
ஒரு கிராம் மண்ணில் 5 முதல் 7 ஆயிரம் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன.
ஒரு ஏக்கர் மண்ணில் 5 முதல் 10 டன் நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் வாழ்கின்றன.
ஒரு ஏக்கர் நல்ல விவசாய நிலத்தில் 1.4 டன் மண்புழுக்கள் உயிர் வாழ்கின்றன, அவை 15 டன் உரத்தை தருகின்றன,
இதுதான் இயற்கையின் கொடை.
மண்ணின் மைந்தர்கள்
மண்புழுக்கள் மண்ணின் கீழே உள்ள கனிம வளங்களை தாவரங்களுக்காக மேலே கொண்டு வருகின்றன.
தாவர வளர்ச்சிக்கு தேவையான பாக்டீரியா, பூஞ்சை போன்ற நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வாழ வழி செய்கின்றன.
காற்றும் மழை நீரும் மண்ணுக்குள் செல்ல பாதை ஏற்படுத்துகிறது, வீணாகும் மழை நீரை நிலத்தடி நீராக சேமித்து வைத்துக் கொள்ள துணை செய்கிறது.
தாவர வேர்கள் கனிமம் கடந்த மண்ணீரை பெற்றுக் கொள்ளவும் வேர்கள் சுவாசிக்கவும் உதவுகின்றன.
“நாங்கூழ் மாமை காட்டும் நானிலத்தின் தாதுதன்னை”
“மண்புழு [நாங்கூழ்] நிறம் [மாமை] காட்டும் நானிலத்தின் கனிமங்களை [தாதுதன்னை]
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களிலும் இருக்கும் கனிமங்களை மண்புழுவின் நிறம் காட்டுமாம்’ எனச் சொல்கிறது பழந்தமிழர் பாடல் ஒன்று.
மனிதர்களைப் பற்றி குறிப்பிடும்போது “நான் இந்த மண்ணின் மைந்தன்” என சொல்வதுண்டு ஆனால் உண்மையில் மண்ணின் மைந்தர்கள் இந்த மண்புழுக்கள் தான்.
நமது இந்திய நிலப்பரப்பில் 45 சதவீதம் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது
நமது மண்ணில் வளரும் தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் பொட்டாசியம் சுண்ணாம்புச்சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனிஸ், போன்றவற்றை இந்த மண் தாவரங்களுக்கு தருகிறது.
அதன் மூலம் சத்துக்களை பெற்ற தாவரங்கள் அந்த சத்துக்களை மண்ணில் வாழும் உயிரினங்களுக்கு அளித்து உயிரினங்கள் வாழ துணை புரிகிறது.
ஐம்பெரும் பூதங்கள்
நம் பழந்தமிழர்கள் மண்ணை எவ்வாறு போற்றினார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள மறுபடியும் ஒரு புறநானூற்று பாடலுக்கே வருவோம்.
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” - (புறம்: 2: 1 - 6)
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
மண் செறிந்தது நிலம்;அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று;அக்காற்றில் வளர்ந்து வருவது தீ;அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர், மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள். இவைகள் இல்லாமல் உலகம் இல்லை, உயிர்களும் இல்லை என்பதை பழந்தமிழர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
ஐந்து வகை மண்
பொதுவாக தமிழ்நாட்டில் ஐந்து வகையான மண் காணப்படுகிறது. அவை, செம்மண், வண்டல் மண், கரிசல் மண், சரளை மண், மணல் கலந்த மணல்.
செம்மண் எல்லா கனிமங்களையும் உள்ளடக்கிய வளமான மண் தாவரங்கள் வளர்ச்சிக்கு உகந்த மண் அனைத்து தாவரங்களும் இதில் வளரும்.
செம்மண் என்பது வளம்மிக்க மண்ணாக கருதப்படுகிறது காரணம் அதில் உள்ள நுண்ணுயிர் சத்துக்கள். சிவப்பு மண் நிறத்திற்கு காரணம் அயன் ஆக்சைடு [iron oxide] நிறைந்து இருப்பதால்தான்.
வண்டல் மண் நமது டெல்டா மாவட்டங்களில் காணப்படுகிறது கரும்பு வாழை தென்னை நெல் அதிகம் பயிரிடப்படும்.
கரிசல் மண் விருதுநகர் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகிறது, பருத்தி, மிளகாய் கடலை பயிரிடப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு மண்ணிற்கு ஏற்ற பயிர்கள் அதன் கனிம வளத்தை கருத்தில் கொண்டு தான் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
நல்ல மண் என்பது 20 முதல் 30 சதவீதம் நீரும் 20 முதல் 30 சதவீதம் வாயுக்களும் 45% கனிமமும் 5 சதவீதம் நுண்ணுயிர் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்.
நமது இந்திய அரசு பிப்ரவரி 19 ஆம் நாளை சாயில் ஹெல்த் கார்டு நாள் [soil health card day] என ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி விவசாயிகள் மண் பரிசோதனை ஊக்குவிக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நாள் மண்ணின் தன்மை என்ன, மண் எந்த அளவுக்கு வளம் இழந்திருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விவசாய மக்களுக்கு பரிந்துரைக்கிறது.
மண்வளம் அழிவு
மண் சீர்கேட்டுக்கு காரணம் மண் அரிப்பு, வேதி உரங்கள் பயன்பாடு, பூச்சிக்கொல்லிகள், தொழிற்சாலை கழிவுகள், அதிக கால்நடை மேய்த்தல், கடல் நீர் உள்ளே வருதல், பிளாஸ்டிக் பயன்பாடு, மரங்கள் அழிக்கப்படுதல், காடு வளம் குறைதல், மழைநீர் சேகரிப்பின்மை, குளங்கள் நீர்நிலைகள் அழிவு.
பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை குறைத்து இயற்கை விவசாயத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும் ஒரே நாளில் இது நிகழ்ந்து விடாது.
140 கோடி மக்கள் வாழும் இந்த பெருநாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும்.
ஒரே நாளில் இதை செய்கிறேன் என்று களத்தில் இறங்கிய இலங்கையின் நிலையும் நாம் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
செயற்கை ரசாயன உரங்களுக்கு மாற்றாக நம் மண்ணில் இயற்கை பாக்டீரியாவை வளரச் செய்து அதன் மூலம் தாவரங்களுக்கு தேவையான உரசத்துக்களை கொடுக்கும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளோரோசென்ஸ், போன்ற நுண்ணுயிர் நிறைந்த இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.
விலையும் குறைவு நிலமும் கெட்டுப் போகாது நீண்ட நாள் பலன் தரும். விவசாய நில ஓரங்களில் மரங்கள் வளர்ப்பதை வணிக மரங்கள் வளர்ப்பதை அதிகப்படுத்தலாம் இதனால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் மண் வளமும் மேம்படும். இன்றும் கூட குளங்கள் கண்மாய் ஓரங்களில் பனை மரங்கள் வளர்ந்து நிற்பதை பார்த்திருப்போம்.
அதன் காரணம் பனை மரங்கள் ஆயிரக்கணக்கான சல்லி வேர்களைக் கொண்டது இந்த சல்லி வேர்கள் பூமியை கொஞ்சம் கொஞ்சமா ஊடுருவி மண்ணில் உள்ள நீரை பூமிக்குள் அனுப்பி பூமிக்குள் நீரை விதைக்கின்றன, அந்த நீர்தான் நாம் இன்றும் பெற்றுக் கொண்டிருக்கும் நிலத்தடி நீர், இதை கருத்தில் கொண்டு பனைமரம் வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.
மைக்ரோ பிளாஸ்டிக்
நமது பயன்பாடுகளில் பிளாஸ்டிக் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது இருப்பினும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கையாவது நாம் குறைக்க வேண்டும் கடைகளில் “கேரி பேக்” கேட்பதை அசிங்கமாக நினையுங்கள்.
பிளாஸ்டிக் மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும் என்பது தங்களுக்கு தெரிந்தது தான். அதில் ஒரு முக்கிய விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும் இந்த பிளாஸ்டிக் மக்கும் போது சிறுசிறு துகள்களாக மாறுகின்றன இவை மைக்ரோ பிளாஸ்டிக் [nano plastic particle] என அழைக்கப்படும்.
இவை 5 மில்லி மீட்டருக்கு குறைவானவை இவை மண்ணில் இருந்து தாவரங்களுக்கு செல்கின்றன, தாவரங்களிலிருந்து மனிதனுக்கு வந்தடைகின்றன. மனிதனின் இரத்த ஓட்டத்தில் இவை கலந்திருக்கின்றன தாய்ப்பாலிலும் ஊடுருவி குழந்தையைச் சென்றடைகின்றன. இதன் மூலம் மனிதனின் வளர்ச்சியையும் அவனது நாளமில்லா சுரப்பிகளின் [ENDOCRINE] செயல்பாடுகளை மாற்றி மனிதனின் சந்ததிகள் உருவாக்கத்தை தடை செய்யலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு கேடு தரும் பிளாஸ்டிக் நாம் பயன்படுத்தலாமா?
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’
நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளையும் இந்த பூமி தாங்கிக் கொண்டே இருக்கிறது ‘தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமி’
என அழகாக சொல்லி இருப்பார் வள்ளுவர்.
கொஞ்சம் மாறுவோம்.
பூமித்தாயை பாதுகாப்போம்.
source https://www.vikatan.com/environment/policy/world-soil-day-why-should-we-protect-soil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக