உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தரம்வீர். 52 வயதான இவர் தினமும் காய்கறி விற்று பிழைப்பு நடத்திவருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், மூன்று மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். போஜ்பூர் கிராமத்தில் இவர்கள் ஒன்றாக வசித்துவருகின்றனர். தேநீர் பிரியரான தரம்வீர், ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு முறையாவது தேநீர் அருந்துவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் காலையில் எழுந்ததும், தன் மனைவியிடம் தேநீர் போட்டுத்தருமாறு தரம்வீர் கூறியிருக்கிறார். உடனே, அவரின் மனைவி சுந்தரியும், மாடியிலுள்ள சமையலறைக்குச் சென்று தேநீர் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார். ஐந்து நிமிடம் கழித்து மாடியிலுள்ள சமையலறைக்குச் சென்று தரம்வீர் தேநீர் கேட்டபோது, இன்னும் பத்து நிமிடம் ஆகும் என சுந்தரி கூறியிருக்கிறார். தேநீர் போட இவ்வளவு நேரமா என அங்கிருந்த பொருள்களையெல்லாம் காலால் எட்டி உதைத்த தரம்வீர், கீழே இறங்கி வீட்டிலிருந்த வாளை எடுத்துக்கொண்டு வந்து, தேநீர் போட்டுக்கொண்டிருந்த சுந்தரியை பின்னாலிருந்து வெட்டினார்.
வலி தாங்காமல் சுந்தரி துடிதுடித்து அழ, தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு எழுந்து மாடிக்கு ஓடிவந்து தாயைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், தரம்வீர் தன் குழந்தைகள் மீதும் வாளை வீச முயல, அச்சத்தில் குழந்தைகள் தங்கள் அறைக்குள் ஓடினர். அதிக ரத்தம் வெளியேறியதால் சுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவர்களின் மகன் போலீஸுக்குப் போன் செய்து இதுபற்றி கூறினான். உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், தாங்கள் வரும்வரை சுந்தரியின் உடலின் அருகிலேயே அழுதுகொண்டிருந்த தரம்வீரை கைதுசெய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சுந்தரியின் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன்கீழ் (கொலை) தரம்வீர் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தரம்வீர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தின் முழு விவரத்தையும், டி.சி.பி (கிராமப்புற) விவேக் யாதவ் ஊடகத்திடமும் விவரித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/crime/uttar-pradesh-husband-kills-his-wife-for-make-tea-late-police-arrested-him
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக